DMK: `100% வெற்றியிலும் 6% குறைந்த வாக்குகள்’ - திமுக-வுக்கு ஷாக்... யதார்த்த நிலவரம்தான் என்ன?!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், அதற்கு முன்னதாக வெளியான பல்வேறு கருத்துக் கணிப்புகளை நசநசத்து போக வைத்துவிட்டது. பல்வேறு மாநிலங்களில் பாஜக அதிக இடங்களை வெல்லும் என்று சொன்ன நிலையில், அக்கட்சி குறைவான இடங்களிலே வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஒருசில மாநிலங்களில் ஆளும் கட்சிகள் கூடுதல் இடங்களும், சில இடங்களில் குறைவான இடங்களும் வெற்றி பெற்றிருக்கின்றன. அதேபோல பல்வேறு மாநிலங்களில் பிரதான கட்சியின் வாக்கு சதவிகிதமும் கடுமையாகக் குறைந்திருக்கிறது.

அறிவாலயம்

தமிழகத்தைப் பொறுத்தவரை, மொத்தமுள்ள 39 இடங்களில் அனைத்து தொகுதிகளிலும் ஆளும் திமுக கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. இருந்தபோதிலும், கடந்த முறையை விட ஆறு விழுக்காடு வாக்கு சதவிகிதம் குறைந்திருப்பதும் முக்கியமான பேசுபொருளாகியிருக்கிறது.

அதாவது, 2019 மக்களவைத் தேர்தலில், திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயுஎம்எல், கொமதேக என 8 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போது, 38 தொகுதிகளில் வெற்றி பெற்று, 53 சதவீதம் வாக்குகளைப் பெற்றது இந்த கூட்டணி. இந்த தேர்தலிலும் 8 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இறுதி நிலவரப்படி, திமுக கூட்டணி 46.97 சதவீதம் வாக்குகளை தான் பெற்றது.

தனிப்பட்ட முறையில் கட்சிவாரியாக பார்த்தால், கடந்த 2019-ல் 33.53 சதவீதம் வாக்குகள் பெற்ற திமுக, இந்த தேர்தலில் 26.93 சதவீதம் தான் பெற்றது. 12.72 சதவீதம் பெற்ற காங்கிரஸ் தற்போது 10.67 சதவீதமும், இந்திய கம்யூனிஸ்ட் 2.41 சதவீதத்துக்கு பதில் 2.15 சதவீதமும் வாக்குகளை பெற்றுள்ளன. அதே நேரம், கடந்த முறை 2.38 சதவீதம் வாக்குகள் பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தற்போது 2.52 சதவீதமும், ஐயுஎம்எல் கடந்த முறையைப் போல் தற்போதும் 1.1 சதவீதமும் வாக்குகளை பெற்றுள்ளது.

ஆளும் அரசின் வாக்கு சதவிகிதம் இந்தளவுக்குக் குறைந்திருப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் இது வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா என்பது குறித்தும் விரிவாக விசாரித்தோம்.

ஏன் குறைந்தது வாக்கு சதவிகிதம் என்பது தொடர்பாக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம், "இந்தமுறை திமுக-வின் வாக்கு சதவிகிதம் குறைந்திருப்பது என்னவோ உண்மைதான். கடந்த முறை விசிக, மதிமுக, ஐஜெகே, கொமதேக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து திமுக மொத்தம் 24 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இந்தமுறை கொமதேக நீங்கலாக மற்ற கட்சிகள் அனைத்தும் தனி சின்னத்தில் போட்டியிட திமுக இம்முறை கொமதேக-வுடன் சேர்த்து மொத்தம் 22 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. குறைந்த இடங்களில் போட்டி என்பது ஒரு காரணம். அதைவிட முக்கிய காரணம் ஆளும் அரசின் மீது உள்ள அதிருப்தியும் தான். தவிர, கடந்த முறை இணைந்து நின்ற அதிமுக பாஜக இந்த குறை தனித்தனியே கூட்டணி அமைத்ததும் வாக்குகள் பிரிந்ததற்கு முக்கிய காரணம்.

