Health: ஒருவர் மாதத்துக்கு எவ்வளவு எண்ணெய் சாப்பிட வேண்டும்?! - ஊட்டச்சத்து ஆலோசகர் சொல்லும் டிப்ஸ்

நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய்களில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன... ஒருவர் ஒரு நாளைக்கு அல்லது மாதமொன்றுக்கு எவ்வளவு எண்ணெய் எடுத்துக்கொள்ளலாம் என்பன பற்றி நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதை விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் மீனாட்சி பஜாஜ்.

* எல்லாவகை எண்ணெயிலும் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு இரண்டுமே அடங்கியிருக்கும். அதனால், ஒரு எண்ணெயை முழுவதும் நல்ல எண்ணெய் என்றோ, முழுவதும் கேடானது என்றோ சொல்ல முடியாது.

* மாவுச்சத்து, புரதச்சத்துபோல கொழுப்புச்சத்தும் நம் உடலுக்குத் தேவையான ஒன்றுதான். வளர்ந்த மனிதனுக்கு ஒரு நாளைக்கு 2000 கலோரிகள் தேவை என்றால், அதில் 25 முதல் 30 சதவிகிதம் வரை கொழுப்புச்சத்தும் இருக்க வேண்டும். இந்த 30 சதவிகிதத்துக்குள், விலங்கு கொழுப்பான நெய், வெண்ணெய், சிவப்பு மாமிசம், கொழுப்பு நீக்கப்படாத பால் மற்றும் ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்ட வனஸ்பதி போன்றவை 7 சதவிகிதம் இருக்கலாம். அதற்கு மேல் இருக்கக்கூடாது என்கிறது உலக சுகாதார மையம்.

oil

* வளர்ந்த மனிதர் (18 வயதிலிருந்து) எந்த எண்ணெய் சாப்பிட்டாலும், அல்லது இரண்டு, மூன்று எண்ணெயை காம்பினேஷனாக சாப்பிட்டாலும், எல்லாம் சேர்த்து மாதத்துக்கு அரை லிட்டர் வரை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் வெண்ணெய், நெய் எல்லாமே அடங்க வேண்டும்.

* தாவர எண்ணெய்தான் நல்லது என்கிறது சமீபத்திய அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று. அந்த வகையில் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், அரிசித் தவிட்டு எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் ஆயில் உள்ளிட்ட தாவர எண்ணெய்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

* பாமாயில் மற்றும் வனஸ்பதியை தவிர்ப்பதே நல்லது.

* நெய் பிரியர்கள், ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் உருக்கிய நெய் மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.

* நல்லெண்ணெயில் நல்ல கொழுப்பு அதிகம் என்பதால், வளர்ந்த மனிதர், ஒரு மாதத்துக்கு கால் லிட்டர் நல்லெண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

Oil (Representational image)

* கடலை எண்ணெயில் நல்ல கொழுப்பும், நிறைவுறா கொழுப்பு அமிலங்களும் இருக்கின்றன. இதையும் மாதத்துக்கு கால் லிட்டர் வரை எடுக்கலாம். அதே நேரம், கடலை எண்ணெயை பெரும்பாலும் பொரிப்பதற்குப் பயன்படுத்துவதால், செக்கு கடலை எண்ணெய்க்கு பதில் சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், செக்கு எண்ணெய் சீக்கிரம் சூடாகி புகை வரும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் சீக்கிரம் சூடேறி புகையாது. கடலை எண்ணெய் சீக்கிரம் சூடேறி புகைந்தால், அதில் இருக்கிற நல்ல கொழுப்பும் கெட்ட கொழுப்பாக மாறும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

* தவிட்டு எண்ணெயில் இருக்கிற வைட்டமின் ஈ, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளைக் குறைக்கும். சிறு வயதிலேயே வயதான தோற்றம் வராமல் தடுக்கும். மெனோபாஸின்போது உடல் சூடாகும் அறிகுறியைக் குறைக்கும். நீரிழிவு இருப்பவர்களுக்கும் தவிட்டு எண்ணெய் நல்லது. இதையும் மாதத்துக்கு கால் லிட்டர் வரைதான் எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய்களில் சிறந்தது இதுதான்.

மீனாட்சி பஜாஜ்

* தேங்காய் எண்ணெயில் இருக்கிற நல்ல கொழுப்பானது உடலால் எளிதாக கிரகிக்கப்படக்கூடியது. ஆனால், இதிலும் கெட்ட கொழுப்பு இருக்கிறது என்பதால் எப்போதாவது எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அப்போதும் வறுக்க, பொரிக்கப் பயன்படுத்தக்கூடாது.

* இதயநோய், ரத்த அழுத்தம், நீரிழிவு இருப்பவர்கள் சூரியகாந்தி எண்ணெயை அளவுக்கதிகமாகவும், தொடர்ந்தும் சமையலில் பயன்படுத்தி வந்தால், அவர்களுடைய பிரச்னை தீவிரமாக வாய்ப்பிருக்கிறது என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. இந்தப் பிரச்னைகள் இருப்பவர்கள் சூரியகாந்தி எண்ணெயைத் தவிர்க்கலாம் அல்லது குறைவாகப் பயன்படுத்தலாம்.

* கடுகு எண்ணெயில் அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் இருப்பதால், இதயநோய், ரத்த அழுத்தம், நீரிழிவு இருப்பவர்களுக்கு நல்லது. இதையும் ஒரு மனிதர் மாதமொன்றுக்கு கால் லிட்டர் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.