ஏகாதசி வழிபாடு முறை

பெருமாள் அவதாரங்களில் பல முக்கிய அவதாரங்கள் ஏகாதசியில் அவதரித்துள்ளதாக சாஸ்திரங்கள் சொல்லுகிறது. ஏகாதசியில் விரதமிருந்து பெருமாளை வழிபடுபவர்களுக்கு செல்வாதி செல்வங்கள் அத்தனையும் இல்லம் தேடி வரும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. விரதங்களில் முக்கிய விரதமாக கருதப்படும் மாத ஏகாதசி அன்று வழிபடும் முறையை பற்றிய தகவல்களை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம்.

மாதம் இருமுறை வரக்கூடிய ஏகாதசி திதியில் பெருமாளை நினைத்து விரதம் இருந்து வர வேண்டும். வருடத்திற்கு 25 ஏகாதசி திதிகள் வரும். இந்த 25 நாட்களும் புண்ணிய காலம் என்பார்கள். மார்கழியில் வரக்கூடிய ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்று வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதைத் தவிர விட்டவர்கள் தை மாதம் நாளை வரக்கூடிய ஏகாதசி நாளிலிருந்து ஒரு வருட காலம் விரதத்தை மேற்கொண்டால் வாழ்க்கையில் இருக்கும் வறுமைகள், இன்னல்கள், கடன்கள் அத்தனையும் தீர்ந்து செல்வங்கள் சேரும் என்பது நம்பிக்கை.

ஏகாதசி நாளில் உணவேதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். உடம்புக்கு முடியாதவர்கள் பாலும், பழமும் அல்லது நீர் ஆகாரங்களும் மட்டும் எடுத்துக் கொள்ளலாம், அதில் தவறு ஏதுமில்லை. விஷ்ணு பகவான் கூர்ம அவதாரம் எடுத்ததும், மோகினி அவதாரம் எடுத்ததும், தன்வந்திரி பகவான் அவதாரம் எடுத்ததும் இந்த நாளில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நாளில் விரதம் இருந்து பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். துளசியை ஏகாதசி நாளில் ஒருபோதும் நம் கைகளால் பறிக்கக்கூடாது, அது மகா பாவமாகும். எனவே பூஜைக்கு தேவையான இலைகளை முந்தைய நாளில் பறித்து வைத்து கொள்ள வேண்டும். ஏகாதசி நாளில் கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தை கூட எடுத்துக் கொள்ளக் கூடாது.

தாய், தந்தையருக்கு அன்றைய நாள் இறந்த திதி வருமாயின் சிரார்த்தம், தர்ப்பணம் போன்றவற்றை செய்யக் கூடாது. மறுநாள் துவாதசி அன்று அதை நிறைவேற்ற வேண்டும். ஏகாதசி நாளில் திதி முடியும் வரை பச்சை தண்ணீர் கூட பல்லில் படாமல் “ஓம் நமோ நாராயணாய” என்னும் எட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து மனதில் இறைவனை நிறுத்தி, முழு பக்தியோடு இறைவனோடு ஐக்கியமாக வேண்டும்.

இதையும் படிக்கலாமே:

அன்றாட வேலைகளை செய்தாலும், மனதில் எவ்விதமான சஞ்சலங்களும், கவலைகளும் இல்லாமல் இறைவனே கதி என்று காலையிலும், மாலையிலும் இறைவனை வழிபட வேண்டும். காலையில் விளக்கேற்றி துளசியால் அர்ச்சனை செய்து, துளசி தீர்த்தம் படைத்து பெருமாளுக்கு கற்கண்டு, பழங்கள் போன்றவற்றை படைத்து பிரார்த்திக்க வேண்டும். நாராயணனுடைய ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள் போன்றவற்றை தெரிந்தால் உச்சரிக்க வேண்டும். 108 முறை தியான நிலையில் அமர்ந்து திருநாம மந்திரத்தை “ஓம் நமோ நாராயணாய” என்று உச்சரித்தால் மனம் ஒருமுகப்படும். இது போல மாலை வேளையிலும் பூஜை செய்ய வேண்டும். ஒவ்வொரு ஏகாதசி திதியிலும் இது போல விரதம் இருந்து வீட்டில் பூஜை செய்து, பின்னர் மாலை வேளையில் கோவிலுக்கு சென்று நாராயணரை தரிசனம் செய்துவிட்டு வர வேண்டும். திதி முடிந்த பிறகு விரதத்தை முடிக்கலாம். தொடர்ந்து ஒரு வருடம் இப்படி ஏகாதசி விரதம் இருந்து பாருங்கள், சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

The post ஏகாதசி வழிபாடு முறை appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.