`உங்கள் தயவால்தான் அவர் முதல்வராக இருந்தார்- எஸ்.பி.வேலுமணி ஆலோசனை கூட்டத்தில் கொதித்த ஆதரவாளர்கள்

அ.தி.மு.க-வில் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்தக் கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசியதன் ஒரு சில காட்சிகளை மட்டும், இன்று அவரது ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ளனர். அந்தக் காட்சிகளில் பேசும் எஸ்.பி.வேலுமணி, “அ.தி.மு.க-வில் என்னை நம்பி வந்தவர்களை விட்டுவிட்டு பதவி வாங்க நான் தயாராக இல்லை. என்னுடன் 30 மாவட்டச் செயலாளர்கள் வந்தனர், அவர்களுக்கு பதவி கொடுக்கவில்லை. எனக்கு மட்டும் பதவி கொடுத்துவிட்டு, அவர்களை விட்டு விட்டால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? வீரமணி,  தங்கமணி, விஜயபாஸ்கர், சி.வி சண்முகம் என அனைவரும் ஜாம்பவான்கள். அவர்களுக்கு பதவி கொடுக்கவில்லை” என்கிறார்.

எஸ்.பி. வேலுமணி

இதேபோல எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் பேசும் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் பேசும் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள், “எங்களைப் போன்ற தொண்டர்களுக்கு பதவி தந்து நல்ல நிலைக்கு உயர்த்தியவர் நீங்கள். நீங்கள் நன்றாக இருந்தால், பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் நன்றாக இருக்க முடியும். அ.தி.மு.க தொண்டர்களின் உயிர் மூச்சாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும், நாங்கள் கட்டுப்படுவோம். உங்கள் தயவால்தான் எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தார். உங்களுக்கு மதிப்பு இல்லாத இடத்தில் நாங்களும் இருக்க மாட்டோம். எங்களுக்கு கட்சி முக்கியம் அல்ல, பதவி முக்கியம் அல்ல. நீங்கள்தான் முக்கியம்.

கேள்வி கேட்பவர்களுக்கு எடப்பாடியார் பதவி தருவதில்லை. தி.மு.க உடன் சேர்ந்து கொண்டு, தி.மு.க-விற்கு ஜால்ரா போட்டு கொண்டிருக்கிறார். பழைய ஆட்கள் எல்லோரையும் நீக்கினார், யாரையும் சேர்க்கவில்லை. கட்சியை நாசம் செய்துவிட்டார். அ.தி.மு.க-விற்கு சாவுமணி அடிக்காமல் எடப்பாடியார் ஓயமாட்டார். தீர்க்கமான ஒரு நல்ல முடிவை நீங்கள் எடுக்க வேண்டும். தி.மு.க-வை யார் அதிகமாக எதிர்க்கிறார்களோ, அவர்களுடன் நாம் இருக்க வேண்டும்” என்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.