நெரிசலில் தவித்த உயிர்... ஓடும் பேருந்திலிருந்து குதித்து காப்பாற்றிய தேவதைகளின் நெகிழ்ச்சி சம்பவம்!

சாலைகளில் போக்குவரத்து நெரிசல் என்பது நமக்கு எரிச்சலையும் தாமதத்தையுமே தந்து பழகியிருக்கிறது. ஆனால், அதே நெரிசலில் ஒரு மனிதனின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தபோது, இரண்டு செவிலியர்கள் காட்டிய அசாத்திய துணிச்சலும் மனிதாபிமானமும், இன்று ஒரு குடும்பத்தின் நம்பிக்கையை மீட்டுக்கொடுத்திருக்கிறது.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள இந்த நெகிழ்ச்சியான சம்பவம், மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறது.

ஒக்கல் அடுத்த தன்னிப்புழா பகுதியில் லாட்டரி கடை நடத்தி வரும் 43 வயதான சினோஜ் என்பவருக்குத் திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர், தனியாகவே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

ஹார்ட் அட்டாக்

ஆனால் விதி, காலடி பாலம் அருகே எம்.சி சாலையில் போக்குவரத்து நெரிசல் என்ற ரூபத்தில் அவரைச் சூழ்ந்தது. வாகனங்கள் நகர முடியாமல் ஸ்தம்பித்த நிலையில், வலியின் வேதனை தாங்க முடியாமல் சினோஜ் காரினுள்ளேயே சுருண்டு விழுந்தார்.

மரணத்தின் பிடியில் ஒரு மனிதன் தவித்துக் கொண்டிருப்பதை அந்த வழியாக வந்தவர்கள் கவனித்து சத்தமிட, அங்கே ஒரு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில், அந்தப் பாதையில் வந்த கேரள அரசுப் பேருந்தில் அங்கமாலி எல்.எஃப் மருத்துவமனையின் பணியாளர் அஞ்சலி பைஜூ மற்றும் பெங்களூருவில் செவிலியர் பயிலும் மாணவி ஆர்த்ரா ராஜ் ஆகிய இருவர் பயணித்துக் கொண்டிருந்தனர்.

சாலையோரம் ஏற்பட்ட அசாதாரண கூட்டத்தையும், காரின் உள்ளே மயங்கிக் கிடந்த நபரையும் பார்த்த அடுத்த நொடி, அவர்கள் இருவரும் தங்களின் பயணத்தைப் பற்றி யோசிக்கவில்லை. ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் இருந்தபடியே கீழே குதித்தனர். கூட்டத்தை விலக்கிக்கொண்டு காரை நோக்கி ஓடினர்.

சினோஜுக்கு இதயத் துடிப்பு நின்று போவதை உணர்ந்த அஞ்சலியும் ஆர்த்ராவும், ஒரு நொடியும் தாமதிக்காமல் அங்கேயே அவருக்கு முதலுதவியான சி.பி.ஆர் (CPR) சிகிச்சையை அளிக்கத் தொடங்கினர்.

நெரிசலில் கார் சிக்கியிருந்தாலும், சினோஜின் மூச்சு நின்றுவிடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். காரின் உள்ளேயே அமர்ந்து கொண்டு, மருத்துவமனைக்குச் செல்லும் வரை இடைவிடாது அவருக்கு சி.பி.ஆர் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.

கேரள செவிலியர்கள்
கேரள செவிலியர்கள்

அவர்களின் இந்த ஓயாத போராட்டத்திற்குப் பலன் கிடைத்தது. அங்கமாலியில் உள்ள மருத்துவமனையை கார் சென்றடைந்தபோது, சினோஜின் இதயம் மெதுவாக மீண்டும் துடிக்கத் தொடங்கியிருந்தது. "அவர்கள் சரியான நேரத்தில் அந்த முதலுதவியைச் செய்யவில்லை என்றால், சினோஜை நாங்கள் உயிருடன் மீட்டிருக்க முடியாது" என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த உயிர்காப்புப் போராட்டத்தில் அந்தப் பகுதி பொதுமக்களின் பங்களிப்பும் நெகிழ வைப்பதாக இருந்தது. சினோஜுக்கு நெஞ்சுவலி என்பதை அறிந்ததும், அடையாளம் தெரியாத வழிப்போக்கர் ஒருவர் உடனடியாக காரை மருத்துவமனைக்குச் செலுத்தினார். மற்ற பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலைச் சீரமைத்து, கார் தடையின்றிச் செல்ல வழிவகை செய்ததுடன், ஆம்புலன்ஸுக்கும் ஏற்பாடு செய்தனர்.

தற்போது சினோஜுக்கு இதயத் தமனியில் இருந்த அடைப்பு நீக்கப்பட்டு, அவசர ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் மேல் சிகிச்சைக்காக உயர் மருத்துவமனைக்கு மாற்றப்படவுள்ளார்.

தங்களின் உயிரையும் பொருட்படுத்தாது ஓடும் பேருந்தில் இருந்து குதித்து, ஒரு மனிதனின் உயிரைக் காத்த அந்த இரு செவிலியர்களுக்கும், கைகொடுத்த பொதுமக்களுக்கும் கேரளா முழுவதும் இருந்து பாராட்டுகள் மழையெனக் குவிந்து வருகின்றன. அவர்கள் காட்டியது வெறும் வேகம் மட்டுமல்ல, ஒரு குடும்பத்தைக் காத்த பேரன்பு!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.