ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய எஸ்.பி. வேலுமணி; அதிமுக-வில் இருந்து வெளியேற திட்டமா?
அ.தி.மு.க-வில் மீண்டும் இணைந்தாலும் பழைய பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை தொண்டாமுத்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
கட்சிக் கொடி, பேனர் எதுவும் இல்லாமல் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருவரின் புகைப்படங்கள் மட்டும் வைக்கப்பட்டு இருந்தன. ஈபிஎஸ் படம் தவிர்க்கப்பட்டு இருந்தது.
அப்போது பேசிய அவர், “இதுவரை பொதுச்செயலாளர் எடப்பாடியாருக்குத்தான் மரியாதை அளித்து வருகின்றோம். சட்டமன்றத் தேர்தலின்போது ஓ.பன்னீர் செல்வம் நம்முடன் சேர்த்து இருந்திருந்தால், இன்னும் பலமாக இருந்திருக்கும். தேர்தலுக்குப் பின்பு தி.மு.க-வுடன் கூட்டணி என்று சொன்னதால்தான் பிரச்னை வந்தது.
அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் ஆரமித்தது தி.முக-வை எதிர்க்கத்தான். தி.மு.க-வுடன் அ.தி.மு.க-வைச் சேர்ப்பது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? 47 எம்.எல்.ஏ-க்களில் 25 பேர் எங்களுடன் வந்தனர். அ.தி.மு.க-வைக் காப்பாற்ற வேண்டும் என நினைத்தோம்.
தி.மு.க-வுடன் யார் போனாலும் ஏற்கமாட்டோம். 30 மாவட்டச் செயலாளர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அ.தி.மு.க-வை அழிவு பாதையில் கொண்டு செல்ல முயன்றனர். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்க என்ன நினைக்கின்றீர்களோ அதுதான் என் கருத்து. இப்பவும் இந்தக் கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் மீண்டும் எடப்பாடியாரிடம் வந்தோம், இந்தக் கட்சி நன்றாக இருக்க வேண்டும்.
21 வருடமாக மாவட்டச் செயலாளராக இருந்திருக்கின்றேன், கட்சியில் சாதாரண உறுப்பினராக இருப்பேன், என்னை நம்பி வந்தவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன். தப்பு பண்ணினால் கண்டிப்பாகக் கேட்போம். தி.மு.க எதிர்ப்பு எப்போதும் இருக்கும்.
அதை எப்படி ஏற்க முடியும்? நீங்க என்ன முடிவு சொல்றீங்களோ அதைச் செய்வோம். என்னை நம்பி வந்தவர்களுக்குத் துணையாக இருப்பேன். பழையபடி பதவி இருந்தால் செயல்பட முடியும், பொதுக்குழுவைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என கேட்டோம், அது நடக்கவில்லை.
செங்கோட்டையன், ஓ.பி.எஸ், ஜெசிடி பிரபாகர் என ஒவ்வொருவராக வெளியேறினர். அதுபோல வெளியே செல்வேன் என நினைக்கின்றனர். அ.தி.மு.க தொடர் தோல்வியே சந்தித்து வந்தால் எதற்கு ஆகும்? தி.மு.க-வுடன் சேர்ந்து பயணிக்கலாம் என எண்ணம் இங்கு யாருக்காவது இருந்தால், கிளம்பிடுங்கள். இறுதி முடிவு நீங்கள் என்ன சொல்றீங்களோ, அதுவே எனது முடிவு” என்றார்.
பின்னர் காரில் கிளம்பிய வேலுமணியிடம் ஆலோசனைக் கூட்டம் குறித்த கேள்விக்கு, “எங்களுக்குள் பேசிக்கொண்டோம். இது மீட்டிங்கே கிடையாது. தேர்தலில் பணியாற்றியவர்களுக்கு நன்றி சொன்னோம், அவ்வளவுதான்” எனப் பதிலளித்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


