`உங்க மகன் பாலியல் வழக்கில் சிக்கியிருக்கிறார் - தந்தைக்கு வந்த அழைப்பும் மோசடி பின்னணியும்

பீகார் மாநிலம் பாட்னாவில் வசித்து வருபவர் ராஜேஷ் சின்ஹா. இவருக்கு வாட்ஸ்அப்பில் ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அதில் பேசிய ஒருவர்,``நான் போபால் காவல்துறை உயர் அதிகாரி பேசுகிறேன். போபாலில் தனியார் கல்லூரியில் படித்துவரும் உங்கள் மகன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவரை சிறைக்கு அனுப்புவதற்கான அனைத்து வேலைகளும் நடந்துவருகிறது. உங்கள் மகன் உங்களுக்கு வேண்டுமா... வேண்டாமா" எனக் கேட்டிருக்கிறார்.

வாட்ஸ் அப் கால்

என்ன நடக்கிறது என சுதாரிக்கும் முன்பே, ``காவல் நிலையத்தில் உயர் அதிகாரி நான்தான். நான் நினைத்தால் உங்கள் மகனை வழக்கிலிருந்து விடுவிக்க என்னால் முடியும். ஆனால், அதற்காக ரூ.75,000 எனக்கு கொடுக்க வேண்டும். சரி என்றால் அடுத்து பேசலாம்...." எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதை நம்பிய ராஜேஷ் சின்ஹா உடனே பணம் அனுப்புவதாக கூறி, அழைத்தவர் குறிப்பிட்ட எண்ணுக்கு பணம் அனுப்பியிருக்கிறார். பணம் செலுத்தப்பட்ட உடனே அழைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது.

உடனே, ராஜேஷ் சின்ஹா மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் தனியார் கல்லூரியில் படித்துவரும் தன் மகன் சாந்தனு சின்ஹா ​​(19)வை தொடர்புகொண்டு விசாரித்ததில், அவர் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து ராஜேஷ் சின்ஹா காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்திருக்கிறார்.

இந்தப் புகார் தொடர்பாக சைபர் செல் அதிகாரி,``குறிப்பிட்ட மோசடி எண்ணிலிருந்து அழைப்பு வந்தபோது சாந்தனு சின்ஹாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

காவல்துறை

அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டதும்தான் சாந்தனுவுக்கு அழைப்பு சென்றிருக்கிறது. எனவே, இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மகன் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியிருப்பதாக இதே போன்று நடந்த 83 மோசடி புகார்கள் சைபர் செல்லில் இருக்கிறது. ஆனால் இதுவரை எந்தக் குற்றவாளியும் கைது செய்யப்படவில்லை. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.