ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம்: ஆனா, விவசாயம்தான் நல்லாருக்கு... Instagram விவசாயியின் ரியல் ஸ்டோரி!
முன்பெல்லாம் நல்லா சம்பாதிச்சுட்டு கிராமத்தில போய் செட்டிலாகிடனும், சுத்தமான காற்று, குயில் சத்தம், அமைதியான வாழ்க்கைனு கடைசி காலத்தை அப்படியே கழிச்சிடனும் என பலர் சொல்வதுண்டு.
ஆனால், இப்போது படித்த படிப்பு, படிப்புக்கான வேலை, வேலைக்கான சம்பளம் என அனைத்தையும் விடுத்து விவசாயத்தில் சிலர் ஈடுபடும் போக்கையும் கவனிக்க முடிகிறது.
பணிச்சுமையைக் காரணம் காட்டி, சிலர் சொந்த வேலை என விவசாயத்திற்குள் நுழைவதுண்டு. இப்படி அனைத்தையும் விடுத்து விவசாயத்தில் ஈடுபட அடுத்த மாதத்தைப் பாதிக்காத பொருளாதார நிலை வேண்டும். அலுவலகத்தில் செய்த வேலையை விடக் களத்துமேட்டில் அதிக வேலை செய்யவேண்டும்.
இருந்தபோதும் `பட்டுத் தெரிவது தான் வாழ்க்கை என வேலையைத் துறந்த சிலர் இதில் ஜெயிக்கவும் செய்திருக்கிறார்கள்; சிலருக்கு ஏமாற்றமும் கடனும் மிஞ்சி இருக்கிறது.
இப்படி வேலையை விடுத்து இன்ஸ்டாவில் கலக்கி வரும் விவசாயி தான் ஆந்திரபிரதேசத்தை சேர்ந்த அபிஷேக் ரெட்டி. இவருக்கு 10-ம் வகுப்பு படிக்கும்போதே டிசைனிங்கில் ஆர்வம் இருந்துள்ளது. 12-ம் வகுப்பு படிக்கும்போது டிசைனிங் படிக்க ஆரம்பித்திருக்கிறார்.
கல்லூரிக்குச் செல்லாமல் நான்கு வருடங்கள் முழுவதுமாக ஃப்ரீலான்ஸ் வேலையைச் செய்துள்ளார். இதற்கிடையில் ஹைதராபாத்தில் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கி கிரியேட்டிவ் டைரக்டராக பணிபுரிந்துள்ளார்.
வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கு பிராண்டிங் யோசனைகளையும் வழங்கி வந்திருக்கிறார். வாடிக்கையாளர்களில் ஒருவருக்கு இவரது வேலை மிகவும் பிடித்து போக ஆண்டுக்கு ரூ.1.5 கோடியை வழங்கியுள்ளார்.
வேலை சிறப்பாக சென்று கொண்டிருந்தாலும் பணிச்சுமை கழுத்தை நெறிக்க ஆரம்பித்துள்ளது. ஒருநாளைக்கு தொடர்ச்சியாக 15 மணிநேரங்கள் வேலை செய்திருக்கிறார். வார இறுதிநாட்கள், விடுமுறை நாட்களில் கூட வேலை துரத்த அப்போது தான் விவசாயத்தின் பக்கம் எண்ணம் திரும்பியுள்ளது. இரண்டு வருடங்கள் சம்பளத்தை பெற்ற பின்னர், 22 வயதில் வேலையை விட்டிருக்கிறார்.
பாமிடி நகருக்கு அருகிலுள்ள ஓபுலாபுரம் கிராமத்தில் ஒரு பண்ணையை வாங்கி, தனது தாய் மற்றும் சகோதரியுடன் விவசாயம் செய்து வருகிறார். இவரது தாய் நீலா ரெட்டி ஓய்வு பெற்ற அரசு ஊழியர், விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் சீக்கிரமாகவே அரசு வேலையிலிருந்து ஓய்வு பெற்று விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஐஐடி காரக்பூர் பட்டதாரியான அவரது சகோதரி ஐஸ்வர்யாவும் குடும்பத்துடன் பண்ணையில் வேலை செய்ய வேண்டும் என்று ஆவலாக இருக்கிறார்.
`சில்லி சென்செய்’ (silly sensei) என இன்ஸ்டா பக்கத்தில் ரெட்டி பிரபலமாக அறியப்படுகிறார். தனது விவசாயப் பயணத்தை பாலோவர்களுடன் வீடியோவாக பகிர்ந்து வருகிறார்.
இது குறித்து அபிஷேக் ரெட்டி கூறுகையில், ``நான் 70 வயது வரை வாழ்வேன் என்ற வேடிக்கையான எண்ணம் எனக்கு இருந்தது. அதனால் வாழ்க்கையை இரண்டு பாகமாக பிரித்து, முதல் பாதியில் நன்றாகச் சம்பாதிக்க வேண்டும். அதன் பிறகு ஓய்வு பெற்று சேமித்த தொகையை நிம்மதியாக கழிக்க வேண்டும் என்று எண்ணினேன்.
தற்போது, நாங்கள் பண்ணையை பணமாக்குவதில் பணியாற்றி வருகிறோம், அதற்கு இன்னும் சில வேலைகள் தேவைப்படுகின்றன, ஆனால், ஓரிரு ஆண்டுகளில் ஆண்டுக்கு சுமார் ரூ.2 கோடி சம்பாதிக்க நாங்கள் திட்டமிட்டு உழைத்து வருகிறோம்’’ என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.