`எடப்பாடி பழனிசாமி வழங்கிய புதிய பதவிகளை ஏற்க மாட்டோம் - அதிருப்தி நிர்வாகிகள் `திடீர் முடிவு?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்த புதிய கட்சிப் பொறுப்புகளை ஏற்கப் போவதில்லை என்றும், இதுகுறித்து அவருக்கு நேரடியாக கடிதம் அனுப்பவும் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிருப்தி நிர்வாகிகள் ஒருமித்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக அரசுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தில் வாக்களித்த விவகாரத்தைத் தொடர்ந்து, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளிடம் இருந்து கட்சிப் பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி பறித்திருந்தார். இந்த நடவடிக்கை அதிமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சி. விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட ஐந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது கட்சிப் பொறுப்புகளை ராஜினாமா செய்தனர்.

எடப்பாடி பழனிசாமி

பின்னர் மன்னிப்புக் கடிதம் அளித்தவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொண்டாலும், முன்பு வகித்த முக்கிய பொறுப்புகள் மீண்டும் வழங்கப்படாதது எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றங்களை அறிவித்த எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி, தங்கமணி மற்றும் கே.பி. அன்பழகனுக்கு அமைப்புச் செயலாளர் பதவி, எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் பதவி உள்ளிட்ட புதிய பொறுப்புகளை வழங்கினார். ஆனால், கடந்த சில வாரங்களாக எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்து வந்த சி.வி. சண்முகத்திற்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை.

வேலுமணி, எடப்பாடி பழனிசாமி
வேலுமணி, எடப்பாடி பழனிசாமி

இதனால், தற்போது வழங்கப்பட்டுள்ள பதவிகள் பெயரளவில் உயர்ந்ததாக இருந்தாலும், முடிவெடுக்கும் அதிகாரமோ நிர்வாக செல்வாக்கோ இல்லாத “அலங்காரப் பதவிகள்” என்ற பார்வை அதிருப்தி முகாமில் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடாக, கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் பதவியை ஏற்க மறுத்த எம்.ஆர். விஜயபாஸ்கர், கட்சியில் இருந்து விலகியதுடன் தனது கரூர் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், புதிய பொறுப்புகளை ஏற்க விருப்பமில்லை என்ற மனநிலையிலேயே அதிருப்தி நிர்வாகிகள் இருப்பதாகவும், அதிகாரமற்ற பதவிகளை ஏற்கத் தயாரில்லை என்பதை தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டாக கடிதம் அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கை அதிமுகவில் புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கட்சிக்குள் அதிருப்தி அலை மேலும் தீவிரமடையுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.