மின் கம்பியைத் திருட கம்பத்தில் ஏறிய இளைஞர்; நொடியில் நிகழ்ந்த விபரீதம்... அதிர்ச்சி சம்பவம்!
ராமநாதபுரம் - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரப்பன்வலசையில் அமைந்துள்ளது, பாம்பன் சுவாமிகள் கோயில். இந்த கோயில் வழியாக உயர் மின்னழுத்த வழித்தடம் உள்ளது. இந்த வழிதடத்தில் அமைக்கப்பட்டுள்ள காப்பர் மின் கம்பியினை அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் வெட்டி திருட முயன்றுள்ளார்.
இன்று அதிகாலை சில மின் கம்பிகள் வழியாக சென்ற காப்பர் மின் கம்பிகளை வெட்டி சுருட்டி வைத்த நிலையில், மற்றொரு மின் கம்பத்தின் மீது ஏறி மின் கம்பியினை வெட்ட முயன்றுள்ளார். அப்போது அந்த வாலிபரின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் உடல் கருகிய நிலையில் அந்த வாலிபர் மின் கம்பியில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
காலையில் அவ்வழியாக சென்றவர்கள் இது குறித்து மின் வாரிய ஊழியர்கள் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற உச்சிப்புளி போலீஸார் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உதவியிடன் மின்கம்பத்தில் சிக்கியிருந்த வாலிபரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் மின் கம்பிகளை திருட முயன்றபோது மின்சாரம் தாக்கி பலியான வாலிபர் ராமநாதபுரம் மஞ்சன மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் பாலமுருகன் (35) எனத் தெரியவந்தது.
பாலமுருகன் மீது ஏற்கெனவே மின் கம்பி திருட்டு தொடர்பான வழக்கு கேணிக்கரை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மீண்டும் மின் கம்பி திருட்டில் ஈடுபட்டபோது, மின்சாரம் தாக்கி பாலமுருகன் பலியாகி உள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.