ஆளவந்தான் : பூவுக்குப் பதிலாக தலை விழுந்திருந்தால்? | `சினிஸ்கோப் 01 | ஆதி தாமிரா
கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினிஸ்கோப் தொடர்!
கட்டுரையாளர்: ஆதி தாமிரா
தான் கல்யாணம் செய்துகொள்ளப்போகும் காதலியைக் கூட்டிக்கொண்டு, தன் கல்யாணச் செய்தியைச் சொல்லிப்போவதற்காக, மருத்துவச் சிறையிலிருக்கும் மன நலம் பாதிக்கப்பட்ட சகோதரன் நந்துவைப் பார்க்க வந்திருக்கிறான் விஜய்.
பெண்ணை நம்பிப் பிறந்த போதே தொப்பூழ்க்கொடிகள் அறுபடுமே
மண்ணை நம்பும் மாமரம் ஒருநாள் மாபெரும் புயலில் வேரறுமே
உன்னை நம்பும் உறுப்புகள் கூட ஒரு பொழுதுன்னைக் கைவிடுமே- இதில்
பெண்ணை மட்டும் நம்பும் நம்பகம் மட்டும் பிணநாள் வரைப் பின்வருமா?
அருகிலிருக்கும் தன் காதலி தேஜுவைக் காட்டி, ‘நான் இவளை நம்புகிறேன்’ என்று விஜய், நந்துவிடம் சொல்லும்போது, அவனுக்கான பதிலாக நந்து இந்தக் கவிதையைச் சொல்கிறான்! பல வருடங்களானப் பிரிவென்பதால் அவனுக்கு நந்துவின் இப்போதைய ஸ்கிசோஃப்ரினியா (Schizophrenia) மனநல பாதிப்பின் தீவிரநிலை தெரியவில்லை. அது சிந்தனை, உணர்ச்சி மற்றும் சமூக நடத்தையைப் பாதிக்கக் கூடிய, கற்பனையை நிஜத்திலிருந்து வேறுபடுத்திப் பார்க்க இயலாத தீவிரமான மனச்சிதைவு நோய். இந்த நோயாளிகளில் ஒருவகையினர் மிக ஆபத்தானவர்கள்.
தேஜுவைப் பார்த்தவுடனேயே நந்துவுக்குத் தெரிந்துவிடுகிறது. 17ம் தேதி கல்யாணம் என்று சொல்லப்பட்டவுடனேயே நந்து முடிவு செய்துவிடுகிறான். நம் தகப்பனைச் சித்தி கல்யாணம் செய்துகொண்ட அதே தேதியில் இவள் தன் சகோதரன் விஜயைக் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறாள். எந்தக் காரணத்தைச் சொல்லி தேஜு, விஜயைக் கல்யாணம் செய்துகொள்ள நாள் குறிக்கிறாளோ, அது அவர்கள் சொல்லாமலேயே நந்துவுக்குத் தெரிந்துவிடுகிறது. ’நான் கர்ப்பமா இருக்கேன்னு சொல்லியிருப்பாளே’ என்று கேட்கிறான் நந்து. விஜயும், தேஜுவும் அதிர்ந்து போகிறார்கள்.
நாமும்தான்!
’சைலன்ஸ் ஆஃப் தி லேம்ப்ஸ்’ எனும் புகழ்பெற்ற ஆங்கிலப் படத்தில் டாக்டர் கேனிபல் லெக்டரைச் சந்திக்க சிறைக்கூடத்துக்கு வருகிறாள் ஏஜெண்ட் க்ளாரிஸ்!
லெக்டரின் சிறையறைக்கு அருகிலுள்ள இன்னொரு அறைக் கைதி, கிளாரிசைப் பார்த்து ஒன்று சொல்கிறான். அவளது பெண் வாசனையை உணரமுடிகிறது என்பான். அந்தக் காட்சி சினிமா வரலாற்றின் மிக முக்கியமான காட்சிகளுள் ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது. அதன் காட்சியமைப்பும், படமாக்கலும், நடிப்பும், வசனமும் அத்தகைய உயர்தளத்தில் அமைந்திருக்கிறது. அந்தக் காட்சிக்கிணையானதாக ஆளவந்தானின் இந்தக் காட்சியை நாம் சொல்லமுடியும்.

டாக்டர் லெக்டராக நடித்த அந்தோனி ஹாப்கின்ஸ் அந்தக் காட்சியின் தொடக்கத்தில், கண்ணாடி முன் நின்று ஆடையைத் திருத்திக் கொள்வதைப்போன்ற கச்சிதமான, கம்பீரமான தோற்றத்தில் நிற்பதைப்போலவே நிற்பார். ஆனால், அதில் ஓர் அமானுஷ்யம் இருக்கும்.
