கர்நாடகா முதல்வரிடம் பேசி மேகதாது திட்டத்தை ராகுல் காந்தி நிறுத்த வேண்டும் - சொல்கிறார் அன்புமணி

மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தைக் கைவிட கர்நாடக அரசை வலியுறுத்தி ஒகேனக்கலில் தொடங்கி பூம்புகார் வரை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி பரப்புரை பயணம் சென்று கொண்டிருக்கிறார்.

பரப்புரை விளக்க பிரசுரம் வழங்கும் அன்புமணி

கர்நாடக காங்கிரஸ் அரசில் டி.கே.சிவகுமார் முதலமைச்சர் ஆன பிறகு காவிரியில் மேகதாது அணை கட்டத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இதை தமிழக விவசாயிகள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், தமிழக அரசு உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தைக் கைவிட கர்நாடக அரசை வலியுறுத்தி காவிரி ஆறு தமிழ்நாட்டில் நுழையும் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பிலிகுண்டுலுவில் ஜூலை 1 ஆம் தேதி பரப்புரையைத் தொடங்கி பென்னாகரம், தருமபுரியிலும், 2 ஆம் தேதி சேலம், மேட்டூர், பவானி, ஈரோட்டிலும், 3 ஆம் தேதி திருப்பூர், கரூர், திருச்சியிலும், 4 ஆம் தேதி தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறையிலும் பரப்புரை செய்துவிட்டு பூம்புகாரில் நிறைவு செய்து அங்கு நடக்கும் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

பரப்புரைக் கூட்டத்தில் சௌமியா அன்புமணி
பரப்புரைக் கூட்டத்தில் சௌமியா அன்புமணி

பரப்புரை பயணம் செல்கின்ற ஊர்களில் பாமகவினரும், விவசாயச் சங்கத்தினரும் வரவேற்பு அளித்தார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் நடந்த பரப்புரையின்போது தருமபுரி எம்.எல்.ஏ-வான சௌமியா கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், "தமிழ்நாட்டின் உயிர்நாடி காவிரி ஆறுதான், 11 மாவட்ட விவசாயிகள் காவிரியை நம்பி உள்ளனர். காவிரி ஆற்றால் ஐந்தரைக்கோடி மக்கள் பலனடைகிறார்கள். ஆனால், தற்போது கழிவு நீர் மட்டும்தான் இங்கு ஓடுகிறது. இதற்கு மேல் மேகதாதுவில் அணை கட்டிவிட்டால் அந்த உபரிநீர்கூட தமிழ் நாட்டிற்கு வராது.

பெங்களூருக்கு 10 டி.எம்.சி தண்ணீர் போதும். பிறகு எதற்காக 70 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கும் வகையில் மேகதாதுவில் அணையைக் கட்ட திட்டமிடுகிறார்கள். தற்போது மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள இடம் 12.500 ஏக்கர் அடர்த்தியான வனப்பகுதி.

யானை, புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கும் வனத்தை அழித்துவிட்டு அணை கட்டிவோம் என்று சொல்வது சுற்றுச்சூழலுக்கு எதிரானது. அங்கு பெரிய அணையைக் கட்டினால் பெங்களூரு பகுதியில் பெரிய பூகம்பம் வரும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

காவிரி ஆறு நுழையும் இடத்தில் அன்புமணி-சௌமியா
காவிரி ஆறு நுழையும் இடத்தில் அன்புமணி-சௌமியா

கர்நாடகத்தில் 2028-ம் ஆண்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அந்த மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார் அரசியல் ரீதியாக மக்களைத் தூண்டி விட்டு வருகிறார். கர்நாடக அரசின் இந்தச் செயலை தமிழக அரசு சட்டரீதியாகச் செயல்பட்டு முறியடிக்க வேண்டும்.

மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டப்பட்டால் அது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பேரிடர் ஆகும். நம்முடைய நோக்கம் மேகதாதுவில் கர்நாடகா அணையைக் கட்டக்கூடாது என்பதுதான். காவிரி விவகாரம் சம்பந்தமாக ஏற்கனவே உள்ள நடுவர் மன்றமே போதுமானது. புதிய நடுவர் மன்றம் தேவையில்லை.

அன்புமணி

மேகதாது பகுதியில் கர்நாடகா அணையைக் கட்டி விட்டால் விவசாயம் பெருமளவுக்குப் பாதிக்கப்படும். டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும்.

கர்நாடகாவில் தேசியக் கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்து வருகிறார்கள். மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கர்நாடகத்திற்கு ஆதரவாகவெ செயல்படுகிறார்கள்.

நமக்கு இருக்கக் கூடிய ஒரே வாய்ப்பு நீதிமன்றமும், பசுமை தீர்ப்பாயமும்தான். இந்தப் பிரச்னையில் கர்நாடக முதலமைச்சரிடம் பேசி மேகதாது திட்டத்தை நிறுத்த காங்கிரஸ் தலைவர் ராகுல காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.