Doctor Vikatan: சரும அழகை மேம்படுத்துமா Spirulina எனப்படும் பாசி?

Doctor Vikatan: என்னுடைய தோழி அடிக்கடி சருமத்துக்கு Spirulina எனப்படுகிற பேக்கை தடவிக்கொள்கிறாள். தவிர, அதையே மாத்திரை வடிவிலும் எடுத்துக்கொள்கிறாள். இது சரும அழகுக்குப் பெரிதும் உதவும் என்று சொல்கிறாள். அது உண்மையா?  Spirulina என்பது என்ன...? அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

வசுந்தரா

ஸ்பைருலினா (Spirulina) என்பது ஒருவகையான பாசி. அதை ப்ளூ-க்ரீன் மைக்ரோ ஆல்கே ( blue-green micro algae ) என்று சொல்வோம். சிலது கரும்பச்சை நிறத்திலும், சிலது கருநீல நிறத்திலும் இருக்கும்.  நிறைய ஊட்டச்சத்துகள் கொண்ட இதை உணவு சப்ளிமென்ட்டாக பலரும் எடுத்துக்கொள்வதுண்டு. இதை ஸ்மூத்தியில் சேர்த்தோ, ஜூஸில் சேர்த்தோ குடிக்கும் வழக்கம் பலரிடம் உள்ளது. அந்த அளவுக்கு இதை ஒரு சூப்பர்ஃபுட் என்றே சொல்லலாம்.

இதில் நிறைய பீட்டா கரோட்டின், வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ, மாங்கனீஸ், அமினோ அமிலங்கள் போன்றவை அபரிமிதமாக உள்ளன.  உள் உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு மட்டுமன்றி, கூந்தல் ஆரோக்கியத்துக்கும், சரும அழகுக்கும் பெரிதும் உதவக்கூடியது இந்த ஸ்பைருலினா. இதில் உள்ள ஃபைக்கோசயானின் (Phycocyanin ) என்ற புரோட்டீன், உள்ளே எடுத்துக்கொள்ளும்போது உள் உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதுபோலவே, வெளிப்பூச்சாகப் போடும்போதும் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. 

#FacePack

குறிப்பாக, ஹைப்பர் பிக்மென்ட்டேஷன் எனப்படும் மங்கு பாதிப்பைக் குறைக்கிறது. சூரிய ஒளியோ, வெளிச்சமோ பட்டதும் உடனடியாக நம் சருமம் கருமையடையும். அதைக் கட்டுப்படுத்தவும் ஸ்பைருலினா (Spirulina) பெரிதும் உதவுகிறது. வெயிலில் அலைந்துவிட்டு வந்ததும், ஸ்பைருலினா பேக் போடுவதன் மூலம் சருமத்தின் கருமை நீங்கி, பிரகாசமாக மாறும். வெயிலில் செல்லும்போது, சூரியனின் புறஊதா கதிர்களின் தாக்குதல் காரணமாக, எப்படிப்பட்ட ஆரோக்கியமான சருமமும் பாதிக்கப்படும்.  அதைச் சரியாக்கக்கூடிய தன்மை, ஸ்பைருலினாவில்  உள்ள ஃபைக்கோசயானின் புரதத்துக்கு உண்டு.

ஸ்பைருலினாவை முகத்துக்கான பேக்கில் பலவிதங்களில் பயன்படுத்தலாம். முடி வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம். சருமம் மற்றும் கூந்தலில் ஏற்படக்கூடிய பூஞ்சைத் தொற்று பாதிப்புகளைச் சரி செய்யும் தன்மை இதற்கு உண்டு. இதன் ஆன்டிஃபங்கல் தன்மையின் காரணமாக, இது பலவித க்ரீம்களில் சேர்க்கப்படுகிறது. உதாரணத்துக்கு, நகச்சுற்றுக்கான க்ரீம்களில் ஸ்பைருலினா (Spirulina) சேர்க்கப்படுவதுண்டு. பொடுகுக்கான சிகிச்சையில், ஹேர்பேக்குடன் ஸ்பைருலினாவை கலந்து போடும்போது சீக்கிரமே நிவாரணம் கிடைக்கும். 

spirulina

ஆன்டிஏஜிங் தன்மை கொண்டது என்பது இதன் இன்னொரு ஸ்பெஷல் தன்மை.  வயதாக, ஆக, நம் சருமத்தின் மீள்தன்மைக்கு காரணமான கொலாஜென் மற்றும் எலாஸ்டின் போன்றவை குறையத் தொடங்கும். அதனால் சருமத்தில் சுருக்கங்கள் விழும். அடிக்கடி ஸ்பைருலினா (Spirulina) பேக் தடவும்போதும், அதை சப்ளிமென்ட்டாக எடுத்துக்கொள்ளும்போதும், கொலாஜென் உற்பத்தியைத் தூண்டி, சருமத்தை சுருக்கங்கள் இல்லாமல் இளமையாக வைத்திருக்கும்.  எனவே, இயற்கையான முறையில் சருமத்தின் கொலாஜெனை அதிகரிக்க, ஸ்பைருலினாவை வாய்வழியே சப்ளிமென்ட்டாகவும் எடுத்துக்கொள்ளலாம். வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தலாம். 

வாய்வழி சப்ளிமென்ட்டாக  எடுக்க நினைப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனையோடு எடுப்பதுதான் பாதுகாப்பானது. ஃபேஸ்பேக்காக போடும்முன் உங்கள் சருமத்தின் தன்மை தெரிந்து அழகுக்கலை ஆலோசகர் பரிந்துரைக்கும் முறையில் பயன்படுத்தவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.