குழந்தைகளை தாக்கும் மூளை தின்னும் அமீபா தொற்று, கேரளாவில் பரவல், குமரியில் சுகாதாரத்துறை எச்சரிக்கை!

கேரள மாநிலத்தில் ப்ரைமரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் எனப்படும் மூளையை தாக்கும் அமீபா தொற்று பரவி வருகிறது. மூளையை தின்னும் அமீபா நோய் என அழைக்கப்படும் இந்த தொற்றுக்கு, ஏற்கெனவே 3 குழந்தைகள் பலியான நிலையில், கோழிக்கோட்டில் 14 வயது சிறுவனுக்கு இந்த தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், கேரளாவின் எல்லையோரத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த நோய் குறித்து முன்னெச்சரிகையுடன் இருக்கும்படி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், "ப்ரைமரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் நோய் மூளையைத் தாக்கும் ஒரு கொடிய உயிர்க்கொல்லி தொற்று நோய். இந்நோயானது நைக்லீரியா பௌலேரி என்னும் ஒரு வகை அமீபாவினால் பரவக்கூடியது. மூளைக்காய்ச்சலில் காணப்படும் அறிகுறிகளான தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, கழுத்து விரைப்பு, மாயத்தோற்றம் மற்றும் வலிப்பு போன்றவை இந்நோய்க்கான அறிகுறிகள்.

குளம்

இந்நோயினால் கேரளாவில் நிகழ்ந்த மரணங்களை கருத்தில் கொண்டு மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பொதுமக்கள், முக்கியமாகக் குழந்தைகள் தேங்கியுள்ள மற்றும் மாசுபட்ட தண்ணீரில் குளிப்பதையும், நீந்துவதையும் தவிர்க்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் இதனை உறுதிப்படுத்த வேண்டும். தேங்கியுள்ள குளங்கள் மற்றும் குட்டைகளைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நீச்சல் குளங்களை பொதுசுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களின்படி சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதற்காக, நீச்சல் குளங்களில் போதுமான குளோரினேஷன் செய்ய வேண்டும். இதனை, அந்தந்தப் பகுதிகளில் உள்ள சுகாதாரப்பணியாளர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதிக ஆபத்துள்ள பகுதிகளில் குளோரினேஷன் அளவானது 2 PPM-க்கு மேல் இருப்பதை சுகாதாரப் பணியாளர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். குளோரினேஷன் அளவு 2 PPM-க்கு மேல் இருக்கும் போது நைக்லீரியா பௌலேரி அமீபா உயிர்வாழாது. எனவே, உள்ளாட்சி அமைப்புகள் நீர்நிலைகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் சுகாதாரமற்ற குளம் மற்றும் குட்டைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

அமீபா

அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் இந்நோய்க்கான அறிகுறிகள் உள்ளதாக சந்தேகப்படும் நபர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்குவதுடன், அவர்களை உடனடியாக மேல்சிகிச்சைக்காக மூன்றாம் நிலை பராமரிப்பு சேவைக்கான வசதியுள்ள மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்" என தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.