Bhagyaraj: தாத்தா சாமிகிட்ட போயிட்டார்னு அவருடைய பேரன் பூஜை அறையில் தேடினான்! - பார்த்திபன் பேட்டி

இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜின் மறைவு தமிழ் திரையுலகிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாக்யராஜின் இறுதிச் சடங்கிற்கான வேலைகள் அனைத்தையும், அவருடைய சீடரான பார்த்திபன் முன் நின்று கவனித்துக் கொண்டார்.

பாக்யராஜிடம்தான், பார்த்திபன் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அன்று முதல் அத்தனை நெருக்கமான பாக்யராஜுடன் பயணித்து வந்த பார்த்திபனை, இச்சம்பவம் பெரிதும் பாதித்தது.

பாக்யராஜ் மறைவு குறித்தும், அவருடனான நினைவுகள் குறித்தும் நம் சினிமா விகடன் சேனலுக்கு அளித்த பேட்டியில் பார்த்திபன் பகிர்ந்துகொண்டார்.

Bhagyaraj

அவர் பேசுகையில், "எங்கள் இயக்குநர் கே.பாக்யராஜ் சார் கொடுத்த நம்பிக்கைதான் என் தந்தை நிம்மதியாகக் கண்மூடக் காரணமாக இருந்தது. பொதுவாக, மரண தருவாயில் இருக்கும் எந்தவொரு தந்தைக்கும் நமக்குப்பின் நம் மகன் என்ன ஆவான்? என்ற கவலை இருக்கவே செய்யும்.

ஆனால், அதையெல்லாம் தாண்டி, என்றாவது ஒரு நாள் என் மகன் ஒரு நல்ல நிலைக்கு வருவான் என்ற மிகப்பெரிய நம்பிக்கையை என் தந்தைக்குள் விதைத்தவர் பாக்யராஜ் சார். நான் அவரிடம் உதவியாளராகச் சேர்வதற்கு முன்பு டப்பிங் பேசுவது, தொலைக்காட்சி நாடகங்களில் நடிப்பது எனப் பல வேலைகளைச் செய்துகொண்டிருந்தேன்.

அப்போது என் மீது என்னுடைய தந்தைக்குக் கவலை இருந்தது. என் தந்தை உடலநலம் பாதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில்தான் நான் பாக்யராஜ் சாரிடம் போய் சேர்ந்தேன். அவரிடம் சேர்ந்தாலும் தாவணிக் கனவுகள் திரைப்படத்தில் நான் 11-வது உதவி இயக்குநராகத்தான் சேர்ந்தேன். நான் சீக்கிரமாக ஹீரோவாகவோ, இயக்குநராகவோ ஆகிவிட வேண்டும் என்கிற சூழ்நிலையில்தான் அப்படத்தில் போஸ்ட்மேன் கதாபாத்திரம் ஒன்றில் பாக்யராஜ் சார் என்னை நடிக்க வைத்தார்.

என் தந்தையின் புற்றுநோய் பாதிப்பு குறித்தோ, நான் அனுபவித்து வந்த குடும்பக் கஷ்டங்கள் குறித்தோ அவரிடம் நான் எதையும் விளக்கவில்லை. அப்போது எனக்குக் கிடைத்த சம்பளம் வெறும் ரூ.300 மட்டும்தான். அதில் ரூ.270 தந்தையின் மாத்திரைகளுக்கே செலவாகிவிடும். மீதமுள்ள ரூ.30-ஐ வைத்துக்கொண்டு நானும், என் அம்மா, அப்பா, தம்பி என நான்கு பேரும் முப்பது நாட்களும் சாப்பிட வேண்டும்.

Parthiban About Bhagyaraj
Parthiban About Bhagyaraj

முன்னேற வேண்டும் என்ற மனநிலையுடன் இரவும் பகலும் அழுதுகொண்டே உழைப்பேன். பார்த்திபன் இப்படி உடைந்து அழுது யாரும் பார்த்ததில்லை என்று இப்போது பலரும் சொல்கிறார்கள். யாரும் பார்க்கவில்லை என்பதைத் தவிர, நான் பல நாட்கள் தனிமையில் உடைந்து அழுதிருக்கிறேன். நான் மிகவும் சென்சிட்டிவ்வான ஒருவன்தான்.

என் நிலைமையைப் பற்றிப் புரிந்துகொண்ட பாக்யராஜ் சார், எனக்கு அந்தப் போஸ்ட்மேன் வாய்ப்பை அளித்தார். என் தந்தையும் அதனைப் பார்த்தார். நிறைய பத்திரிகைகளில் என்னைப் பாராட்டி விமர்சனங்கள் வந்தன. அதைப் பார்த்து என் தந்தை அடைந்த சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை.

