Dulquer Salman: எல்லா நடிகர்களும் ஐபிஎல் ஓனர்கள் என்றால் துல்கர் மட்டும் பைக் கம்பெனியில் முதலீடு!

நடிகர்கள், பிசினஸ் புள்ளிகள் போன்ற செலிபிரிட்டிகள் எல்லோரும் ஐபிஎல்-லில் முதலீடு செய்து கொண்டிருக்க, ஒரு நடிகர் மட்டும் ஆட்டோமோட்டிவ் துறையில் ‛ஹெவி’யாக முதலீடு செய்துள்ளார். அவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். 

நீங்கள் கூகுளில் துல்கர் சல்மான் என்று டைப் செய்தால், ஆட்டோமேட்டிக்காகக் கீழே Ultra Violette என்று வருகிறது. சோஷியல் மீடியாக்களில் அல்ட்ரா வயலெட் பைக்குடன் அவர் போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களைப் பார்த்து, சிலர் துல்கர் அந்த பைக்கை வாங்கியிருக்காரு போல என்றுதான் நினைக்க வாய்ப்புண்டு. ஆனால், அல்ட்ரா வயலெட் என்கிற பைக் நிறுவனத்தின் ஷேர் ஹோல்டர் துல்கர். 

View this post on Instagram

A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

சினிமாவுக்கு வருவதற்கு முன்பே Medtech மற்றும் Edutech போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார் துல்கர். இயல்பிலேயே கார் - பைக் பிரியம் கொண்டவர் துல்கர். அதனாலேயே பைக்கை மையமாக வைத்தே சில படங்கள் கொடுத்திருக்கிறார். ‛Neelakasham Pachakadal Chuvanna Bhoomi’ என்கிற படம் முழுக்க புல்லட்டில் ஆல் இந்தியா ரைடு போவார்.

ஆட்டோமோட்டிவ் செக்டாரிலும் பிசினஸ் பண்ண வேண்டும் என்கிற ஆசையால், அல்ட்ரா வயலெட் என்கிற நிறுவனத்துடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிறார் துல்கர். 2016-ல் ஆரம்பிக்கப்பட்ட அல்ட்ரா வயலெட் ஒரு எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் தயாரிப்பு நிறுவனம். பெங்களூருதான் இதன் தாய் நகரம். இந்த கம்பெனியின் நிறுவனரும் CTO-வும் ஆன ராஜ்மோகன் மற்றும் நிறுவனரும் CEO-வும் ஆன நாராயண் சுப்ரமணியன் - இருவரது ஐடியாக்களும் மிகவும் பிடித்துப் போனதால், இந்த பெங்களூரு கம்பெனியை டிக் அடித்திருக்கிறார் துல்கர்.

லேட்டஸ்ட்டாக, தனது இன்ஸ்டா பக்கத்தில் அந்த நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் பைக்கான F77 எனும் பைக்கின் லாஞ்ச் மற்றும் புக்கிங் பற்றிய தகவல்களை வெளியிட்டு, "விரைவில் என்னுடைய அல்ட்ரா வயலெட் கராஜைத் திறக்க உள்ளேன். பைக் பிரியர்கள் ரெடியா இருங்க!" என்று அழைப்பு விடுத்துள்ளார். 

Ultra Violette F77 Mach 2
Ultra Violette F77 Mach 2

அல்ட்ரா வயலெட் பற்றித் தெரியாதவர்களுக்கு…

இது ஒரு பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம். இந்த நிறுவனம், ஒரே ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்கைத்தான் விற்பனை செய்து வருகிறது. அதுதான் Ultra Violette F77 Mach 2. இது ஒரு எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் என்பதே இதன் ஸ்பெஷல். பார்ப்பதற்கு ஏதோ ஒரு மோட்டோ ஜிபி ரேஸ் பைக் போல இருக்கும் இதன் பெர்ஃபாமன்ஸ்தான் வெறித்தனம். 

Ultra Violette F77 பழைய மாடலின் அப்கிரேடட் வெர்ஷன்தான் இந்த மேக் 2. இந்த எலெக்ட்ரிக் மோட்டாரின் பவர் 40.2bhp. இதன் டார்க் 100Nm. இது ஒரு பெரிய 400 சிசி பைக்குக்கு இணையான ஸ்பெக் அளவுகள். இது மணிக்கு 155 கிமீ டாப் ஸ்பீடு போகும் என்கிறது அல்ட்ரா வயலெட். 0-100 கிமீ-யை இது வெறும் 7.7 விநாடிகளில் கடக்கும்.

