Doctor Vikatan: உடலில் நீர் கோத்துக்கொள்வதால் டைட் ஆகும் உடைகள்... காரணமும் தீர்வுகளும் என்ன?

Doctor Vikatan: என் வயது 32. எனக்கு அடிக்கடி உடலில் நீர்கோத்துக்கொள்ளும் பிரச்னை வருகிறது. உடைகள் அணியும்போது திடீரென அவை டைட் ஆவதை வைத்து இதைக் கண்டுபிடிக்கிறேன். இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம், எப்படி மீள்வது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

ஷைனி சுரேந்திரன்

உடலில் நீர் கோத்துக்கொண்டால், தண்ணீர் குடிக்கும் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும் போல என பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், அது மிகவும் தவறானது. இன்னும் சொல்லப் போனால் நீங்கள் குறைவான அளவு தண்ணீர் குடிக்கும்போதுதான், உடல் அதைத் தக்க வைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கும். எனவே, தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலிலுள்ள நச்சுகள் வெளியேற்றப்படுவதோடு, உடலில் நீர் கோப்பதும் தவிர்க்கப்படும். 

உடலில் நீர் கோத்துக்கொண்டதாக உணரும்போது நீங்கள் கவனிக்க வேண்டிய முதல் விஷயம், உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்பின் அளவு. சிப்ஸ், அப்பளம், கெட்ச்சப், சாஸ், கருவாடு என உப்பு அதிகம் சேர்த்த உணவுகளைச் சாப்பிடுகிறீர்கள் என்றால் அதன் விளைவாக உடலில் நீர்கோப்பது அதிகரிக்கும். எனவே, அப்படிப்பட்ட உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். இதற்கடுத்து நீங்கள் கவனிக்க வேண்டியது, உங்கள் உணவில் போதுமான அளவு புரதச்சத்தைச் சேர்த்துக்கொள்கிறீர்களா என்பதை.  புரதச்சத்தும், இரும்புச்சத்தும் உடலில் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். இந்த இரண்டிலும் குறைபாடு ஏற்படாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அதை உடனே சரிசெய்வதன் மூலம், உடலில் நீர்கோத்துக்கொள்வதும் உடனடியாக சரியாவதை உணர்வீர்கள்.

டொமேட்டோ சாஸ்

புரதச் சத்தானது தண்ணீரை இழுத்துக்கொண்டு, உங்கள் உடலின் திரவ நிலையை பேலன்ஸ்டாக வைக்கும். கல்லீரலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஆல்புமின் என்ற புரதம், ரத்தத்தில் உள்ள திரவநிலையை சமநிலையில் வைத்து, அது வெளியே கசியாமல் தடுப்பதால், நீர் கோத்துக்கொண்டு உடல் உப்புவதும் தவிர்க்கப்படும். பொட்டாசியம், மக்னீசியம் சத்துகள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள். அவை உங்கள் உடலின் சோடியம் அளவை பேலன்ஸ் செய்ய உதவும்.

தினமும் ஏதேனும் ஓர் உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.  வாக்கிங், சைக்கிளிங், டான்ஸிங், ஸ்போர்ட்ஸ், ஜிம்முக்கு சென்று பயிற்சிகள் செய்வது என அது எந்த மாதிரியான பயிற்சியாகவும் இருக்கலாம். ஆனால், தினமும் அரை மணி நேரம் முதல் 45 நிமிடங்கள் வரை அந்தப் பயிற்சியைச் செய்வதைத் தவறவிடாதீர்கள். முறையாக உடற்பயிற்சி செய்வோருக்கு உடலில் நீர் கோத்துக்கொள்ளும் பிரச்னை வருவதில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.