6 பந்துகளில் 6 விக்கெட்.. எலக்ட்ரீஷியன் வேலைக்கு லீவு போட்டு கிரிக்கெட் விளையாடியவரின் சாதனை..!

இங்கிலாந்து கிளப் கிரிக்கெட்டில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றும் வீரர் ஒருவர், 6 பந்துகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

இங்கிலாந்தின் சவுத் ஸ்டாஃபோர்ட்ஷையர் கவுண்டி லீக் தொடரில் பென்கிரிட்ஜ் மற்றும் பெல்சால் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. பென்கிரிட்ஜ் அணியில் விளையாடும் மைல்ஸ் டேவிஸ் என்ற வீரர், தொழிலால் ஒரு எலக்ட்ரீஷியன். அன்று அவருக்கு வேலை இருந்தபோதிலும், அவரது சக ஊழியர் ஒருவரின் உதவியுடன் வேலையை தவிர்த்துவிட்டு இப்போட்டியில் பங்கேற்றார்.

 

போட்டியின் போது, மைல்ஸ் டேவிஸ் நம்பமுடியாத ஒரு சாதனையை செய்தார். ஒரே ஓவரில் வீசப்பட்ட 6 பந்துகளிலும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி டபுள் ஹேட்-ட்ரிக் சாதனை படைத்தார். ஒட்டுமொத்தமாக 6 ஓவர்கள் வீசிய அவர், வெறும் 16 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரது அபாரப் பந்துவீச்சால் பெல்சால் அணி நிலைகுலைந்து போனது. முடிவில் பென்கிரிட்ஜ் அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

இத்தகைய சாதனை உலக கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 7 முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. இங்கிலாந்து கிளப் கிரிக்கெட்டில் வயது வந்தோர் பிரிவில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர் இவரே என்று பென்கிரிட்ஜ் கிளப் தலைவர் ஜான் பிரைஸ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய மைல்ஸ், "இது இன்னும் ஒரு கனவு போலத்தான் இருக்கிறது. நான்காவது விக்கெட் விழுந்த போதே நான் திகைத்து போனேன், அதன் பிறகும் விக்கெட்டுகள் விழுந்தது ஆச்சரியமாக இருந்தது," என நெகிழ்ந்துள்ளார்.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.