Doctor Vikatan: பருப்பு சாப்பிட்டால் வாய்வு பிரச்னை... பருப்பைத் தவிர்ப்பதுதான் தீர்வா?

Doctor Vikatan: என் வயது 34. நான் சைவ உணவுப் பழக்கம் உள்ளவன். அதனால் புரத தேவைக்காக பருப்பு, ராஜ்மா, கொண்டைக்கடலை போன்றவற்றை தினமும் ஒன்று சாப்பிட வேண்டியிருக்கிறது. ஆனால், இவற்றைச் சாப்பிட்டால் எனக்கு வயிற்று உப்புசமும், வயிற்றில் தசைப்பிடிப்பும், வாய்வுத் தொந்தரவும் வருகின்றன. அப்படியானால் நான் பருப்பு உள்ளிட்ட உணவுகளை அறவே தவிர்க்க வேண்டுமா?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

வயிற்று உப்புசம், வாய்வுத் தொந்தரவு, வயிற்றைக் கசக்கிப் பிடித்து விடுவிக்கிற மாதிரியான வலி.... இந்தப் பிரச்னைகளை நம்மில் பலரும் அடிக்கடி அனுபவிப்பதுண்டு. நீங்கள் சாப்பிடும் உணவானது தவறானதாக இருக்கலாம் அல்லது அந்த உணவு உங்களுக்கு ஏற்றுக்கொள்ளாததன் விளைவாக இந்தப் பிரச்னைகள் வரலாம். நீங்கள் குறிப்பிட்டுள்ள பருப்பு உணவுகள் ஆரோக்கியமானவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனாலும், அவை உங்களுக்கு ஏற்றுக்கொள்ளாமல் போவதால்தான் உங்களுக்கு அந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன. 

ஐபிஎஸ் எனப்படும் இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம் (Irritable bowel syndrome) பிரச்னையும் ஐபிடி எனப்படும்  இன்ஃப்ளமேட்டரி பவல் டிசீஸ் (Inflammatory bowel disease) பிரச்னையும் உள்ளவர்களுக்கும், அல்சர் பாதிப்பு உள்ளவர்களுக்கும்கூட குத்துவது போன்ற வயிற்றுவலியும், வாயு பிரிகிற பிரச்னையும், வயிற்றுத் தசைகளை இழுத்துப் பிடித்ததுபோன்ற வாய்வுக் கோளாறும் ஏற்படலாம். பருப்பு வகைகள் கூட இவர்களுக்கு ஏற்றுக்கொள்ளாமல் போகலாம்.  குறிப்பாக, ராஜ்மா, மொச்சை, வெள்ளைக் கொண்டைக்கடலை போன்ற சில பருப்பு வகைகள் ஏற்றுக்கொள்ளாமல், மேற்குறிப்பிட்ட செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தலாம். ராஜ்மா, மொச்சை, கொண்டைக்கடலை போன்றவற்றில் ஏராளமான ஊட்டச்சத்துகள் இருந்தாலும், சிலருக்கு அவை ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். 

பருப்பு உள்ளிட்ட சில உணவுகள் செரிமானமாக அதிக நேரம் எடுப்பதால், வாய்வுத் தொந்தரவையும், வயிற்று உப்புசத்தையும் ஏற்படுத்தலாம். அப்படியானால், இவற்றை எல்லாம் நாங்கள் சாப்பிடவே கூடாதா என்ற கேள்வி சிலருக்கு வரலாம். இந்தப் பருப்பு வகைகளை ஊறவைக்கும்போதும், சமைக்கும்போதும் நிறைய இஞ்சி சேர்ப்பதை வழக்கமாகப் பின்பற்றுங்கள். தவிர, இவற்றை வாரத்துக்கு இரண்டு நாள்களுக்கு மட்டுமே சாப்பிடுங்கள். மதியத்துக்கும் சாப்பிட்டு, அதையே இரவு உணவுக்கும் சாப்பிடுவதையும் தவிருங்கள். ஆரோக்கியமானது என்பதற்காக அளவுக்கதிகமாகவும் சாப்பிடக்கூடாது. 

பருப்பு

சிலருக்கு நீண்ட நேரம் பசியோடு இருந்தாலும் வயிற்றில் தசைப்பிடிப்பு, எரிச்சல் போன்ற உணர்வுகள் ஏற்படலாம். அதேபோல ஓர் உணவு பிடிக்கிறது என்பதால் அதிகம் உண்பதாலோ, நீண்ட நேரம் பசியோடு இருந்து விட்டு சாப்பிடும்போது, சரியாக மென்று சாப்பிடாமல், அவசரம் அவசரமாக விழுங்குவதாலோகூட  வயிற்று வலி, வாயுத் தொந்தரவு போன்றவை வரலாம். ஒவ்வாத உணவுகளைச் சாப்பிட்டு இதுபோன்ற அவதிகளை எதிர்கொள்ளும்போது, 300 மில்லி தண்ணீரில் 2 டீஸ்பூன் சீரகம் அல்லது சோம்பு சேர்த்துக் கொதிக்கவைத்த நீரைக் குடிப்பது உடனடி நிவாரணம் தரும். அவ்வப்போது 30 முதல் 50 மில்லியாக நாள் முழுவதும் குடித்துக்கொண்டே இருக்கலாம். சாதாரண வெந்நீர்கூட பலனளிக்கும். 

பயணம் செய்கிற போது வெந்நீரும், வாழைப்பழமும் எடுத்துச் செல்லுங்கள். உங்கள் வயிற்றைப் பதம் பார்க்காத உணவு வாழைப்பழம். வெந்நீரை அவ்வப்போது சிறிது சிறிதாகக் குடித்துக்கொண்டே இருப்பது வயிற்றுப் பிரச்னைகள் வராமல் காக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.