PF: இனி ரூ.1,800-க்கு மேல் பிடித்தமாக செய்தாலும், உங்க விருப்பம் தேவை! - தெரிந்து கொள்ளுங்கள்
கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு, இ.பி.எஃப் திட்டம் 1952-ஐ மாற்றி, சமூக பாதுகாப்புச் சட்டம் 2020-ன் கீழ் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம் 2026-ஐ அறிவித்துள்ளது மத்திய அரசு.
புதிய திட்டம் குறித்த விளக்கத்தை வினா-விடையாக இங்கே பார்க்கலாம்.
என்னது... இனி மாதத்திற்கு ரூ.1,800 மட்டும் தான் பி.எஃப் பிடித்தமா?
ஒருவருக்கு அடிப்படை சம்பளம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் சரி, மத்திய அரசு நிர்ணயித்துள்ள ரூ.15,000-க்கு தான் நிறுவனங்கள் பி.எஃப்பிற்காக 12 சதவிகிதம் பிடித்தம் செய்ய முடியும்.
அதாவது, மாதத்திற்கு ரூ.1,800 மட்டுமே கட்டாயப் பிடித்தம் செய்ய முடியும். அதற்கு மேல், செலுத்தப்படும் எந்தவொரு தொகையும் ஊழியரின் விருப்பப் பங்களிப்பாக (Voluntary) மட்டுமே கருதப்படும்.
இது புதிய திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மிக முக்கிய மாற்றம் ஆகும்.
ஊழியர்கள் ரூ.1,800-க்கு மேல் பி.எஃப்பிற்கு பங்களிப்பு செய்தால், நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை அதிகரிக்க வேண்டுமா?
மேலே குறிப்பிட்டுள்ளது படி, ரூ.1,800-க்கு மேலான எந்தவொரு தொகையும் ஊழியரின் விருப்பப் பங்களிப்பு தான். அதனால், ஊழியர்கள் விருப்பப்பட்டு அதிகரிக்கும் பங்களிப்பிற்கு இணையாக நிறுவனங்களும் கூடுதல் தொகையைச் செலுத்த வேண்டும் என்கிற எந்தவொரு கட்டாயமும் இல்லை.

அப்போது இனி சம்பளத்தில் பி.எஃப் பிடித்தம் குறைக்கப்படுமா?
இந்தக் கேள்விக்கான பதிலை இரண்டு உதாரணங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
முதல் உதாரணம்: ராஜா என்பவருக்கு ரூ.15,000 தான் அடிப்படை சம்பளம் என்று வைத்துக்கொள்வோம். புதிய சட்டத்தின் படி, ராஜாவிற்கு சம்பளத்தில் 12 சதவிகிதமான ரூ.1,800 பி.எஃப்பிற்காக பிடிக்கப்படும்.
அதனால், ராஜாவிற்கு பி.எஃப் பிடித்தத்தில் எந்த மாற்றமும் இருக்காது.
இரண்டாவது உதாரணம்: ராமுவிற்கு அடிப்படை சம்பளம் ரூ.30,000 என்று வைத்துக்கொள்வோம். இந்த ரூ.30,000-க்கு அவரது நிறுவனத்தில் 12 சதவிகிதம் பி.எஃப் பிடித்தம் செய்யப்படுகிறது. அது ரூ.3,600.
ராமு ரூ.1,800-க்கு மேல் கொடுக்க விருப்பமில்லை என்றால், அவருக்கு இனி பி.எஃப் பிடித்தம் ரூ.1,800-க்கு குறைக்கப்பட்டு விடும்.
ஆக, இனி ரூ.15,000 அல்லது அதற்கு மேல் அடிப்படை சம்பளம் கொண்ட ஊழியர்களுக்கு ரூ.1,800 பி.எஃப் பிடித்தம் செய்யப்படும். அதற்கு மேலான, பி.எஃப் பிடித்தம் அவர்கள் விரும்பினால் மட்டுமே முடியும். விருப்பம் இல்லை எனில், அது சம்பளத்தில் சேர்த்து வரவு வைக்கப்படும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


