Brigida: காதலரை அறிமுகப்படுத்திய நடிகை பிரிகிடா சகா; அவர் யார் தெரியுமா?

தமிழில் ஆஹா கல்யாணம் வெப் தொடரின் மூலம் பிரபலமாகி இரவின் நிழல், மாஸ்டர், அயோக்யா, இட்லி கடை, மார்கன், கருடன் உள்ளிட்ட தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் பிரிகிடா சகா.

தமிழ் தவிர்த்து தெலுங்கிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை பிரிகிடா சகா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் காதலராக ஆனந்த் ராமை அறிவித்திருக்கிறார்.

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான மீசையை முருக்கு படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு தம்பி கதாப்பாத்திரத்திலும், நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற திரைப்படத்தின் கதாநாயகனாகவும் நடித்தவர்.

நடிகை பிரிகிடா - ஆனந்த் ராம்

தன் காதல் குறித்து நடிகை பிரிகிடா சகா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``என் உலகத்தின் உன்னத நட்சத்திரத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! சின்ன வயதிலிருந்தே, ஆகச்சிறந்த அழகான காதல் கதைகள் எல்லாமே சினிமா திரையில் மட்டும்தான் இருக்கும் என்று நான் எப்போதும் நம்பி வந்தேன்.

படம் முடிந்து திரையில் பெயர்கள் ஓடி முடித்த பிறகும் கூட, நம் மனதை விட்டு நீங்காமல் இருக்குமே... அப்படிப்பட்ட காதல் கதைகள்! ஆனால், வாழ்க்கை எனக்காக வேறு ஒரு திட்டத்தை வைத்திருந்தது.

சினிமாவை நோக்கிய என் சொந்தப் பயணத்தில், எங்கோ ஒரு புள்ளியில் எனக்கான ஒருவரை நான் கண்டுகொண்டேன். என்னைப் போலவே அவருக்கும் சினிமாவில் அதே கனவு இருந்தது. அதற்கான மரியாதையும் அவரிடம் ஆழமாக இருந்தது.

என் வாழ்க்கையின் காதலாக மாறுவதற்கு முன்பே, அவர் அமைதியாக என் சிறந்த நண்பராக மாறினார். மிகவும் அழகான கதைகள் எல்லாமே எப்போதும் திரைக்காக எழுதப்படுபவை அல்ல... சில கதைகள் நிஜ வாழ்க்கையில் சாதாரணமாக வாழப்படுபவை என்பதை எனக்கு நினைவூட்டியதற்கு உங்களுக்கு நன்றி.

இதோ, எங்கள் வாழ்க்கையின் ஒரு சிறிய பகுதியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்…

நடிகை பிரிகிடா - ஆனந்த் ராம்
நடிகை பிரிகிடா - ஆனந்த் ராம்

நாங்கள் எப்போதுமே ஒருவருக்கொருவர் "ஐ லவ் யூ" (I love you) என்று சொல்லிக் கொள்ளும் மனிதர்களாக இருந்ததில்லை. அந்தப் பயணத்தில் எங்கோ ஒரு இடத்தில், அந்த வார்த்தைகள் எங்களுக்குள் வேறு ஒன்றாக மாறின.

" LovveeSe "

இந்த வார்த்தை எங்களுக்கு மட்டுமே சொந்தமானது.

இன்று, எங்கள் உலகத்தின் அந்தச் சிறிய பக்கத்தை உங்களுக்கு முன்னால் திறந்து வைக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து வெளியான அறிக்கையில், ``இத்தனை ஆண்டு காலமாக எங்கள் மீது அளவற்ற அன்பையும் ஆதரவையும் பொழிந்து வரும் எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், சக திரையுலகினர், பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் மற்றும் அன்பு ரசிகர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்களின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தூணாக நின்ற நீங்கள், எங்களது இந்தப் புதிய தொடக்கத்திற்கும் உங்கள் ஆசிகளையும் வாழ்த்துகளையும் வழங்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இந்த இளம் ஜோடிக்கு திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைக் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.