தடைகளை தவிடு பொடியாக்கும் விநாயகர் வழிபாடு

காரிய தடையை நீக்கக்கூடிய தெய்வமாக திகழ்பவர் விநாயகப் பெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை நாம் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பாகவும் வணங்கிவிட்டு செய்தோம் என்றால் அந்த செயலில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கும் என்றும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். பலரும் அனுபவபூர்வமாக உணர்ந்தும் இருக்கிறார்கள். அந்த வகையில் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எந்த தடையாக இருந்தாலும் அந்த தடைகள் விலகி சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு சங்கடஹர சதுர்த்தி நாளன்று விநாயகரை அர்ச்சனை செய்யும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

விநாயகப் பெருமானை அனுதினமும் வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக விநாயகப் பெருமாளுக்கு உகந்த சதுர்த்தி திதியில் வழிபாடு செய்யும்பொழுது அந்த வழிபாட்டின் பலன் என்பது அதிகமாகவே இருக்கும். நமக்கு இருக்கக்கூடிய வளங்கள் மேலும் அதிகரிப்பதற்கு வளர்பிறை சதுர்த்தியிலும், நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தேய்ந்து போவதற்கு தேய்பிறை சதுர்த்தியான சங்கடஹர சதுர்த்தி நாளிலும் விநாயகர் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். பலரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகர் பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். அப்படி வழிபாடு செய்வதில் விநாயகருக்கு அர்ச்சனை செய்வதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகவே திகழ்கிறது. நம்முடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு உறுப்பினருக்கும் இருக்கக்கூடிய தடைகள் விலகுவதற்கு இந்த முறையில் அர்ச்சனை செய்தால் போதும்.

சங்கடஹர சதுர்த்தி நாளன்று மாலை நேரத்தில் வீட்டில் இருக்கக்கூடிய விநாயகர் பெருமானுக்கு நம்மால் இயன்ற அபிஷேக ஆராதனைகளை செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக பால், தயிர், பன்னீர் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்வது என்பது மிகவும் சிறப்பு. பிறகு விநாயகப் பெருமானுக்கு சந்தனம் குங்குமம் வைத்துவிட்டு வில்வ இலைகள், அருகம்புல், தும்பை பூ, வெள்ளை எருக்கு பூ இந்த நான்கையும் சேகரித்து வைத்து விநாயகப் பெருமானின் 108 போற்றிகளை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி நாம் இந்த நான்கு பொருட்களை வைத்து விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொருவருடைய தடைகளையும் விநாயகப் பெருமான் நீக்குவார்.

பிறகு விநாயகப் பெருமானுக்கு பிடித்தமான பிடி கொழுக்கட்டை அல்லது பூரண கொழுக்கட்டையை செய்து நெய்வேத்தியமாக வைத்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். ஒருவேளை உங்களால் கொழுக்கட்டை செய்ய இயலாது என்னும் பட்சத்தில் வெல்லத்தை மட்டுமாவது நெய்வேத்தியமாக வைத்து இந்த வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். இந்த முறையில் ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி நாள் அன்றும் விநாயகர் பெருமானுக்கு நாம் அர்ச்சனைகள் செய்து வர நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட தடைகளாக இருந்தாலும் அவை படிப்படியாக விலகும். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும்.

இதையும் படிக்கலாமே: வேண்டுதலை நிறைவேற்றும் 11 நாணயங்கள்

எளிதில் கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை பயன்படுத்தி விநாயகப் பெருமானுக்கு நாம் அர்ச்சனை செய்வதன் மூலம் நம் வாழ்வில் இருக்கும் தடைகள் அனைத்தும் தவிடு பொடி ஆகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

The post தடைகளை தவிடு பொடியாக்கும் விநாயகர் வழிபாடு appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.