ரூ.1.50 லட்சம் மானியம்; 250 கோழிக்குஞ்சுகள் இலவசம்... நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க தயாரா?

சுயதொழிலில் ஈடுபட்டு வருமானம் ஈட்ட சிறந்த வழிகளில் ஒன்று, கோழிப்பண்ணை அமைப்பதாகும். குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் வருமானத்தை தரக்கூடியது கோழி வளர்ப்புத் தொழில். அதிலும்  நாட்டுக்கோழி வளர்ப்பை மேம்படுத்தவும், அதில் ஈடுபட உள்ளோருக்கு வழிகாட்டவும் தமிழக அரசு பல்வேறு சலுகைகள், மானியம் உள்ளிட்டவற்றை வழங்கி ஊக்குவித்து வருகிறது. 

நாட்டுக்கோழி

அந்த வகையில் நாட்டுக்கோழிகளை வளர்ப்பில் ஆர்வம் கொண்ட கிராமப்புறப் பயனாளிகளுக்கு, 250 கோழிகள் கொண்ட சிறிய அளவிலான பண்ணைகளை அமைக்க, தமிழக அரசு 50 சதவீதம் மானியம் வழங்குகிறது.

250 கோழிக்குஞ்சுகள் இலவசம்

கோழிகளை வளர்ப்பதற்கான கொட்டகை, உபகரணங்கள், தீவனத் தட்டு, 4 மாதங்களுக்கான தீவனம் என ஒரு பண்ணை அமைக்க 3,13,750 ரூபாய் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் 50 சதவீதம் அதாவது 1,56,875 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. கோழிப்பண்ணை அமைப்பதற்கான எஞ்சிய பங்களிப்புத் தொகையை சொந்த நிதி ஆதாரங்கள் மூலமாகவோ, வங்கி கடன் மூலமாகவோ திரட்டி கொள்ளலாம்.  ஒவ்வொரு பயனாளிக்கும், 4 வார வயதுடைய 250 நாட்டுக்கோழிக் குஞ்சுகள் ஓசூரில் உள்ள மாவட்ட கால்நடைப் பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. 

கோழிக்கொட்டகையை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுரஅடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும். பண்ணை அமைவிடம், மனித குடியிருப்புகளில் இருந்து தள்ளியிருக்க வேண்டும். பண்ணை அமைய உள்ள இடத்திற்கான சிட்டா, அடங்கல் நகல் வைத்திருக்க வேண்டும். பயனாளி அதே கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். பண்ணைக்கு மின் இணைப்பு இருக்க வேண்டும்.

நாட்டுக்கோழி

யார் யாருக்கு முன்னுரிமை?

இத்திட்டத்தில் கோழிப்பண்ணை அமைக்க, கைம்பெண், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் 30 சதவீதம் பேர், பட்டியலினத்தவர் மற்றும் பட்டியலின  பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

மேலும், இதற்கு முன் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ்  பயனடைந்தவர்கள், இத்திட்டத்தில் தகுதி உடையவராக இருத்தல் கூடாது. தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

கோழிப்பண்ணை அமைக்க விரும்புவோர், அருகிலுள்ள கால்நடை மருந்தகங்கள், கால்நடை உதவி மருத்துவர்களை அணுகி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், பண்ணை அமைக்கவிருக்கும் இடத்தின் சிட்டா, அடங்கல் நகல், 50 சதவிகித நிதி ஆதாரங்களுக்கான ஆவணங்கள், 3 ஆண்டுகளுக்கு பண்ணையை பராமரிப்பதற்கான உத்தரவாதக் கடிதம் உள்ளிட்டவற்றை இணைக்க வேண்டும். 

கொட்டகை

இந்தத் திட்டம் தற்போது திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.  அந்தந்தப் பகுதியில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் செயல்படும் கால்நடை மருந்தகங்களையோ, கால்நடை மருத்துவரையோ அணுகலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.