நந்துவாக நடித்த கமல்ஹாசனும், விஜய்க்கு எதிரே கம்பிகளுக்குப் பின்னால் அமைதியாக அமர்ந்திருப்பார். அவர் மெல்லத் தலைநிமிர்ந்து தேஜுவைத் தவிர்த்துவிட்டுப் பார்க்கும் பார்வையிலும் அப்படியொரு அமானுஷ்யம் இருக்கும். அப்படியான ஒரு கதாபாத்திரத்தை தமிழில் நாம் முதல்முறையாகத் திரையில் காண்கிறோம்.
விஜயும், நந்துவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்கிறார்கள். நந்துவிடம் கடைசி வரை ஒரு கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது.
பூவுக்குப் பதிலாக தலை விழுந்திருந்தால்?
அம்மாவை இழந்த நிலையில், ஒரு மோசமான பெண்ணின் பிடியில் சிக்கியிருக்கும் அப்பாவிடமிருந்து தப்பி, மாமாவிடம் வளர ஒரு வாய்ப்பு கிடைக்கிறது, சிறுவர்களாக இருக்கும் நந்துவுக்கும், விஜய்க்கும்! ஆனால், ஒருவர்தான் செல்ல முடியும். யாருக்கு அந்த வாய்ப்பு என்பதை இருவரும் ஒரு நாணயத்தைச் சுண்டிவிட்டு முடிவு செய்கிறார்கள். விஜய்க்குச் சாதகமாக பூ விழுகிறது. ஏனப்படி என்பதற்கான பதிலைத்தான் காலமெல்லாம் நந்து தேடிக்கொண்டிருக்கிறான்.
தன் தகப்பன், சித்தியில் வலையில் வீழ்ந்ததைப் போன்றே, இன்னொரு பெண்ணின் வலையில் தன் சகோதரனும் விழுந்துவிட்டான், அவனைக் காப்பது தன் கடமை என்ற முடிவுக்குப் போகிறான். இல்யூஷன் (Illusion) என்பது தோற்றப்பிழை. காட்சியையோ, ஒலியையோ மாற்றிப் புரிந்துகொள்வது.
இருளில் ஆடும் ஒரு துணி, ஒளிந்திருக்கும் மனிதராகத் தோற்றம் தருவது. ஸ்கிசோஃப்ரினியா நோயாளிகளின் பிரச்சினை டெல்யூஷன் (Delusion). ஒளிந்திருக்கும் மனிதனின் தோற்றத்தை அவர்கள் காண எந்தத் துணியும் தேவையில்லை. அது பூரண மாயை! விஜயைத் தேஜுவிடமிருந்து காப்பாற்ற மருத்துவச்சிறையிலிருந்து தப்புகிறான் நந்து. அந்த நந்துவிடமிருந்து தேஜுவைக் காப்பாற்றினானா விஜய் என்பது படத்தின் முடிவு.

நந்துவின் மனநலப் பாதிப்புக்குப் போதுமான காரணங்கள் படத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனாலும், இத்தனைத் தீவிரமான வன்முறை எங்கிருந்து அவனுக்கு வந்திருக்கும் என்ற கேள்விக்கு ஒரு பேட்டியில் கமல்ஹாசன், ’காமிக்ஸிலிருந்து கூட வந்திருக்கலாம்’ எனும் பதிலைத் தருகிறார்.
அந்த இருவருமே சிறுவர்களாக இருக்கையில் காமிக்ஸ் படிக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த வீட்டின் சுவரில் ஃபேண்டம் (phantom) காமிக்ஸ் கதாபாத்திரத்தின் ஓவியம் வரையப்பட்டிருக்கும். விஜயைச் சுடராகவும், நந்துவைச் சூறாவளியாகவும் உருவகித்து அப்படியே அழைக்கவும் கூடிய மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பழங்குடியின ஆள் அவர்களின் சிறுவயது நண்பனாக, அவர்கள் வாழ்க்கையின் ஆறுதலாக வருகிறான்.
நந்து அவனது டைரியோடு பேசுகிறான், வாழ்கிறான், அவனது உயிரே அதில்தான் இருப்பதாக உருவகம் கொள்கிறான். இப்படி நுணுக்கமான காட்சியமைப்புகள் படம் நெடுகக் கவனமாக அமைக்கப்பட்டிருந்தன.
