`புதிய சாதனைகளின் சங்கமம் - கால்பந்து வரலாற்றை மாற்றி அமைக்கும் 2026 FIFA உலகக்கோப்பைத் திருவிழா!

உலகையே ஒரே பந்தில் சுழல வைக்கும் ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பையின் விறுவிறுப்பு, 2026 ஆம் ஆண்டு புதிய சாதனைகளுடன் அரங்கேறி வருகிறது.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த உலகக்கோப்பைத் தொடர், ஆரம்பம் முதலே பல புதிய வரலாற்றுப் பக்கங்களை எழுதி வருகிறது.

வரலாற்றிலேயே முதன்முறையாக 48 அணிகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட தொடரில், மொத்தம் 104 போட்டிகள் விளையாடப்படுகின்றன. இந்த விரிவாக்கப்பட்ட புதிய ஆட்ட முறையானது கால்பந்து உலகின் பழைய சாதனைகள் பலவற்றைத் மாற்றி, யாரும் எதிர்பாராத புதிய மைல்கற்களை பதித்துள்ளது. தற்போது குழு சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தத் தொடரில் புதிய உலக சாதனை படைத்துள்ள சில முக்கிய வரலாற்றுத் தருணங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.

கால்பந்து வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரரும் செய்யாத அசாத்திய சாதனையை இந்த 2026 உலகக்கோப்பையில் மூன்று வீரர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

கில்லெர்மோ ஒச்சோவா

அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெக்சிகோ அணியின் சீனியர் கோல்கீப்பர் கில்லெர்மோ ஒச்சோவா ஆகிய மூவரும் தங்களின் 6-வது உலகக்கோப்பை தொடரில் பங்கேற்று புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

லியோனல் மெஸ்ஸி

1930-ல் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கப்பட்டதில் இருந்து, ஆறு வெவ்வேறு உலகக்கோப்பை தொடர்களுக்கான அணியில் இடம்பிடித்த வீரர்கள் என்ற சிறப்பு, இவர்களையே சேரும்.

கால்பந்து உலகின் மன்னன் என்று அழைக்கப்படும் லியோனல் மெஸ்ஸி, இந்த 2026 உலகக்கோப்பையில் கால் பதித்த தருணம் முதலே சாதனைகளைத் தன்வசமாக்கி வருகிறார்.

ரொனால்டோ

ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசேயின் சாதனையை (16 கோல்கள்) முறிடித்து, உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் (19 கோல்கள்) அடித்த வீரர் என்ற அசாத்திய சாதனையை மெஸ்ஸி தனதாக்கிக் கொண்டார்.

ஜோர்டான் அணிக்கு எதிரான போட்டியில் மாற்று ஆட்டக்காரராகக் களம் புகுந்து அவர் அடித்த அற்புதம் வாய்ந்த ஃப்ரீ-கிக் கோல் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 7 போட்டிகளில் கோலடித்த உலகின் முதல் வீரர் என்ற புதிய சரித்திர சாதனையைப் படைத்துள்ளார்.

அணிகளின் எண்ணிக்கை 32-லிருந்து 48 ஆக உயர்த்தப்பட்டதால், இந்தத் தொடரின் குழு சுற்று ஆட்டங்களிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு அதிரடியான கோல் மழை பொழிந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் துருக்கி அணிகளுக்கு இடையிலான பரபரப்பான ஆட்டத்தின் போது, அமெரிக்க டிஃபென்டர் ஆஸ்டன் ட்ரஸ்டி அடித்த கோலின் மூலம் இந்தத் தொடரின் ஒட்டுமொத்த கோல்களின் எண்ணிக்கை 173 ஐ எட்டியது.

இதன் மூலம் 2022 கத்தார் உலகக்கோப்பையின் ஒட்டுமொத்த சாதனையான 172 கோல்கள் என்ற எல்லையை, முறியடித்து உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடிக்கப்பட்ட தொடர் என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது.

கேப் வெர்டே (Cape Verde) கால்பந்து அணி, தங்களின் அறிமுகத் தொடரிலேயே மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் மற்றும் உருகுவே போன்ற பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக ஒரு போட்டியில் கூட தோல்வியைத் தழுவாமல் அந்த அணி நாக்கவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Cape Verde

இதன் மூலம், உலகக்கோப்பையின் 96 ஆண்டுகால வரலாற்றிலேயே நாக்கவுட் சுற்றுக்குத் தகுதி பெற்ற மிகச்சிறிய நாடு என்ற புதிய உலக சாதனையை அந்த அணி அதிகாரப்பூர்வமாகப் படைத்துள்ளது.

ஜெர்மனி மற்றும் குராசோ இடையிலான ஆட்டம், உலகக்கோப்பை வரலாற்றிலேயே மிக வயதான மற்றும் மிக இள வயது பயிற்சியாளர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பாக புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

Dick Advocaat,

குராசோ அணியின் பயிற்சியாளரான 78 வயது டிக் அட்வகாட் (Dick Advocaat), உலகக்கோப்பையில் ஒரு அணியை வழிநடத்தும் மிக அதிக வயதுடைய பயிற்சியாளர் என்ற புதிய உலக சாதனையைப் படைத்தார். இவருக்கு இணையாக, ஜெர்மனி அணியை வழிநடத்திய 38 வயது ஜூலியன் நாகெல்ஸ்மேன் (Julian Nagelsmann) இத்தொடரின் மிக இள வயது பயிற்சியாளராகக் களம் கண்டார்.

லாமின் யமால் (Lamine Yamal), 2026 ஃபீஃபா உலகக்கோப்பையின் சவூதி அரேபியாவுக்கு எதிரான போட்டியில் தனது 18 ஆவது வயதில் மாபெரும் உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

உலகக்கோப்பை வரலாற்றில், 18 வயது அல்லது அதற்கும் குறைவான வயதில் ஒரு போட்டியில் தனது அணிக்கான முதல் கோலை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 1958 ஆம் ஆண்டு பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பிலே மட்டுமே இந்த இளம் வயதில் தனது அணிக்கான முதல் கோலை அடித்திருந்தார்.

தற்போது அந்தப் பட்டியலில் இணைந்துள்ள யமால், ஒட்டுமொத்த உலகக்கோப்பை வரலாற்றில் கோல் அடித்த எட்டாவது மிக இளம் வயது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் தன் வசம் எழுதியுள்ளார். !

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.