கள்ளக்குறிச்சி... கள்ளச்சாராயம்... கண்ணீர்... - உயிர்போகும் வரை கைகட்டி நின்ற அரசு இயந்திரம்

கள்ளக்குறிச்சி நகராட்சியில் கருணாபுரம் என்ற பகுதி இருக்கிறது. இங்கு கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. அதை பலர் அருந்தியிருக்கிறார்கள். சில மணி நேரங்களிலேயே அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக வயிற்றுப்போக்கு, கை, கால் மரத்து போதல், காய்ச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்த மக்கள் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் குவிந்திருக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு அதீத பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையின் மூலம் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம், புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதுவரையில் 37 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார்கள். இதில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

கள்ளச்சாராய மரணம்

கள்ளக்குறிச்சிச் கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கன்னுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் (49), அவரது மனைவி விஜயா (42), கோவிந்தராஜின் சகோதரர் தாமோதரன் (40) ஆகிய மூவரும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். இங்குதான் அப்பகுதி மக்கள் கள்ளச்சாராயம் வாக்கி குடித்து இருக்கிறார்கள். மொத்தமாக 109 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுபாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் 37 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். இதில் 5 பேர் பெண்கள் ஆவர். முன்னதாக கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் இறுதி சடங்குக்கு சென்ற இடத்திலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. அதையும் சிலர் வாங்கி குடித்திருக்கிறார்கள். உடனேயே அவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை போலீஸார் நடத்திய சோதனையில் 1100 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 10-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய எஸ்.பி.யாக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிசெல்வி மற்றும் உதவி ஆய்வாளர் பாரதி, கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் உதவி ஆய்வாளர் சிவசந்திரன், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர் மனோஜ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கள்ளச்சாராய மரணம்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரம் பகுதியில் பாக்கெட் சாராயம் குடித்ததால் 72 பேர் உடல் உபாதை காரணமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் அனைவரும் மெத்தனால் என்னும் திரவத்தை அருந்தியிருப்பது கண்டறியப்பட்டது. மெத்தனால் கொண்டு வந்த விற்பனை செய்த கன்னுக்குட்டி என்னும் கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது காவல்துறையின் கவனக்குறைவால் நடந்திருப்பது கண்டறியப்பட்டு, கள்ளக்குறிசி எஸ்.பி. உள்ளிட்ட 10 காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும். யாருக்கும் அரசு பரிவு காட்டாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின்

இந்த சூழலில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிறகு அவர் தனது அறிக்கையில், "கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் தயாரிக்க மெத்தனால் கொடுத்தவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் மெத்தனால் இருப்பை முழுமையாக கண்டறிந்து அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யப்படும்" என சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் சிபிசிஐடி டிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீஸார் இந்த விஷ சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

கள்ளச்சாராய மரணம்

இதன் பின்னணி குறித்து பேசுவோர், "கள்ளக்குறிச்சியில் நடந்திருக்கும் இந்த கள்ளச்சாராய உயிரிழப்புகளை முக்கிய காரணம் கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டதே காரணம். அதாவது மதுபான தொழிற்சாலைகளில் சில வேதிப்பொருட்கள் மூலமாக மெத்தனால் நீர்த்துப்போக செய்யப்படும். ஆனால் கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களில் அதிக போதைக்காக மெத்தனாலை அப்படியே பயன்படுத்துகிறார்கள். அதை குடிப்போரின் உணவு மண்டலமும், நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும். பிறகு நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழப்பை சந்திப்பார்கள். அதுதான் இங்கு நடந்திருக்கிறது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் மெத்தனால் பயன்பாடு நடந்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இப்பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கிறார்கள். வேலை செய்துவிட்டு, உடல் வலியைப் போக்குவதற்காக மது குடிப்பது வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதிலும் கள்ளச்சாராயம் விலை மலிவாக இருப்பதால் அதையே பல நேரங்களில் பயன்படுத்துகிறார்கள். கூடவே இப்பகுதி மலைகள் நிறைந்ததாக இருப்பதால் அதிக அளவு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது." என்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், "கள்ளகுறிச்சியில் 38 பேர் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலகவேண்டும். கடந்த ஆண்டு மே மாதம் மரக்காணம், மதுராந்தகத்தில் 30 பேர் உயிரிழந்தனர். அப்போது அரசு செயல்பட்டு இருக்கவேண்டும். கள்ளகுறிச்சி ஆட்சியர் கள்ளச் சாராயம் குடித்து இறக்கவில்லை என்றார். பிறகு உயிரிழப்பு அதிகரித்தபோது அரசு ஒப்புக்கொண்டது. கள்ளகுறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சரான எ.வ.வேலுவின் ஆதரவாளரான எம்.எல்.ஏ.வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கைது செய்தவர்களை விடுவிக்க சொல்லியுள்ளனர். சாராய வணிகரான கோவிந்தராஜ் மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு பேனர் வைத்துள்ளார். ஆகவே மதுவிலக்குதுறை அமைச்சர் முத்துசாமி, பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் இச்சாவுகளுக்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும். கள்ளச் சாரயம், கஞ்சா விற்பனையில் தமிழ்நாடு தள்ளாடுகிறது" என தெரிவித்துள்ளார்.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள்

இதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "சாராய விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். கடந்த ஆண்டு விழுப்புரத்தில் அதிகமானோர் கள்ளச்சாராயத்தால் பலியாகினர். ஓராண்டுக்குள் கள்ளக்குறிச்சியில் 35க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். போலீஸார் விழிப்போடு இருக்க வேண்டும். இதற்கு அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் உள்ளவர்கள் பொறுப்பேற்க வேண்டும். நூற்றுக்கணக்கானோர் கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றால், அங்கு கள்ளச்சாராய விற்பனை அதிகமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது" என்றிருக்கிறார்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, "தி.மு.க ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள கள்ளச்சாராய உயிரிழப்புகள், 1980 காலகட்டத்தில் ஏற்பட்டதைப் போல, தமிழகம் 40 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. நேற்றைய தினம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரை பதவி விலக்கம் செய்ய, முதல்வர் ஸ்டாலினை கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச்சாராயத்தினால் பறிபோனதற்குப் பின்னரும், முதல்வராகத் தொடர தனக்குத் தார்மீக உரிமை உள்ளதா என்பதை, அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்" என வெடித்திருக்கிறார்.

"கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலும் தோல்வியடைந்து விட்டது. இதற்கு முக்கியக் காரணம் சாராய வியாபாரிகளுக்கு தி.மு.க கொடுத்த ஆதரவுதான்" என பா.ம.க தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதேபோல் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராதாகிருஷ்ணன்,அறப்போர் இயக்கம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய அறப்போர் இயக்கத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், "இவ்வளவு பேர் உயிரிழந்து இருக்கிறார்கள் என்றால் ஒருநாளில் நடந்த விஷயம் அல்ல. பல நாட்களாக நடந்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கூட இப்படித்தான் நடந்தது. எல்லாம் முடிந்த பிறகு 200 லிட்டர் மெத்தனால் கைப்பற்றப்பட்டதாக சொல்கிறார்கள். இதெல்லாம் மக்களை ஏமாற்றும் செயல். கல்வராயன் மலை பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருவதாக செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. முன்பு நடந்த சம்பவத்திலும், தற்போதைய சம்பவத்திலும் தி.மு.கவினர் தான் ஈடுபட்டுள்ளனர். கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் நீக்குகிறோம் என வெற்று அறிக்கை மட்டும் வெளியிடுகிறார்கள். ஆனால் அவர்கள் மீது சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்?. அதுகுறித்து யாரும் வாய் திறக்கவில்லை. மது ஒழிப்பு துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு செல்லாமல், சென்னையில் இருக்கிறார்கள். இதெல்லாம் எந்த விதத்தில் நியாயம்?. உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலக வேண்டும். குற்றத்தில் தொடர்புடைய அனைவருக்கும் கொலை குற்றம் செய்தவர்களுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும். மேலும் அதை பொது வெளியில் தெரியப்படுத்த வேண்டும்" என்றார்.

முதலில் ஒரு கள்ளச்சாராயம் சம்பவம் நடந்தது, அதில் பலியானவர்களுக்கு இறுதி சடங்கு நிகழ்விலும் கள்ளச்சாரயம் விற்கப்பட்டது என்றால், இது அரசு நிர்வாகத்தின் செயலற்ற தன்மையை காட்டுவதாக வேதனை தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். மேலும் முதலிலே மரணத்துக்கு காரணம் கள்ளச்சாரயம் தான் என அரசு ஒப்புக்கொண்டிருந்தால் இறுதி சடங்கிலாவது கள்ளச்சாரயம் விற்பனை தடுக்கப்பட்டிருக்கும். ஆனால் உயிரிழப்புகள் நடக்கும் வரை அரசு நிர்வாகம் கைகட்டி வேடிக்கை பார்த்திருப்பது அவலத்தின் உச்சம்..!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.