இந்தியா - வங்கதேசம் உறவில் விரிசலா? மோங்லா துறைமுக பொருளாதார மண்டலத்தைக் கைப்பற்றிய சீனா
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தைப் பயன்படுத்தி, அந்நாட்டில் சீனா தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது.
வங்கதேசத்தின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக சீனா சென்றிருந்தபோது, அரசு நிறுவனத்துடன் முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.
இதன்படி, இந்தியாவின் கிழக்குக் கடற்கரைக்கு மிக அருகில், வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மோங்லா துறைமுகத்தின் அருகே பொருளாதார மண்டலத்தை சீனா மேம்படுத்தவுள்ளது.
முன்னதாக, முந்தைய ஷேக் ஹசீனா ஆட்சிக்காலத்தில் இந்த 110 ஏக்கர் நிலம் இந்தியப் பொருளாதார மண்டலத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்காக இந்தியாவின் ஹிரானந்தானி குழுமமும் தேர்வு செய்யப்பட்டது.
ஆனால், கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, "இந்திய நிறுவனம் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளைத் தொடங்கவில்லை" எனக் கூறி இந்தத் திட்டத்தை ரத்து செய்தது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் இந்தியாவிற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு இது இரண்டு வழிகளில் பின்னடைவாகும். முதலாவதாக, இந்தியாவின் கைகளில் இருந்த மிக முக்கியமான திட்டம் கை நழுவியுள்ளது. இரண்டாவதாக, இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் சீனாவின் ராணுவ மற்றும் உளவு கண்காணிப்பு நடமாட்டத்திற்கு இது வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.
சீனா ஏற்கனவே தனது கடல்சார் பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் பாகிஸ்தானின் குவாடர் முதல் ஜிபூட்டி வரை 17 துறைமுகத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. தனது 80% கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியப் பெருங்கடலையே நம்பியிருப்பதால், சீனா மோங்லா துறைமுகத்தைக் கைப்பற்றுவதில் தீவிரம் காட்டியுள்ளது.

இத்துடன், இந்தியாவுக்குப் பாதுகாப்பு ரீதியாக மிகவும் உணர்வுப்பூர்வமான பகுதியான சிக்கன்ஸ் நெக் (சிலிகுரி காரிடார்) அருகே உள்ள தீஸ்தா நதி மேலாண்மைத் திட்டத்திலும் சீனாவுடன் இணைந்து செயல்பட வங்கதேசம் ஒப்புக்கொண்டுள்ளது. இது இந்தியாவின் கவலையை மேலும் அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
