கோதுமை ரவை பிரியாணி செய்முறை

நம்மில் பலருக்கு பிரியாணி என்றாலே ஒரு தனி மோகம் தான். பிரியாணி வாசம் ஒன்று இருந்தால் போதும் அது எப்பேர்ப்பட்ட பொருளாக இருந்தாலும் அதை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும். அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய கோதுமை ரவையை வைத்து வெஜிடபிள் பிரியாணி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

கோதுமை ரவையை தினமும் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை குறையும். சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக கோதுமை ரவை திகழ்கிறது. இந்த கோதுமை ரவையை சாப்பிடுவதால் ஆற்றல் அதிகரிக்கும். எலும்புகள் வலுப்பெறும். இதய ஆரோக்கியம் மேம்படும். கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் சமச்சீர் உணவில் இருக்கக்கூடிய அத்தனை சத்துக்களும் இந்த கோதுமை ரவையில் இருக்கிறது.

தேவையான பொருட்கள்

கோதுமை ரவை – ஒரு கப்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
பிரியாணி இலை – ஒன்று
பட்டை – ஒன்று
ஏலக்காய் – ஒன்று
கிராம்பு – 2
கல்பாசி – சிறிது
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 2
தக்காளி – ஒன்று
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
புதினா – ஒரு கைப்பிடி அளவு
கொத்தமல்லி – 1/2 கைப்பிடி அளவு
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தயிர் – ஒரு டேபிள் ஸ்பூன்
காளான் – ஒரு கப்
பச்சை பட்டாணி – 1/4 கப்
கேரட் – ஒன்று
பீன்ஸ் – 5
தண்ணீர் – 2 கப்
எலுமிச்சை பழச்சாறு – ஒரு டீஸ்பூன்

செய்முறை

முதலில் அடுப்பில் கடாயை வைத்து கோதுமை ரவையை சேர்த்து ஐந்து நிமிடம் வறுக்க வேண்டும். பிறகு இதை ஒரு தட்டில் மாற்றிக்கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றி இவை இரண்டும் நன்றாக காய்ந்ததும் அதில் பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, கல்பாசி இவற்றை சேர்க்க வேண்டும்.

பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும். நீலவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாயும் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி இவற்றை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி லேசாக வதங்க ஆரம்பித்ததும் இதில் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு இவை அனைத்தையும் சேர்த்து குறைந்த தீயில் இரண்டு நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.

பிறகு இதில் தயிர் சேர்த்து கலக்க வேண்டும். காளான், பச்சை பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட் மற்றும் பீன்ஸ் போன்ற காய்கறிகளையும் சேர்த்து மிதமான தீயில் இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். பிறகு தண்ணீர் ஊற்றி எலுமிச்சம் பழச்சாறை பிழிந்து விட வேண்டும்.

தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் நாம் வறுத்து வைத்திருக்கும் கோதுமை ரவையை அதில் சேர்த்து ஒரு கிளறு கிளறி விட்டு குக்கரை மூடி விசில் போட்டு விட வேண்டும். மிதமான தீயில் இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு குக்கர் விசில் சென்றதும் குக்கரை திறந்து நன்றாக கிளறிவிட்டு பரிமாறலாம். சுவையான கோதுமை ரவை வெஜிடபிள் பிரியாணி தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: மாம்பழ பர்பி செய்முறை

கோதுமை ரவையை உப்புமா, கஞ்சி என்று செய்து கொடுத்து சாப்பிடாதவர்கள் கூட இப்படி பிரியாணி செய்து கொடுத்தால் விரும்பி வேண்டி சாப்பிடுவார்கள்

The post கோதுமை ரவை பிரியாணி செய்முறை appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.