மரண தருவாயில் இருந்த அவருக்கு அந்த நிம்மதியைத் தந்த என் இயக்குநருக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தவித்தேன். ஒருநாள் என் தந்தையை அவரிடம் அழைத்துச் சென்று நன்றி கூறினோம். என் தந்தை மிகவும் கம்பீரமானவர், எளிதில் கண் கலங்காதவர்.

ஆனால் அன்று கலங்கினார். என் மகனை உங்களிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறேன் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது. அதன் பிறகு சில நாட்களில் என் தந்தையும் காலமாகிவிட்டார். தந்தை இறந்த மூன்றாம் நாளே நான் இயக்குநரின் அலுவலகத்திற்குச் சென்று கீழே நின்றேன். மாடியிலிருந்து என்னைப் பார்த்த இயக்குநர், அவனை வீட்டுக்குப்போகச் சொல்லுங்கள் என்றார்.

Parthiban About Bhagyaraj
Parthiban About Bhagyaraj

தந்தை இறந்ததற்காக 13 நாட்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்கிற சடங்குகளை விட, என் இயக்குநரின் அருகில் இருப்பதுதான் எனக்கு முக்கியமாகத் தெரிந்தது. ஆனால், என்னைப் பார்த்தால் அவரும் உணர்ச்சிவசப்பட்டுவிடுவார் என்பதால், ஒரு வாரம் கழித்து வரச்சொல்லுங்கள் என என்னைத் தவிர்த்தார். நானோ மறுநாளும் பிடிவாதமாகப் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றேன்.

அலுவலகத்தில் எங்களுக்கிடையே எப்போதாவது முரண்பாடுகள் வரும்போது, நான் அவருக்குக் கடிதம் எழுதுவேன். ஒருமுறை அவர், இனி எனக்குக் கடிதம் எழுதாதே, அதைப் படிக்கும்போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றார். அந்த அளவிற்கு உருக்கமாக எழுதுவேன். அதற்குப் பிறகு நான் எழுதிய ஒரு கடிதத்தில், இது கடிதமல்ல, என் உயில் என்று குறிப்பிட்டிருந்தேன்.

அதன்பின், அவருடைய சொந்தப் படத்தை நான் இயக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், அவருக்குக் கீழ் இருந்தவர்கள் பட்ஜெட் காரணத்தைச் சொல்லிச் சில நெருக்கடிகளை உண்டாக்கினார்கள். பொருளாதார ரீதியாக அவர்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் நான் என் இயக்குநரிடம் விவரித்த பிரம்மாண்டமான கதையை அப்படிச் சுருக்க எனக்கு உடன்பாடில்லை.

பிறகு அந்தப் படத்திலிருந்து நான் வெளியேறினேன். அவரை விட்டுப் பிரிந்திருந்த அந்தச் சமயத்தில், என் தாயின் மூக்குத்தியை விற்று, தினத்தந்தி நாளிதழில் ஒரு விளம்பரம் கொடுத்தேன். அதைப் பார்த்து நெகிழ்ந்துபோன இயக்குநர், என்னை அழைத்து வரச் சொன்னார். நான் அவரிடம் செல்லும்போது, அவருடைய தயாரிப்பில் நான் மீண்டும் படம் இயக்க மாட்டேன் என்ற ஒரே ஒரு நிபந்தனையுடன் தான் சென்றேன்.

Parthiban About Bhagyaraj
Parthiban About Bhagyaraj

அவர் என்னைப் பார்த்து, முன்பு நடந்ததை மறந்துவிடு, நீ படம் இயக்க வேண்டாம், எப்போது வேண்டுமானாலும் என்னிடம் வா என்றார். பாக்யராஜ் சார் அவருடைய பேரனிடம் ரொம்பவே பாசமாக இருப்பார். பேரனும் தாத்தாவும் காரில் வாக்கிங் செல்வார்கள். பாக்யராஜ் சார் மறைந்த பிறகு, அந்தச் சிறுவனிடம் தாத்தா சாமியிடம் சென்றுவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

அதற்கு அந்தச் சிறுவன் பூஜை ரூமிற்குச் சென்று தேடிப் பார்த்திருக்கிறான். பாக்யராஜ் சாருக்காக நான் இறுதிச் சடங்கு நிகழ்வில் முன்நின்றது குறித்துப் பலரும் தவறான கமெண்ட்களைப் பதிவிட்டார்கள். அனைத்தையும் நீதான் முன்னின்று செய்ய வேண்டும் என நினைக்கிறாய். நீ இறந்துபோனால் யாரும் வந்து பார்க்கமாட்டார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். அவையெல்லாம் என்னை மிகவும் காயப்படுத்தின." என்றார் வேதனையுடன்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.