தேர்தல்

மறுபக்கம், அதிமுக, பாஜக கூட்டணி தனித்துப் போட்டியிட்டதால் வாக்குகள் பிரிந்து திமுக-வின் வெற்றியை மிகவும் எளிதாக்கியிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை. இதனைத் தவிர்த்து விருதுநகர் போன்ற பகுதியில் கடுமையான போட்டி இருந்ததைப் பார்க்க முடிந்தது. அந்த தொகுதியில் அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆரின் சொந்த தொகுதியான அருப்புக்கோட்டையிலேயே திமுக மிகவும் குறைவான வாக்குகளையே பெற்றிருந்தது. இதுபோல, திருநெல்வேலி, தென்காசி, நாமக்கல், போன்ற பகுதிகளிலும் வாக்கு சதவிகிதம் குறைந்திருக்கிறது. அவ்வளவு ஏன், தலைநகர் சென்னை கூட மயிலாப்பூர், தி.நகர் உள்ளிட்ட ஒருசில இடங்களில் வாக்கு சதவிகிதம் குறைந்திருக்கிறது. தனித்து நிற்கும் நாம் தமிழரின் வாக்கு சதவிகிதமும் அதிகரித்து இருக்கிறது. இதே நிலை போனால் சட்டமன்ற தேர்தலில் திமுக கடுமையான போட்டியைச் சந்திக்க நேரிடும்" என்றார்கள் விரிவாக.

வாக்கு சதவிகிதம் குறைந்தது தொடர்பாகவும், திமுகவின் அடுத்த கட்ட திட்டம் குறித்தும் திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடன் பேசினோம், "வாக்கு சதவிகிதம் குறைந்திருக்கிறது என்பது ஏற்புடையதல்ல. இந்தியாவில் இதுவரை 18 பொதுத்தேர்தல்கள் நடைபெற்றிருக்கிறது. இதுவரை ஒரு தேர்தல் போல மற்றொரு தேர்தல் நடந்திருக்கிறதா... கிடையவே கிடையாது. 1996,1998,1999 ஆகிய மூன்று முறை தேர்தல் தொடர்ந்து நடைபெற்றது. ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி மாறின. ஒவ்வொரு தேர்தலிலும் முடிவுகளும் மாறியது. வாக்கு சதவிகிதமும் கட்சிகளுக்கு உயர்ந்து, குறைந்தது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் 39 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றியை முழுவதுமாக கொடுத்திருக்கிறார்கள். இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு இருந்திருந்தால், இந்தளவுக்கு முழுமையான வெற்றிக்கு வாய்ப்பில்லை.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

அதேசமயத்தில் வாக்கு சதவிகிதம் குறைந்திருப்பதை மிகவும் எளிதாகவும் எடுத்துவிட முடியாது. எந்தெந்த பகுதிகளில் வாக்குகள் குறைந்திருக்கிறதோ, அங்கெல்லாம் என்ன காரணம் என்பதும் கண்டறியப்பட்டுச் சரிசெய்யப்படும். அதேபோல, இந்த தேர்தலைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 221 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. மீதமுள்ள 13 தொகுதிகளில் மட்டுமே அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள் முன்னிலையில் இருக்கிறது. இதே நிலை நீடித்தால் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 220-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. அதிமுக, பாஜக கூட்டணியில் தேர்தலைச் சந்தித்தால் திமுகவின் வெற்றி வாய்ப்பு இன்னும் அதிகமாகுமே தவிர அது திமுக-வின் வெற்றியை எந்த வகையிலும் பாதிக்காது. அரசின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டுசென்றிருக்கிறோம். திமுக அரசின் ஆட்சியில் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். திமுக-வுக்கு மாற்றாக மற்றொரு கட்சியைத் தேடும் தேவை இல்லாத வகையில் தமிழகத்தில் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இனி கண்டிப்பாகத் தமிழகத்தில் திமுக ஆட்சியே நிலையாக நீடித்து நடக்கும்" என்றார்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.