Agri Tourism : 40 ஏக்கர், 2,000 மாமரங்கள்... மாம்பழங்களுக்காகவே வேளாண் சுற்றுலா நடத்தும் தம்பதி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு தம்பதி இயற்கை விவசாயத்துடன் கூடிய சுற்றுலாவை அறிமுகம் செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். மாமரங்களுக்கு இடையில் குடில்கள் அமைத்து அதில் சுற்றுலா வருபவர்களை தங்க வைத்து அவர்களுக்கு விவசாயத்தையும் கற்றுக்கொடுக்கின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம், ரத்தினகிரி மாவட்டத்தில் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் 40 ஏக்கரில் அல்போன்சா மாந்தோப்பு உள்ளது. நெல் விவசாயத்துடன் கூடிய இந்த மாந்தோட்டத்தை வேளாண் சுற்றுலா பண்ணையாக மாற்றி கணேஷ் அசோக்கும் அவரது மனைவியும் சேர்ந்து நடத்தி வருகின்றனர்.

இது குறித்து கணேஷ் கூறுகையில், நான் பி.காம் பட்டப்படிப்பு முடித்தபோது பல இடங்களிலிருந்து வேலை வாய்ப்பு வந்தது. ஆனால், அதை நிராகரித்து விட்டு என் தந்தையோடு சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டேன். ஒவ்வோர் ஆண்டும் கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டால் மாம்பழ விவசாயிகளுக்கு கொண்டாட்டம் ஆரம்பித்துவிடும்.

பண்ணையில்

எனது தந்தை 1978-ம் ஆண்டு 1,000 அல்போன்சா மாமரங்களை நட்டு வளர்த்து வந்தார். அவர் மரங்களை நட்ட நேரம் கடும் வறட்சி இருந்தது. சரியான சாலை வசதியோ, மின்சார வசதியோ கிடையாது. அவர் மரங்களுக்கு தண்ணீர் எடுத்துச்சென்று ஊற்றுவதை பார்த்திருக்கிறேன். அந்த மரங்கள் காய்க்க ஆரம்பித்த போது நானும் எனது தந்தையுடன் சேர்ந்து கொண்டேன். நான் அவருடன் சேர்ந்த பிறகு மேலும் 1,000 மாமரங்களை நடவு செய்தேன். இப்போது 2,000 மரங்கள் இருக்கின்றன. அவற்றை இயற்கை முறையில் வளர்க்கிறோம். இயற்கை முறையில் விவசாயம் செய்வது எளிதல்ல. தந்தையும், மகனும் சேர்ந்து எப்படி இயற்கை முறையில் விவசாயம் செய்கின்றனர் என்று அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். நாங்கள் எப்படி மாட்டுச்சாணத்திலிருந்து இயற்கை உரங்கள் மற்றும் வேப்பிலையிலிருந்து பூச்சிவிரட்டிகளை தயாரிக்கிறோம் என்பதை பார்க்க எங்களது தோட்டத்திற்கு விருந்தினர்கள் வர ஆரம்பித்தனர்.

எங்களது மாந்தோப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததால் இப்பண்ணையை வேளாண்மைக்கான சுற்றுலாவாக மாற்ற முடிவு செய்தேன். இதற்காக மும்பை அருகில் இந்தியாவின் முதல் வேளாண் சுற்றுலா தொடங்கிய சந்திரசேகர் பட்சாவ்லேயின் பண்ணைக்கு சென்று பார்த்தேன். அது எனக்கு மிகவும் பிடித்துப்போனது. உடனே வேளாண்மை சுற்றுலாவை எனது மாந்தோப்பில் செயல்படுத்த விரும்பினேன். எனது தோட்டத்தை பார்க்க அடிக்கடி வெளியூர்களிலிருந்து விருந்தினர்கள் வருவார்கள். ஒரு முறை மாம்பழத்தை எனது தந்தை பேக்கிங் செய்து கொண்டிருந்தபோது நாங்கள் எவ்வாறு இயற்கை விவசாயம் செய்கிறோம் என்பதை பார்க்க விருந்தினர்கள் வந்திருந்தனர். அவர்கள் அருகில் உள்ள நகரங்களில் தங்குவது வழக்கம். அப்படி வருபவர்களை எனது மாந்தோப்பில் தங்க வைக்க முடிவு செய்து எங்களது பேக்கிங் பகுதியை அப்படியே தங்கும் இடமாக மாற்றிவிட்டோம்.

பண்ணையில்

இப்போது மாந்தோப்புக்குள் 5 தங்கும் அறைகள் இருக்கின்றன. இதில் ஓர் அறை மண்ணில் செய்யப்பட்ட குடில் ஆகும். கோடையில் எங்களுடைய மாந்தோப்பில் தங்க வருபவர்களுக்கு பழுத்த மாம்பழங்களை எப்படி அடையாளம் காண்பது, எப்படி பழங்களை பறிப்பது, எப்படி மரத்தில் ஏறுவது, எப்படி பழுக்க வைப்பது, எப்படி சட்னி, ஜூஸ் தயாரிப்பது என்று கற்றுக்கொடுக்கிறோம்.

அதோடு மாந்தோப்புக்கு நடுவே நெல் விவசாயமும் செய்கிறோம். விருந்தினர்களுக்கு எப்படி நெல் விவசாயம் செய்ய வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறோம். அவர்களை டிராக்டரில் அழைத்து சென்று, நெல் வயலை காட்டுவதோடு, டிராக்டர் ஓட்டவும் அனுமதிக்கிறோம். விவசாயத்தில் ஆர்வம் காட்டாதவர்களை படகு சவாரி, பறவைகளை பார்த்தல், பழங்களை எப்படி பதப்படுத்துதல் என்பது குறித்து கற்றுக்கொடுக்கிறோம். விருந்தினர்களுக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட மராட்டியர் உணவுகளை வழங்குவதோடு ஒவ்வொரு சாப்பாட்டிலும் மாங்காய் அல்லது மாம்பழம் என ஏதாவது ஒரு வடிவத்தில் இடம் பெற்று இருக்கும்.

பண்ணைச் சுற்றுலா

வேளாண் சுற்றுலா மூலம் எங்களுக்கு நேரடியாக வாடிக்கையாளர்களும் கிடைக்கின்றனர். எங்களது மாம்பழம் இப்போது மும்பை, புனே, நாசிக் உட்பட மகாராஷ்டிரா முழுவதும் செல்கிறது. மாம்பழம் மட்டுமல்லாது காய்கறிகள் மற்றும் கீரையும் பயிரிடுகிறோம். கொங்கன் பகுதியில் விளையக்கூடிய அல்போன்சா மாம்பழம் மிகவும் பிரபலம் ஆகும். கொங்கன் பகுதியை உள்ளடக்கிய கோவாவை போர்ச்சுகல் ஆண்ட போது போர்ச்சுகல் ராணுவ ஜெனரலாக இருந்த அபோன்சோ டி அல்புகெர்கி பெயரில் அல்போன்சா மாம்பழ ரகம் உருவாக்கப்பட்டது என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.