டீன் ஏஜில் சுயஇன்பம்... ஹெல்த் பிரச்னை வருமா? | காமத்துக்கு மரியாதை - 196
கிட்டத்தட்ட அனைத்து ஆண்களுமே தங்களுடைய 20 வயதுக்குள் சுய இன்பம் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள் என்கிறார் சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ். தங்களுடைய டீன் ஏஜ் மகன் சுய இன்பம் செய்வதையறிந்த பெற்றோர்கள் பயப்பட வேண்டுமா அல்லது அது இயல்பானதென்று கடந்துவிட வேண்டுமா என்பதையும் விளக்கமாகச் சொல்கிறார் அவர்.
மனித வளர்ச்சியின் ஒரு பகுதிதான் பருவமடைதல். பெண் குழந்தைகள் என்றால் மாதவிடாய் வர ஆரம்பிக்கும். இதை `மெனார்க்கி என்போம். இதுவே ஆண் குழந்தைகள் என்றால், 13 அல்லது 14 வயதில் பருவமடைவார்கள். அதற்கு முன்னரும் ஆகலாம். அது பரம்பரைத்தன்மையைப் பொறுத்தது. தூக்கத்தில் பாலியல் கனவுகள் வந்து விந்து வெளிவரும். இதை ஸ்பெர்மாக்கி (spermarche) என்போம். ஆணுறுப்பைத் தொடும்போது ஒருவித கிளர்ச்சியும் இன்பமும் வருகிறது என்பதைத் தெரிந்து கொள்வார்கள். பெண்களைப் பார்த்து ஈர்ப்பு வர ஆரம்பிக்கும். ஒருகட்டத்தில் ஆணுறுப்பைத் தூண்டி விந்து வெளியேறும்போது மிகப்பெரிய கிளர்ச்சி கிடைப்பதையும் தெரிந்துகொள்வார்கள்.
இது 15 வயதிலும் நிகழலாம். 18 வயதிலும் நிகழலாம். ஆனால், கிட்டத்தட்ட அனைத்து ஆண்களுமே தங்களுடைய 20 வயதுக்குள் சுய இன்பத்தைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள் என்றவர், சுய இன்பம் சரியா, தவறா; மகனின் சுய இன்பத்தைப் பெற்றோர் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டுமென்று விளக்க ஆரம்பித்தார்.
இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் ஆண்களுக்கும் 13 அல்லது 14 வயதிலேயே திருமணம் நடந்துவிடும். அடுத்த சில வருடங்களிலேயே அவர்களுக்குக் குழந்தையும் பிறந்துவிடும். அந்தக் காலகட்டத்தில் அதுதான் வழக்கம் என்பதால், `இவ்ளோ சின்ன வயசுலேயே செக்ஸ் பண்ணி குழந்தை பெத்துட்டாங்களே என்று யாரும் இதைத் தவறாகப் பார்க்கவில்லை. ஆனால், இன்றைக்கு டீன் ஏஜ் ஆண்கள் சுய இன்பம் செய்தால் `இந்த வயசுலேயே இப்படியா என்று பதற்றப்படுகிறோம். அவர்களைக் குற்றவாளிகள் போலவும் நடத்துகிறோம். இது ஒருபக்கமிருக்க, இன்னொரு பக்கம் இன்றைய ஆண்களுக்குக் கிட்டத்தட்ட இருபதுகளின் இறுதியிலோ, முப்பதுகளின் ஆரம்பத்திலேயோதான் திருமணமே நடக்கிறது. இந்த வயதுவரை பெரும்பாலான ஆண்கள் பாலியல் உறவில்லாமல்தான் இருக்கிறார்கள். அதனால், இயற்கையான பாலியல் உந்துதலால் அவர்கள் சுய இன்பம் செய்வதில் தவறில்லை.
13 வயதில் பருவமடைகிற ஓர் ஆணால் 30 வயது வரைக்கும் எப்படி எந்தவிதமான பாலியல் உணர்வும் இல்லாமல் இருக்க முடியும்? ச்சீ... என் பிள்ள சுய இன்பம் செய்றானே என்று அவன் மீது கோபப்படவும் தேவையில்லை. `இதனால பின்னாடி அவனோட திருமண வாழ்க்கையில பிரச்னை வருமோ என்று பயப்படவும் தேவையில்லை. சுய இன்பம் என்பது எந்த ஆபத்துமில்லாத, இயல்பான பாலியல் வெளிப்பாடு.
19-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரைக்கும் விந்தை இழந்துவிட்டால் உடல் பலவீனமாகிவிடும், நரம்புகள் தளர்ந்துவிடும். பைத்தியம் பிடித்துவிடும் என்றெல்லாம் நம்பினார்கள். ஆனால், அதன் பிறகான ஆராய்ச்சிகள் `சுய இன்பத்தால் பின்னாளில் எந்தப் பிரச்னையும் வராது என்று நிரூபித்துவிட்டன.
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் டீன் ஏஜ் கருத்தரிப்பு அதிகமாகிவிட்டதால், சுய இன்பம் செய்யுங்கள் என்று அறிவுறுத்துகிறார்கள். சுய இன்பம் செய்பவர்கள் கெட்டவர்கள் இல்லை. இயல்பான பாலியல் உணர்வை அடுத்தவருக்குத் தொல்லை தராமல் அவர்களே தணித்துக்கொள்கிறார்கள், அவ்வளவுதான் என்று முடித்தார் டாக்டர் காமராஜ்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.