அடிச்சு விளையாடுவோம்; ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவதே அடுத்த லட்சியம் - மாணிக்கம் தாகூர் உறுதி
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் எம்.பி. நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நாளை அவர் புதிய தலைவராகப் பதவியேற்க இருக்கிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை மாநில அளவில் பலமான இயக்கமாக மாற்றுவதே தனது இலட்சியம் என மாணிக்கம் தாகூர் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் இது மிக முக்கியமான தருணம். இந்தப் பொறுப்பு சிரமமான பொறுப்பு என்று தெரியும்.
ஆனால் 59 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி முதன்முறையாக ஆட்சியில் பங்கு வகிக்கிறது. உள்ளாட்சித் தேர்தலிலும் தவெக காங்கிரஸ் கூட்டணி தொடரும். தேர்தல் அறிவிப்பு வரும்போது கூட்டணி இடங்கள் குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தவெக கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கு வகிப்பதால், எங்கள் மீதான பொறுப்பு கூடியிருக்கிறது. தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நல்லாட்சியை வழங்குவதும், வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறுவதை உறுதி செய்வதும் எங்களது முதன்மை இலக்குகள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பேற்பது மிக முக்கியமான மற்றும் பொறுப்புமிக்க பணியாகும். பெரும் தலைவர்கள் அலங்கரித்த இந்தப் பொறுப்பை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என்று கருதுகிறேன்.

தற்போது கிடைத்துள்ள அமைச்சரவை வாய்ப்பைப் பயன்படுத்தி, 2 அமைச்சர்களின் துணையுடன் கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் காங்கிரஸ் கட்சியை மாநில அளவில் மிக பலமான இயக்கமாக மாற்றுவேன்.
என்னுடைய அடுத்த லட்சியம் என்பது ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவது. மிகுந்த தன்னம்பிக்கையோடு நமது துவக்கம் இருக்கும். அடித்து விளையாடுவோம். காங்கிரஸ் கட்சியைப் பலமான இயக்கமாக மாற்றுவோம்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

