ஜூலை-2ல் விஜய் உடன் ஐக்கியமாகும் விஜயபாஸ்கர்கள்- இணைப்பு விழாவுக்கு தயாராகும் ரத்தத்தின் ரத்தங்கள்

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரைச் சுற்றி வரும் தவெக சஸ்பென்ஸ் பல நாள்களாக நீடித்து வரும் நிலையில், அதற்கான முற்றுப்புள்ளி வரும் ஜூலை 2-ஆம் தேதி இ.சி.ஆர் கன்வென்ஷன் சென்டரில் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ‘ஊழலற்ற தூய்மையான ஆட்சி’ என முழங்கும் தவெக-வுக்குள் சி.வி.பி.யைப் போன்ற சர்ச்சைக்குரிய தலைவர்களைச் சேர்க்கக் கூடாது எனப் பல தரப்பிலிருந்தும் தலைமைக்குக் கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. உள்ளூர் தவெக நிர்வாகிகள் முதல் நடுநிலையாளர்கள் வரை பலரும் ‘இது கட்சியின் பிம்பத்தைக் கெடுத்துவிடும்’ என வார்னிங் கொடுத்தனர். ஆனால், அந்த அத்தனை எதிர்ப்புகளையும் கடந்து, தவெக-வில் ஐக்கியமாகத் தயாராகி விட்டார்.

விஜயபாஸ்கர்

இதன் இறுதி அத்தியாயமாக, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்தை நேரில் சந்தித்து, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரகசிய ஆலோசனையை சி.விஜயபாஸ்கர் முடித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அவருக்கான முக்கியப் பொறுப்புகளும் ‘டிக்’ செய்யப்பட்டுவிட்டன என்ற செய்திகளும் கசியத் தொடங்கி உள்ளன.

எதிர் வரும் வியாழக்கிழமை (ஜூலை 2, 2026) அன்று சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) மகாபலிபுரம் அருகே உள்ள கன்வென்சன்  சென்டர் திருமண மண்டபத்தில் இந்த மெகா இணைப்பு விழா பிரமாண்டமாக அரங்கேறப்போகிறது.

விஜயபாஸ்கர் மட்டும்தான் தவெக-வுக்குப் போகிறார் என்று நினைத்தால்... அதுதான் இல்லை. ஜூலை 2-ஆம் தேதி நடக்கும் விழாவில், ராஜினாமா செய்த அதிமுகவின் மற்றொரு  எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தவெக-வில் இணையவிருக்கிறார் என்ற செய்திகளும் வெளிவந்துள்ளன.

இப்படி டபுள்  விஜய் பாஸ்கர்களும் ஒரே நாளில் தவெக-வில் இணைவது அதிமுக வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.

இதுமட்டுமன்றி, அதிமுகவிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் பி.கே.வைரமுத்துவும் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்களுடன் தவெக-வில் ஐக்கியமாகிறார்.

முன்னதாகவே, அரிமளம் அதிமுக ஒன்றியச் செயலாளர் திலகர், புதுக்கோட்டை நகரச் செயலாளர் சேட்டு, அறந்தாங்கி நகரச் செயலாளர் ஆதிமோகன் போன்ற முக்கிய விக்கெட்டுகள் தவெக-வில் விழுந்துவிட்ட நிலையில், ஜூலை 2-ல் இன்னும் பல முக்கிய தலைகள் தவெக பக்கம் சாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த  இணைப்பு விழா குறித்து அதிமுக-விலிருந்து  எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டு, தற்போது சென்னையில் இணைப்பு விழா ஏற்பாட்டில் பிஸியாக இருக்கும் முன்னாள் புதுக்கோட்டை அதிமுக மாவட்ட இணைச் செயலாளர் ப.கருப்பையாவிடம்  பேசினோம்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

10,000 பேருடன் மாஸ் ஊர்வலம்; இ.சி.ஆரே அதிரப்போகிறது!

