தவெக MLA இளையராஜாவிடம் பேரம் பேசியது என்ன... சிக்கும் திமுக பிரமுகர்கள்? - யார் இந்த திருநாவுக்கரசு?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியின் த.வெ.க எம்.எல்.ஏ-வாக இருப்பவர் இளையராஜா. இவர், 29-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜைச் சந்தித்து புகார் ஒன்றைக் கொடுத்தார்.

அதில் யூடியூபரும் தேர்தல் வியூக அமைப்பாளருமான சென்னையைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர், தன்னை செல்போனில் சில தினங்களுக்கு முன்பு தொடர்பு கொண்டார். அப்போது அவர், மக்கள் பணியைச் செய்யக் கூடாது என்றும் அதற்காக 35 கோடி ரூபாய் வரை லஞ்சம் தருவதாகவும் கூறினார். மேலும் இந்தத் தகவலை வெளியில் சொன்னால் பிள்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டினார்.

இந்தப் புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில் எம்.எல்.ஏ இளையராஜாவை கூறிய குற்றச்சாட்டுக்கள் உண்மையென தெரியவந்தது.

இதையடுத்து யூடியூபர் திருநாவுக்கரசுவை போலீஸார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவை தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏ-வான செந்தில் பாலாஜி, அவரின் சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால் அவர்களிடமும் விசாரணை நடத்த சென்னைப் போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள்.

செந்தில் பாலாஜி

இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீஸார் கூறுகையில், `இந்த வழக்கை பொறுத்தவரை மிகவும் சென்ஸ்டிவ்வானது. அதனால் சில முக்கிய தகவல்களை வெளியில் சொல்ல முடியாது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் யூடியூபரான சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் எம்.எல்.ஏ இளையராஜாவிடம் போனில் பேசியதை உறுதி செய்திருக்கிறோம்.

அதன் அடிப்படையில்தான் அவரை நாங்கள் கைது செய்திருக்கிறோம். இவர், indian political democratic strategies (IPDS) என்ற கருத்து கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்துவிட்டு அரசியல் தொடர்பான தகவல்களை யூடியூப்பில் வீடியோவாக பேசி வருகிறார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க கட்சிக்கு அதிக சீட்கள் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பை தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில்தான் திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ் மூலம் இந்த பேரத்தில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது.

திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னையைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோரை திருநாவுக்கரசு சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது எம்.எல்.ஏ இளையராஜா உள்பட சில த.வெ.க எம்.எல்.ஏ-க்களின் பட்டியலை திருநாவுக்கரசுவிடம் கொடுத்து அவர்களிடம் பேச இந்த டீம் சொல்லியிருக்கிறது. அதன்படி திருநாவுக்கரசும் பேசியிருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

இந்த வழக்கில் தற்போது வரை மூன்று பேரை கைது செய்திருக்கிறோம். அவர்கள் அளித்த தகவலின்படி செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு வேண்டப்பட்ட இருவரைப் பிடித்து விசாரித்து வருகிறோம். அவர்கள்தான் செந்தில் பாலாஜி, அசோக்குமார் கூறியதன்பேரில்தான் இந்த பேரத்தில் ஈடுபட்ட தகவலை தெரிவித்திருக்கிறார்கள்.

சங்கிலி தொடர் போல இந்த வழக்கில் அடுத்தடுத்து தி.மு.கவைச் சேர்ந்த சில முக்கிய புள்ளிகளின் பெயர்கள் கிடைத்து வருகின்றன. அதன்அடிப்படையில் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். விசாரணைக்குப்பிறகுதான் த.வெ.க எம்.எல்.ஏ-க்களிடம் தி.மு.க தரப்பு பேரம் பேசிய முழு விவரங்கள் தெரியவரும் என்றனர்.

கைது
கைது

இதுகுறித்து திருநாவுக்கரசு தரப்பில் கேட்டதற்கு, ``அதிகாலையில் வீட்டுக்கு வந்த போலீஸ் டீம், திருநாவுக்கரசை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர்களிடம் என்ன புகார் என்று கேட்டதற்கு கூட எந்தத் தகவலையும் சொல்லவில்லை. விசாரணைக்கு அழைத்துச் சென்ற திருநாவுக்கரசுவின் செல்போன் நம்பரும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் அவரின் குடும்பத்தினருக்கு சந்தேகம் எழுந்தது.

அதனால் காவல் கட்டுப்பாட்டறைக்கு போன் செய்து தகவலைத் தெரிவித்தனர். அதன்பேரில் அரும்பாக்கம் போலீஸார், திருநாவுக்கரசுவின் மனைவியிடம் விசாரணை நடத்தினர். பின்னர்தான் திருநாவுக்கரசு, த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜாவை மிரட்டியதும் அவரிடம் கட்சி மாற பேரம் பேசிய தகவலும் தெரியவந்தது.

திருநாவுக்கரசு குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் அவரின் குடும்பத்தினர் மனஉளைச்சல் அடைந்தனர். இந்த வழக்கு ஒரு ஜோடிக்கப்பட்டதாகும். நீதிமன்றத்தில் எல்லா உண்மையும் வெளிவரும். இளையராஜாவிடம் திருநாவுக்கரசு போனில் பேசியதை மட்டுமே ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. பணம் பேரம் பேசியதற்கான ஆதாரங்கள் என்ன என்பதை நீதிமன்றத்தில் போலீஸார் விளக்க வேண்டும். அதோடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் திருநாவுகரசுவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது" என்கிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.