Doctor Vikatan: டீ, ஜூஸ் தயாரிப்பில் சங்குப்பூ... சாப்பிட உகந்ததா? மருத்துவ குணங்கள் உண்டா?

Doctor Vikatan: நீலநிறத்தில் உள்ள சங்குப்பூக்களைப் பயன்படுத்தி டீ, ஜூஸ் போன்றவை தயாரிக்கும் வீடியோக்களை சோஷியல் மீடியாவில் அதிகம் பார்க்க முடிகிறது. சங்குப்பூ என்பது சாப்பிட உகந்ததா.... அதில் மருத்துவ குணங்கள் உண்டா எப்படிப் பயன்படுத்தலாம்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவர் யோ. தீபா

இயற்கை மருத்துவர் யோ. தீபா

செயற்கையான நிறமிக்கு பதில் உணவுகளுக்கு இயற்கையாகவே நீலநிறத்தைக் கொடுக்கக்கூடியது சங்குப்பூ. இதை வைத்துச் செய்யப்படுகிற உணவுகள் சமீப காலமாக சோஷியல் மீடியாவில் பிரபலமாகி வருகின்றன.  நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டது சங்குப் பூ. காபி, டீ, குளிர்பானங்களுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு, சங்குப்பூவைக் கொண்டு தயாரிக்கும் இயற்கையான, நீலநிற பானங்கள் நிச்சயம் பிடிக்கும். 

Clitoria Ternatea என்பது சங்குப்பூவின் தாவரவியல் பெயர்.  ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கைந்து புதினா இலைகள், சிறுதுண்டு இடித்த இஞ்சி, நான்கு லெமன்கிராஸ் இலைகள், இடித்த பட்டைத்தூள் கால் டீஸ்பூன் ஆகிய அனைத்தையும் சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இறக்கியதும் இனிப்புச் சுவைக்கேற்ப, தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை மற்றும் சில துளிகள் எலுமிச்சைப்பழச்சாறு  சேர்த்துக் குடிக்கலாம். 

சங்குப்பூ டீ

சங்குப்பூவில் நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உண்டு. உண்மையில், அவைதான் இந்தப் பூவுக்கு அதன் அழகிய நிறத்தைக் கொடுப்பவையே. அந்த நிறமிக்கு ஆந்தோசயனின் ( Anthocyanin)  என்று பெயர். பொதுவாக நாம் உண்ணும் உணவுகள், வளர்சிதை மாற்றத்துக்குப் பிறகு கழிவாக வெளியேறும். சில சமயங்களில் அவை நம் உடலிலேயே தங்கிவிடும். அவற்றை ஃப்ரீராடிக்கல்ஸ் (free radicals) என்று சொல்கிறோம். இது அளவு தாண்டும்போது நம் செல்களை பாதித்து, அவற்றை அழித்து நோய்களுக்குக் காரணமாகிவிடும்.

சங்குப்பூவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் ஆந்தோசயனின் ஆகியவை ஃப்ரீராடிக்கல்ஸை குறைத்து, நீரிழிவு, இதயநோய்,புற்றுநோய் போன்றவை பாதிக்கும் ரிஸ்க்கை குறைக்கின்றன. செல்கள் அழிவதைத் தடுக்கின்றன என ஆய்வுகள் நிரூபித்துள்ளன. உடலில் கொழுப்பு அளவைக் குறைக்க உதவும் என்றும் சொல்லப்படுகிறது. ரத்த நாளங்கள் விரிவடைய உதவுகின்றன. ரத்தம் உறைதல் பாதிப்புக்கான ரிஸ்க்கும் குறைவதாகச் சொல்லப்படுகிறது.

தினமும் நான்கைந்து சங்குப்பூக்களை சாப்பிடுவதால், உணவின் மூலம் நம் உடலில் சேரும் கொழுப்பு வெளியேறும். சங்குப்பூவில் உள்ள ஆந்தோசயனின், ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.  

சங்குப்பூ பானம்

சங்குப்பூக்களில் உள்ள ஆன்டி ஃபங்கல் மற்றும் ஆன்டிமைக்ரோபியல் தன்மைகள் தொற்று பாதிக்காமல் காக்கக்கூடியவை. மறதி நோயைத் தடுக்கும் என்று நம்பப்படுகிறது. இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்கும்.  குடல்நலம் மேம்படும். சருமத்தில் கொலாஜென் அதிகரிக்க உதவுவதால், சருமம் தொய்வடையாமல் இருக்கும். ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், முடி உதிர்வும் கட்டப்படும். பார்வை நரம்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால், பார்வை தொடர்பான பிரச்னைகள் தவிர்க்கப்படுகின்றன. மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்தக்கூடியது.

சங்குப்பூவை பயன்படுத்தி டீ, குளிர்பானம் உள்ளிட்ட பல உணவுகள் தயாரிக்கலாம். அதன் இயற்கையான நிறம் அந்த உணவின் தோற்றத்தை மெருகூட்டுவதோடு, அதைச் சாப்பிடுவோரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.