`ஒரு இன்ஸ்டா ஸ்டோரி, 5 வருட தடை! கேத்தன் கொலையை கிண்டலடித்த பெண் மருத்துவரால் சர்ச்சை

மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கேத்தன் அகர்வால் கொலை வழக்கில், அவரது மரணத்தைக் கிண்டல் செய்து இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிட்டதாகக் கூறப்படும் பல் மருத்துவர் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்து அகில இந்திய பல் மருத்துவ மாணவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் (AIDSA) அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பல் மருத்துவரான டாக்டர் முஸ்கான் சோனி, அகில இந்திய பல் மருத்துவ மாணவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளராகப் பதவி வகித்து வந்தார். சமீபத்தில் கொலை செய்யப்பட்ட கேத்தன் அகர்வாலின் மரணம் குறித்து இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவதூறான மற்றும் அவமரியாதையான கருத்துக்களைப் பதிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது சமூக வலைதளங்களில் பெரும் கண்டனத்தைப் பெற்றது.

அந்த வீடியோவில், "அந்த புனே பையனுக்கு முடி இல்லை... இப்படிப் பொய் சொன்னால், நீங்கள் சாகத்தான் செய்வீர்கள்... அதனால் #IHateMen" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

கேத்தனுக்கு முடி உதிர்தல் பிரச்சனை இருந்ததாலும், அவர் விக் அணிந்திருந்ததாலும், அவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் முக்கிய குற்றவாளி சியா கோயல் அவரைத் திருமணம் செய்ய விரும்பவில்லை என்று வெளியான செய்திகளை மையமாக வைத்தே டாக்டர் சோனி இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

ஆனால், கேத்தனின் குடும்பத்தினர் இந்தத் தகவலை மறுத்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட கேத்தன் மற்றும் கைதான சியா கோயல்

இந்த விவகாரம் சங்கத்தின் கவனத்திற்குச் சென்ற நிலையில், அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். சங்கம் வெளியிட்ட இடைநீக்க உத்தரவில், "டாக்டர் முஸ்கான் சோனி, சங்கத்தின் அரசியலமைப்பு, நடத்தை விதிகள் மற்றும் நெறிமுறை மதிப்புகளை மீறி, மறைந்த கேத்தன் அகர்வால் குறித்து மிகவும் பொருத்தமற்ற, புண்படுத்தும் மற்றும் அவமரியாதையான கருத்துக்களை வெளியிட்டு ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, டாக்டர் சோனி சங்கத்தின் அனைத்துப் பதவிகள், பொறுப்புகள், உறுப்பினராக இருத்தல் மற்றும் அனைத்து அதிகாரப்பூர்வ பதவிகளில் இருந்தும் உடனடியாக ஐந்து ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தடைக் காலத்தில், அவர் சங்கத்தின் எந்தவொரு நடவடிக்கையிலும் பங்கேற்கவோ அல்லது பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, கேத்தன் அகர்வால் கொலை வழக்கில் காவல்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள சூழலில் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகனான கேத்தன், கடந்த ஜூன் 18 அன்று லோகாகட் கோட்டையில் வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது வருங்கால மனைவி சியா கோயல் மற்றும் சியாவின் காதலன் சேத்தன் சவுத்ரி ஆகியோர் கைது செய்யப்பட்டு காவல்துறை காவலில் உள்ளனர்.

காவல்துறை விசாரணையின்படி, ஜூன் 18 அன்று கேத்தன், சியாவை புனே-மும்பை நெடுஞ்சாலையில் இருந்து தனது காரில் அழைத்துக்கொண்டு லோகாகட் கோட்டைக்குச் சென்றுள்ளார். அங்கு காலை 10:45 மணியளவில், கேத்தனின் தாய்க்கு தொலைபேசியில் அழைத்த சியா, கேத்தன் தவறுதலாகப் பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். முதலில் இது ஒரு விபத்து என்று கருதப்பட்டாலும், கேத்தனின் குடும்பத்தினர் அடைந்த சந்தேகத்தின் பேரில் அளித்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறை விசாரணையில் இது ஒரு திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்தது.

கைதான சியா கோயல்

மேலும், கொலை நடப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே, அதே கோட்டையில் வைத்து கேத்தனைக் கொலை செய்ய சியா முயற்சி செய்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தற்போதைய விசாரணையில், சியா மற்றும் சேத்தனின் பயணப் பதிவுகளை ஆய்வு செய்து வரும் காவல்துறை, அவர்களின் உதய்பூர் பயணம் குறித்தும் விசாரித்து வருகிறது. கடந்த பிப்ரவரியில் கோலாகலமாக நடந்த கேத்தன்-சியா நிச்சயதார்த்தத்திற்குப் பின்னால் ஒரு பெரிய சதி இருந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

ஒருபுறம் கொலை வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மறுபுறம் இந்தத் துயரச் சம்பவத்தை சமூக வலைதளத்தில் கேலியாக கையாண்ட மருத்துவருக்கு விதிக்கப்பட்ட இந்தத் தடை, பொதுவெளியில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.க்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.