பிரட் மெதுவடை செய்முறை

பொதுவாக மாலை நேரத்தில் வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, பள்ளி முடித்து வீட்டிற்கு வரும் குழந்தைகளாக இருந்தாலும் சரி ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அப்படிப்பட்ட நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் இல்லத்தரசிகளும், ஏதாவது செய்ய வேண்டும் என்றால் அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டுமே என்று யோசித்துக் கொண்டு இருப்பவர்களுக்கும் எந்தவித முன் ஏற்பாடும் இல்லாமல் திடீரென்று செய்யக்கூடிய ஒரு அருமையான வடையைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம்.

வடை செய்ய வேண்டும் என்றால் உளுந்தை ஊற வைத்து அதை பக்குவமாக அரைத்து அதனுடன் பச்சை மிளகாய் வெங்காயம் போன்றவற்றை சேர்த்து வடை சுட வேண்டும். இப்படி உளுந்தை நாம் பக்குவமாக அரைக்காமல் சிறிது தண்ணீர் சேர்த்து விட்டால் அது வடையாக வராது. இப்படி கஷ்டப்படுவதற்கு பதிலாக நாலு துண்டு பிரட்டை வைத்து சூப்பரா மெதுவடை செய்வது எப்படி என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

தேவையான பொருட்கள்:

  • பிரட் – 4 துண்டு
  • ரவை – 1/4 கப்
  • அரிசி மாவு – 1/2 கப்
  • தயிர் – 3/4 கப்
  • வெங்காயம் – 1
  • பச்சை மிளகாய் – 2
  • கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது – 1/4 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் பொரிப்பதற்கு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பிரட்டு துண்டை சிறிது சிறிதாக பிரித்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ரவை, அரிசி மாவு, தயிர், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி சீரகம் இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

வடை மாவு பதத்திற்கு இது வரவேண்டும். அப்படி வரவில்லை என்னும் பட்சத்தில் தேவைக்கேற்றார் போல் மறுபடியும் தயிரை கலந்து மாவு பதத்திற்கு கொண்டு வாருங்கள். தண்ணீர் ஊற்றக்கூடாது. இந்த தயிரும் புளிக்காத தயிராக இருக்க வேண்டும். புளித்த தயிரை ஊற்றி விடாதீர்கள். இதை நன்றாக பிணைந்து வடை மாவு பதத்திற்கு வந்த பிறகு இரண்டு கைகளிலும் எண்ணெயை நன்றாக தடவிக் கொள்ளுங்கள்.

இதில் பிரட் சேர்க்கப்பட்டுள்ளதால் இது கையில் ஒட்டும் என்பதற்காக நாம் எண்ணையை தடவிக் கொள்கிறோம். அல்லது ஒரு பிளாஸ்டிக் கவரிலோ அல்லது இலையிலோ எண்ணெயை தடவி விட்டு அதிலேயும் நாம் இந்த மாவை வைத்து உருண்டையாக தட்டி மெதுவடை போல நடுவில் ஓட்டை போட்டு எடுத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு கடாயை வைத்து வடையை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அடுப்பை குறைந்த தீயில் வைத்துவிட்டு நாம் தட்டி வைத்திருக்கும் வடையை எடுத்து எண்ணெயில் போட வேண்டும். இதில் பிரட்டு சேர்த்திருப்பதால் உடனேயே கருகும் வாய்ப்பு உள்ளது என்பதால் குறைந்த தீயில் வைத்து அவ்வப்பொழுது பிரட்டி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

இரண்டு புறமும் நன்றாக சிவந்த பிறகு இதை அப்படியே எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளலாம். எண்ணெய் வடிந்ததும் சாப்பிட கொடுக்கலாம். பிரட்டில் இருக்கக்கூடிய இனிப்பு சுவையும் இதில் நாம் சேர்த்துள்ள உப்பு, பச்சை மிளகாய் போன்றவற்றின் சுவையும் ஒன்றாக சேர்ந்து இருப்பதால் மிகவும் சுவையாக இருக்கும். அதோடு இதில் நாம் ரவை, அரிசி மாவு சேர்த்திருப்பதால் மொறுமொறுவென்றும் இருக்கும். மிகவும் எளிமையில் விரைவில் செய்யக்கூடிய ஒரு பிரெட் மெதுவடை தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: மொறு மொறு முறுக்கு செய்முறை

சட்டு என்று நினைத்த மாத்திரத்தில் செய்யக்கூடிய இந்த வடையை உங்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் செய்து கொடுத்து பாருங்கள். கண்டிப்பான முறையில் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

The post பிரட் மெதுவடை செய்முறை appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.