கஷ்டங்களை நீக்கும் மகாலட்சுமி தீபம்

எந்த ஒரு தெய்வ வழிபாட்டை செய்வதாக இருந்தாலும் அந்த தெய்வத்திற்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தோம் என்றால் அந்த வழிபாடு நிறைவான வழிபாடாக இருக்கும். அதனால்தான் தீபத்திற்கு என்று ஒரு மாதம் ஏற்பட்டது. மேலும் தீபச்சுடரொளியில் அனைத்து தெய்வங்களும் வீற்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட தீபத்திற்கு பெயர் போன கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாரை நினைத்து எந்த முறையில் தீபம் ஏற்றினால் மனக்கஷ்டமும் பணக்கஷ்டமும் தீரும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

மகாலட்சுமி தீபம்

வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமி தாயாருக்கு உரிய கிழமை என்று நம் அனைவருக்குமே தெரியும். பலரும் தங்களுடைய இல்லத்தில் சுக்கிர ஹோரையில் மகாலட்சுமி தாயாருக்கு சிறப்பான வழிபாடுகளை மேற்கொள்வார்கள். அதையும் தவிர்த்து நம்முடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் அருகில் இருக்கக்கூடிய மகாலட்சுமி ஆலயத்திற்கு சென்று அங்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அந்த தீபத்தை எப்படி ஏற்றுவது என்று தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

வெள்ளிக்கிழமை அன்று காலையிலோ மாலையிலோ இந்த தீபத்தை ஏற்றலாம். காலையில் ஏற்றுபவர்களாக இருக்கும் பட்சத்தில் ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் ஏற்றுவது என்பது சிறப்பு. மாலை ஏற்றுவதாக இருந்தால் 6 மணிக்கு மேல் எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு அருகில் இருக்கக்கூடிய மகாலட்சுமியின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். மகாலட்சுமி ஆலயம் அருகில் இல்லை என்பவர்கள் மகாலட்சுமி சொரூபமாக இருக்கக்கூடிய எந்த அம்பாளின் ஆலயத்தில் வேண்டுமானாலும் இந்த தீபத்தை ஏற்றலாம்.

கோவிலில் எந்த இடத்தில் நாம் தீபம் ஏற்ற போகிறோமோ அந்த இடத்தில் சிறிது தண்ணீரை தெளித்து மஞ்சள் தூளை போட்டு நன்றாக பூசிக் கொள்ளுங்கள். பிறகு உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு கோலத்தை பச்சரிசி மாவினால் போட்டுக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு வாழை இலையை விரித்துக்கொள்ளுங்கள். அந்த வாழை இலையின் மேலும் மஞ்சளை தூவிக்கொள்ளுங்கள். அடுத்ததாக நமக்கு ஒன்பது நெல்லிக்காய் வேண்டும். இந்த நெல்லிக்காயின் மேல் சதைப்பகுதியை எடுத்துவிட்டு அதற்கு நடுவே சிறிது மஞ்சள் குங்குமம் வைத்து பூ திரி போட்டு 9 நெல்லிக்காய் தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்திற்கு முன்பாக வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், ஊதுபத்தி, சாம்பிராணி, தேங்காய் போன்றவற்றை வைத்து மகாலட்சுமி தாயாரிடம் உங்களுடைய எந்த கஷ்டம் தீர வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த கஷ்டத்தை கூறி தீர வேண்டும் என்று மனதார வழிபாடு செய்ய வேண்டும்.

இந்த முறையில் தொடர்ச்சியாக ஒன்பது வாரங்கள் நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது மகாலட்சுமியின் அருளால் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தவிடு பொடி ஆகும். ஒன்பது வாரங்கள் தொடர்ச்சியாக நெல்லிக்கனி தீபம் தான் ஏற்ற வேண்டும். ஒன்பது வாரங்களும் நெல்லிக்கனி தீபம் ஏற்ற இயலாது என்று நினைப்பவர்கள் 9 மாவிளக்கு வைத்து ஏற்றலாம். நெல்லிக்கனி தீபத்திற்கு பதிலாக மாவிளக்கு தீபமும் ஏற்றி வழிபாடு செய்யலாம். கடைசி வாரம் தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பிரசாதத்தை செய்து நெய்வேத்தியமாக வைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு தர வேண்டும்.

இதையும் படிக்கலாமே: குபேர கிரிவலம் செல்லும் முறை

தீபத்திற்கு பெயர் போன கார்த்திகை மாதத்தில் மகாலட்சுமிக்குரிய வெள்ளிக்கிழமை அன்று இந்த முறையில் மகாலட்சுமி தாயாரின் ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் ஒன்றும் இல்லாமல் போய்விடும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

The post கஷ்டங்களை நீக்கும் மகாலட்சுமி தீபம் appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.