Ultra Violette F77 Mach 2

பொதுவாக, எலெக்ட்ரிக் பைக்குகள் சத்தமே இல்லாமல், ஒரு வைப் கிரியேட் செய்வதில் மந்தமாக இருக்கும்தானே! ஆனால், இந்த அல்ட்ரா வயலெட் பைக்கின் ஆக்ஸலரேஷன், ஒரு ஜெட் விமானத்தைப் போல் சத்தம் கேட்கும் என்பதுதான் ஸ்பெஷல். நீங்கள் இந்தச் சத்தத்தை அல்ட்ரா வயலெட் வலைதளத்தில் கேட்கலாம். ரேஸ் பிரியர்களுக்கு செம வைப் ஏற்றும் இந்த ஜெட் சத்தம். இந்த பைக்கின் ஸ்விங் ஆர்ம் செக்ஷனே ஒரு ரேஸ் பைக் ஃபீலிங் தருகிறது. அட, ஜெட் விமானத்தை இன்ஸ்பயர் செய்தே இதன் டிசைனைச் செய்திருக்கிறார்கள் இந்த பைக் டிசைனர்கள்.

இந்த செக்மென்ட்டில் பெரிய பேட்டரி பேக் இந்த பைக்கில்தான் இருக்கிறது. இந்த பைக்கில் 2 பேட்டரி பேக்குகள் கொடுத்திருக்கிறார்கள். F77 Mach 2 மற்றும் F77 Mach 2 Recon எனும் 2 வேரியன்ட்கள் - அதற்கு ஏற்றாற்போல் 7.1 kWh மற்றும் 10.3 kWh என 2 பேட்டரி பேக். இரண்டுமே IP67 தரக்கட்டுப்பாட்டில் சிறந்த பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் மூலம் R&D செய்யப்பட்டிருக்கிறது. இந்த இரண்டின் ரேஞ்ச் - அதாவது சிங்கிள் சார்ஜில் பெரிய பேட்டரி என்றால் 323 கிமீ-யும், சின்ன பேட்டரி என்றால் 211 கிமீ. இரண்டுமே IDC (Indian Drive Cycle) ரேஞ்ச். 

Ultra Violette F77 Mach 2
Swing Arm
Reverse Mode

மற்றபடி பெரிய காஸ்ட்லி வாகனங்களில் இருக்கும் - மணலில் வழுக்காமல் போகும் ட்ராக்ஷன் கன்ட்ரோல், 3 வகையான ரைடிங் மோடுகள், இரண்டு பக்கத்துக்கும் டூயல் சேனல் ஏபிஎஸ், மலைப்பாதைகளில் சரியாமல் இருக்க ஹில் ஹோல்டு அசிஸ்ட், வண்டி ஸ்டேபிளாகப் பறக்க DSC (Dynamic Stability Control), ஆட்டோ டிம்மிங் வசதி கொண்ட LED ஹெட்லைட், மொபைல் போனில் கனெக்ட் செய்து கொள்ளக்கூடிய கனெக்டட் வசதி, பெரிய கேடிஎம் பைக்குகளில் இருப்பது மாதிரி ரைடு பை ஒயர் தொழில்நுட்பம், சஸ்பென்ஷன் செமையாக இருக்க USD (UpSide Down) ஃபோர்க்ஸ், 10 லெவல்களில் ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், டயர்களில் எவ்வளவு காற்று இருக்கிறது என்பதைச் சொல்லும் TPMS (Tyre Pressure Monitoring System)… என்ன, காற்றுப்பைகள்தான் இல்லை, மற்றபடி அடிப்படைப் பாதுகாப்பு வசதிகளில் கலக்குகிறது அல்ட்ரா வயலெட் F77 Mach 2.

இதன் சீட் உயரம் கொஞ்சம் அதிகம்தான்; 800 மிமீ என்பது துல்கர் மாதிரி உயர பார்ட்டிகளுக்குச் சரியாக இருக்கும். இதன் எடை 197 - 207 கிலோ. ஆனால் கவலை இல்லை; இதில் ரிவர்ஸ் கியர் இருக்கிறது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 160 மிமீதான். ஸ்பீடு பிரேக்கர்களில் கவனமாக இருக்கணுமோ! (இதன் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ மோட்டார் விகடன் சேனலில் பார்த்து மகிழுங்க!)

துல்கர் சல்மான்
துல்கர், TN பதிவு எண் கொண்ட பைக்கில் செம ஸ்டைலாக போஸ் கொடுப்பது, பல தமிழ்நாட்டு பைக் ரசிகர்களின் ரேஸ் அட்ரனலினையும் சுரக்க வைத்துள்ளது. ஆனால், இந்த பைக் இப்போதைக்கு பெங்களூருவில் மட்டும் சக்கைப் போடு போடுகிறது. நீங்க பெங்களூருவாசியாக இருந்தால், அல்ட்ரா வயலெட் F77 -யை ஒரு எட்டுப் பார்த்துடுங்க! ஒரு எட்டுப் பார்க்கும்போது அப்படியே ஒரு 3 to 4 லட்சத்தையும் எடுத்துட்டுப் போயிடுங்க!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.