ஆளவந்தான் ஒரு சினிமாவாக வந்த சமயத்தில் மக்களின் வரவேற்பைப் பெறாமல் போயிருந்தாலும், அதனளவில் சில குறைகளைக் கொண்டிருந்தாலும், தமிழ் சினிமா வரலாற்றில் பல வகைகளிலும் தவிர்க்க இயலாத தடத்தைப் பதித்துச் சென்ற சினிமாக்களை நினைவுகூரும் நோக்கத்தில்தான் இந்த மீள்வாசிப்பு செய்யப்படுகிறது. அந்தப் பார்வையில் ஆளவந்தான் தொழில்நுட்ப ரீதியாகவும், நுணுக்கமான கதை சொல்லலிலும் பல முன்னெடுப்புகளைச் செய்த தவிர்க்க இயலாத படமாக அமைந்திருக்கிறது.
இந்தப் படத்தின் பாடல்களை இசையமைத்திருந்தது சங்கர் - எஸான் – லாய் மூவர் குழு. நந்துவின் குணத்தையும், பிரம்மாண்டத்தையும் விவரிக்கும் பாடல்களான ’கடவுள் பாதி’ பாடலை கமல்ஹாசனும், ‘ஆளவந்தான்’ பாடலை சங்கர் மகாதேவனும் பாடியிருந்தனர். இரண்டையும் எழுதியிருந்தது வைரமுத்து. ஆங்காங்கே வரும் நந்துவின் ஆழமிக்க கவிதைகளை எழுதியதும் வைரமுத்துதான்.

படத்தின் பின்னணி இசையமைப்பைச் செய்திருந்தது மகேஷ். 1994 நம்மவர் படத்தில் அறிமுகமான மகேஷ், தொடர்ந்து கமல்ஹாசனுடன் குருதிப்புனலிலும், ஆளவந்தானிலும் பணியாற்றினார். இந்தப் படத்தில் அவரது பங்களிப்பு மிகவும் குறிப்பிடப்பட வேண்டியது.
நந்துவின் குழப்பமான, மர்மமான மனநிலையைப் பிரதிபலிக்கும் வண்ணம் இருந்த பின்னணி இசை ஏற்படுத்திய பாதிப்பு இன்னும் நினைவிலிருக்கிறது. பாம்போடு உவமை செய்யப்படும் நந்து வரும் காட்சிகளில் பயன்படுத்தப் பட்டிருந்த ராட்டில் ஒலி நந்துவுக்கு இன்னொரு பரிணாமத்தைக் கொடுத்தது. இந்தப்படம் வெளியான ஓரிரு ஆண்டுகளிலேயே மகேஷ் இறந்துவிட்டதால், அவரின் தொடர்ச்சியான இசைப்பங்களிப்பைத் துய்க்க நமக்கு வாய்ப்பில்லாமல் போயிற்று.
படத்தின் ஒளிப்பதிவைச் செய்திருந்தது திரு. முன்னதாக கமல்ஹாசனின் மாஸ்டர்பீஸ் படமான ஹேராமின் ஒளிப்பதிவையும் இவர்தான் செய்திருந்தார். தொடக்கத்தில் வரும் பனிச்சறுக்குச் சண்டைக்காட்சி ஆங்கிலப்படங்களுக்கு இணையாக இருந்தது.
நந்து, ஷர்மிலி (மனிஷா கொய்ராலா) வரும் ஒரு மழைப்பாடல் காட்சியை, எடுத்திருந்த விதத்தில் ரசிகர்களை வியக்கவைத்திருந்தார். நந்து, ஷர்மிலி எனும் பாடகியைக் கொலை செய்யும் காட்சி கொடூரமான வன்முறைக் காட்சியாக இருந்ததால், அதை 2டி அனிமேஷனில் வடிவமைத்திருந்தார்கள்.
கிரீன்மேட் நுட்பத்தின் உச்சத்தை ஆளவந்தானில் தொட்டிருந்தார் திரு. மிக முக்கியமாக மோஷன் கேப்சரிங் எனும் நுட்பம் முதல்முறையாக இந்தியத் திரையில் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதுவரை இரட்டைவேடக் காட்சிகளில் கேமிரா நிலையான கோணத்தில் இருந்த நிலை மாறி, மேலே கூறப்பட்ட நந்துவும், விஜயும் சந்திக்கும் காட்சியிலும், இருவரும் மோதிக்கொள்ளும் இறுதிச் சண்டைக் காட்சிகளிலும், மோஷன் கேப்சரிங் நுட்பத்தால் இரண்டு கமல்ஹாசன்களையும் கேமரா, பிசிறின்றி சுற்றி வந்தது கண்டு ரசிகர்கள் வியப்பிலாழ்ந்தனர்.