 "அதிமுக-வில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மதிப்பில்லை. எங்களை எந்தக் காரணமும் இல்லாமல் கட்சியை விட்டு நீக்கினார்கள். மக்கள் செல்வாக்கு யாரிடம் இருக்கிறது என்பதை ஜூலை 2-ஆம் தேதி புதுக்கோட்டையே திரண்டு போய் சென்னை ஈசிஆர் சாலையில் காட்டப் போகிறோம். அண்ணன் சி.வி.பி எப்போதுமே எதையும் பிரமாண்டமாகச் செய்யக் கூடியவர்.

இந்த மெகா இணைப்பு விழாவிற்காகப் புதுக்கோட்டை மற்றும் விராலிமலைப் பகுதி முழுவதிலுமிருந்து சுமார் 200 பேருந்துகள், 600 கார்கள் எனப் பிரமாண்ட அணிவகுப்புடன் இசிஆர் சாலையில் ஊர்வலமாகச் சென்று, தளபதி விஜய் முன்னிலையில் இணையப் பெருமளவில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 

ப.கருப்பையா

விழாவுக்கு வரும் 10,000-க்கும் மேற்பட்ட தொண்டர்களுக்குக் காலை, மதியம் என இரு வேளை அசைவ மற்றும் சைவ உணவுகளுக்கான ஏற்பாடுகளும் அந்த கன்வென்ஷன் சென்டரிலேயே  விறுவிறுப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. ஜூலை 2- இணைப்பு விழாவில் கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் உறுதியாக இணைகிறார். இந்த விழா முடிந்து சி.விஜயபாஸ்கர் தவெக-வில் இணைந்த பிறகு, அவருடைய ஆக்ரோஷமான செயல்பாடு எப்படியிருக்கும் என தமிழ்நாடே பார்க்கத்தான் போகிறது" என்கிறார் ப.கருப்பையா.

இதனால் புதுக்கோட்டை அதிமுகவுக்கு எவ்வளவு பெரிய இழப்பு ஏற்படும்? என்று புதுக்கோட்டை மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், அதிமுக செய்தி தொடர்பாளருமான சீனிவாசனிடம் கேட்டோம்.

வெறும் 10% மட்டுமே இழப்பு!

"அதிமுகவால் அத்தனை பதவிகளையும், சுகங்களையும் அனுபவித்துவிட்டு, இப்போது தங்களின் சுயநலத்திற்காகக் கட்சியை விட்டு ஓடுகிறார்கள். இவரை நம்பி வெறும் 10% பேர் மட்டுமே அவருடன் போவார்கள். அவருடன் பயனடைந்தவர்கள், அவருடைய பேக்கேஜில் இருந்தவர்கள் மட்டும்தான் போகிறார்களே தவிர, உண்மையான தொண்டர்கள் யாரும் போகவில்லை. இதனால் அதிமுகவுக்கு எந்தப் பெரிய இழப்பும் இல்லை, கட்சி இங்கேயேதான் இருக்கிறது. 

சீனிவாசன்

எடப்பாடியார் தலைமையின் கீழ் லட்சக்கணக்கான தொண்டர்களும், 2,200-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் இன்னும் உறுதியாக இருக்கிறார்கள். எடப்பாடியார் கட்சியை எந்தப் பிரச்னையும் இல்லாமல் திறம்பட நடத்தி வருகிறார். தலைமைமீது தவறு இருந்தால் நேராகச் நியாயம் கேட்டுப் பேச வேண்டுமே தவிர, இப்படி வேறு கட்சிக்கு ஓடக் கூடாது. தொகுதி மக்கள் வரும் காலத்தில் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்." என்றார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் அக்கட்சித் தலைமையின் மீது அதிருப்தி அடைந்து வெளியேறி வருகின்றனர்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

ஏற்கெனவே நான்கு முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக-வில் இணைந்துள்ள நிலையில், ஐந்தாவது முக்கியத் தலைவராக சி. விஜயபாஸ்கரும், ஆறாவதாக  கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தவெக-வை நோக்கி நகர்வது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை, கரூர் மண்டலத்தில் வலுவான அரசியல் செல்வாக்கு கொண்ட இந்தத் தலைவர்களின் வருகை, தவெக-வின் அடித்தளத்தை எவ்வளவு வலுப்படுத்தும் என்பதையும், அதிமுகவுக்கு  எந்த அளவில் சேதாரத்தை ஏற்படும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.