சிவகிரியில் அமித்ஷா பிரச்சாரம்!! மகளிர் மசோதாவை திமுக-காங்கிரஸ் தடுப்பதாக குற்றச்சாட்டு!!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஈரோடு மாவட்டம் சிவகிரியில் மொடக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் கிருத்திகாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் வந்த அவர், சின்னியம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையம் அருகில் இருந்து தீரன் சின்னமலை சிலை வரை ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தில் பேசிய அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையிலான NDA கூட்டணி வெற்றிக்கூட்டணி என்றும், ஆட்சிக்கு வந்தால் திமுக ஆட்சியில் நடந்த ஊழல், கடத்தல் ஒழிக்கப்படும் என்றும் கூறினார். முதல்வர் ஸ்டாலின் தன் மகனை முதல்வராக்க மட்டுமே முயற்சிப்பதாகவும், குடும்ப ஆட்சியால் தமிழகத்துக்கு பயனில்லை என்றும் விமர்சித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், பெண்கள் அரசியலில் பங்கெடுக்க மகளிர் மசோதாவை மக்களவையில் கொண்டு வந்ததாகவும், அதை திமுக, காங்கிரஸ் கட்சிகள் நிறைவேற்ற விடாமல் தடுப்பதாகவும் குற்றம் சாட்டினார். மக்கள்தொகை கணக்கெடுப்பை தவிர்த்து தமிழ்நாட்டுக்கு மறுசீரமைப்பில் 50% புதிய தொகுதிகள் அமைய முயற்சித்ததாகவும், பெண்களுக்கு அதிக தொகுதிகள் கிடைத்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அதையும் திமுக, காங்கிரஸ் தடுப்பதாக கூறினார். "இந்த சதிச்செயலை அனுமதிக்க மாட்டேன், மசோதா கண்டிப்பாக நிறைவேறும்" என்று பேசி, பவானி அம்மன், சங்கமேஸ்வரரை வணங்கி பாஜக வேட்பாளரை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