கைகள் கட்டப்பட்ட நிலையில், நந்து பற்களால் சிமெண்டைப் பெயர்த்துத் துப்பி, தேஜுவைக் காயப்படுத்த முயலும் காட்சியில் ஒளிப்பதிவு, மோஷன் கேமரா நுட்பம், சிஜி வேலைப்பாடுகள், கமல்ஹாசனின் நடிப்பு ஆகியன ஒன்றிணைந்து அந்தக் காட்சியை தமிழ் சினிமாவின் மறக்க முடியாத காட்சியாக்கிவிடுகின்றன. ஸ்பெஷல் எஃபெக்ட்ஸுக்கான தேசிய விருதை இந்தப் படத்துக்காக மதுசூதனன் வென்றார். எடிட்டர் காசிவிஸ்வநாதன், ஸ்டண்ட் இயக்கம் விக்ரம் தர்மா!
கமல்ஹாசனின் நடிப்பை நாம் தனியே குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. ஆயினும் இந்தப் படத்துக்கு அவரது உழைப்பு என்பது அசாத்தியமானது. இரண்டு கதாபாத்திரங்களை வேறுபடுத்திக் காண்பிக்கவும், நந்துவின் பிரம்மாண்டமான மனவுலகை மெட்டஃபர் செய்வது போலவும், விஜயை விட நந்து 20 கிலோ அதிக எடை கொண்டவராக சித்தரித்திருக்கிறார். அதற்காக சில மாதங்கள் இடைவெளி எடுத்துக்கொண்டு எடையைக் கூட்டி நடித்தார் கமல். அதை ஒரே காட்சியின், மறுபதிப்பாக சில மாதங்கள் இடைவெளியில் மோஷன் கண்ட்ரோல் நுட்பத்தைப் பயன்படுத்திச் செய்வது என்பது அப்போது அவருக்கு மட்டுமல்ல, அவரது குழுவுக்கும் மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கும்.
தேஜுவாக ரவீனா டாண்டன் நடித்திருந்தார். படம் ஒரே நேரத்தில் அபய் எனும் பெயரில் இந்தியிலும் எடுக்கப்பட்டதால், இந்தி நடிகர்களும் பரவலாக நடித்திருந்தனர். மனீஷா கொய்ராலா, அனுஹாசன், மிலிந்த் குணாஜி, ரியாஸ் கான் என பலரும் நடித்திருந்தனர். தான் எழுதிய தாயம் எனும் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியிருந்தார் கமல்ஹாசன். நாணயச்சுண்டுதலில் நந்து கேட்ட ‘தலை’ கிளைமாக்ஸில் விழும் இடம் தரமான எழுத்துக்குச் சான்று. சுமார் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப்படம், அந்த சமயத்தின் அதிக பட்ஜெட் படமாகக் கருதப்படுகிறது. வி கிரியேஷன்ஸ்க்காக படத்தைத் தயாரித்திருந்தது கலைப்புலி எஸ்.தாணு. படத்தை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. முன்னதாக பாட்ஷா, அண்ணாமலை எனும் பெரும் ஹிட் படங்களைக் கொடுத்திருந்தவர் சுரேஷ் கிருஷ்ணா.

சிறந்த கலைப்படைப்புகள் என்பன, இன்னொரு நிகழ்வின், இன்னொரு கலைப்படைப்பின் பாதிப்பில் அதிலிருந்து மேம்பட்டு உருவாவதுதான். கமல்ஹாசனும் மேலைநாட்டுப் படங்களிலிருந்து அப்படியான பாதிப்புகளில் சினிமாக்களை உருவாக்கியவர்தான்.
ஹாலிவுட்டின் உச்ச இயக்குநராகக் கருதப்படுகிற குவாண்டின் டாரண்டினோ தனது ’கில் பில்’ படத்தில் வரும் அதீதமான வன்முறைக்காட்சிகளின் தாக்கத்தைக் குறைக்க, 2டி அனிமேஷன் காட்சிகளைப் பயன்படுத்தியிருந்தார்.
பின்னாளில் அவர் அதை ‘ஆளவந்தான்’ படத்திலிருந்து இன்ஸ்பைர் ஆகிச் செய்திருந்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். நல்ல கலைஞர்கள் ஒன்றிலிருந்து பாதிப்புறுகிறார்கள், இன்னொன்றைப் பாதிக்கிறார்கள்.!
(தொடரும்.!)
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

