IPL Trade : லேட் என்ட்ரி கொடுத்த சென்னை... பாண்ட்யா டிரேடிங்கில் திடீர் திருப்பம்?! | CSK
2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் படுதோல்விக்குப் பிறகு, அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அணியிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளார் என்கிற தகவல் கடந்த சில நாள்களாகவே பேசப்பட்டு வருகிறது.
இந்த தகவல் வெளியானதிலிருந்து, ஐபிஎல் டிரேடிங் உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியிலிருந்து விலகும் இந்த 32 வயது ஆல்-ரவுண்டரை தங்கள் அணிக்குக் கொண்டுவர பிற அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள தகவலின்படி, பாண்ட்யாவைக் கைப்பற்றும் போட்டியில் இதுவரை ஏழு அணிகள் ஆர்வம் காட்டியுள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) ஆகிய அணிகள் மட்டுமே இந்தப் போட்டியில் இருந்து விலகி உள்ளன.
சிஎஸ்கே-வின் திடீர் என்ட்ரி!
இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தாமதமாகக் களமிறங்கினாலும், தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்குக் கடுமையான போட்டியை உருவாக்கியுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் இந்த ரேஸில் தொடர்ந்து நீடிக்கிறது. எம்.எஸ். தோனிக்கு பிறகான ஒரு காலகட்டத்திற்கு, சிஎஸ்கே அணிக்கு ஹர்திக் பாண்ட்யா ஒரு சரியான தேர்வாகக் கருதப்படுகிறார். இருப்பினும், அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
மறுபுறம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு புதிய கேப்டனைத் தேடி வருகிறது. அதேபோல, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பாண்ட்யாவுக்கு கேப்டன் பதவியுடன் நீண்ட கால ஒப்பந்தத்தையும் வழங்கத் தயாராக உள்ளது. இவ்வளவு பெரிய அணிகள் தங்கள் கேப்டன் மீது ஆர்வம் காட்டும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி யாருடன் டிரேட் செய்யும் விரும்பும் என்பதும் கவனிக்க வேண்டியதாக உள்ளது
டிரேடிங்கில் உள்ள சிக்கல்கள்!
தற்போது மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மூன்று தரப்பினரும் இதுவரை எதையும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பலவிதமான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. இது முழுக்க முழுக்க பணப் பரிமாற்றமாக இருக்குமா? அல்லது சிஎஸ்கே எந்த வீரரை விட்டுக் கொடுக்கும்? கொல்கத்தா அணியிடம் வர்த்தகம் செய்யக்கூடிய மதிப்புமிக்க வீரர்கள் இருக்கிறார்களா? அல்லது கடந்த ஆண்டு கே.எல். ராகுல் விஷயத்தில் ஏற்பட்டது போன்ற இழுபறி நீடிக்குமா? எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன.
கடந்த சீசனில் சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் சம்பந்தப்பட்ட பிளாக்பஸ்டர் டிரேடிங்கின் போது சிஎஸ்கே எப்படித் திட்டமிட்டு நுழைந்ததோ, அதேபோல பாண்ட்யா விஷயத்திலும் சரியான நேரத்திற்காகக் காத்திருந்து காய்நகர்த்தியுள்ளது. சிஎஸ்கே இதனை சாத்தியப்படுத்தும் நிலையில், இந்த டிரேடிங்கின் போக்கையே அது மாற்றக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
பாண்ட்யாவின் விருப்பமும், மும்பையின் நெருக்கடியும்!
எல்லாவற்றையும் விட வீரரின் சம்மதம் மிகவும் முக்கியமானது. கேப்டன் பதவி இல்லாத ஒரு அணிக்குச் செல்ல பாண்ட்யா சம்மதிப்பாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. இப்போதைக்கு எந்தத் தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரவில்லை என்றாலும், இந்த டிரேடிங் குறித்த தெளிவான நிலவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


