Doctor Vikatan: 15 வருடங்களாக கண்ணாடி அணிகிறேன்... அதைத் தவிர்க்க ஆபரேஷன் செய்துகொள்ளலாமா?

Doctor Vikatan: நான் 15 வருடங்களாக கண்ணாடி அணிகிறேன். 60 வயதுக்கு மேல் கண்ணாடி போடுவதைத் தவிர்க்க ஆபரேஷன்  செய்து கொள்ளலாமா... அதற்கு எவ்வளவு செலவாகும்?

-தக்கோலம் ச சிவானந்தம், விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், சேலத்தைச் சேர்ந்த கண் மருத்துவர் ஷோபா கினி.

கண் மருத்துவர் ஷோபா கினி

எந்த வயதிலும் கண்ணாடி அணிவதில் விருப்பமில்லை என்பவர்களுக்கு அதற்கான மாற்று வழிகள் இன்று நிறைய உள்ளன. ஆனால், அப்படி மாற்று வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், விழித்திரையும் விழி நரம்புகளும் நன்றாக உள்ளனவா, பார்வைத்திறன் எந்த அளவுக்கு உள்ளது என்பதையெல்லாம் பரிசோதனை செய்து பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

மேற்குறிப்பிட்ட பரிசோதனையில் எல்லாம் நார்மல் என்று தெரிந்தால், கண்களுக்குள் செயற்கை லென்ஸ் பொருத்தலாம். இந்தச் சிகிச்சைக்கு க்ளியர் லென்ஸ் எக்ஸ்ட்ராக்ஷன் (Clear Lens Extraction) என்று பெயர்.  க்ளியர் லென்ஸ் எக்ஸ்ட்ராக்ஷன் சிகிச்சை செய்யும்போது நம் கண்களுக்குள் வைக்கப்படுகிற இன்ட்ரா ஆகுலர் லென்ஸை  (Intraocular lens  ) மோனோஃபோக்கலாக (Monofocal lens) பொருத்தினால், ஒருபக்க பார்வை தெளிவாக இருக்கும். படிக்கும்போதான பார்வை தெளிவாக இருக்காது. அதையே மல்ட்டிஃபோக்கல் ( Multifocal lens)  அல்லது ட்ரைஃபோக்கல் (Trifocal Lens) லென்ஸ் பொருத்தினால், தூரப்பார்வை, இடைப்பார்வை மற்றும் கிட்டப்பார்வை மூன்றையும் சரிசெய்து கொடுக்கும்.

கண் பரிசோதனை

உங்கள் கேள்வியில் போதுமான விவரங்கள் இல்லாததால், பொதுவான விளக்கம்தான் தர முடியும். ஒருவேளை நீங்கள் இரவில் டிரைவிங் செய்யும் வழக்கம் உள்ளவர் என்றால் உங்களுக்கு கண் மருத்துவர் மல்ட்டி ஃபோக்கல் லென்ஸ் பொருத்திக்கொள்ள அறிவுறுத்த  மாட்டார். அதேபோல நீங்கள் செலவு குறித்துக் கேட்டிருப்பதற்கும் துல்லியமான பதிலைச் சொல்ல முடியாது.

ஏனெனில், உங்களுடைய பிரச்னை என்ன, உங்களுக்கு எப்படிப்பட்ட லென்ஸ் தேவைப்படுகிறது, அது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட லென்ஸா, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதா, எந்த மாதிரியான அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது, அதாவது ரோபோட்டிக் அறுவை சிகிச்சையா, லேசர் சிகிச்சையா என்பதையெல்லாம் பொறுத்து சிகிச்சைக்கான செலவு வேறுபடும். எனவே, நீங்கள் முதலில் கண் அறுவை சிகிச்சை மருத்துவரை நேரில் அணுகி, உங்கள் பிரச்னை மற்றும் தேவைகளைச் சொல்லி ஆலோசனை பெறுங்கள். அவர் உங்களுக்கான சரியான சிகிச்சை, அதற்கான செலவு உள்ளிட்ட தகவல்களைச் சரியாகச் சொல்வார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.