Doctor Vikatan: எடை குறைவான குழந்தைக்கு உணவில் வெண்ணெய் சேர்த்துக் கொடுக்கலாமா?

Doctor Vikatan: என் பெண் குழந்தைக்கு ஒரு வயதாகிறது. எடை குறைவாக இருக்கும் என் குழந்தைக்கு உணவில் வெண்ணெய் சேர்த்துக் கொடுக்கலாமா? நெய்யைவிட வெண்ணெய் சிறந்ததா? குழந்தையின் எடை அதிகரிக்க வேறு என்ன கொடுக்கலாம்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

குழந்தைக்கு ஒரு வயது ஆனதும் வெண்ணெய், நெய் இரண்டையுமே உணவில் சேர்த்துக் கொடுக்கலாம். இரண்டுமே குழந்தையின் ஆற்றலை அதிகப்படுத்துபவைதான். வெண்ணெய், நெய் இரண்டிலுமே சாச்சுரேட்டடு கொழுப்பு அமிலங்கள் ( saturated fatty acids) உள்ளன. வெண்ணெயில் பியூட்ரிக் அமிலம் (Butyric acid) அதிகமிருக்கும். அதனால் வெண்ணெயை நீண்ட நாள்களுக்கு பத்திரப்படுத்திவைத்து உபயோகிக்க முடியாது. அதில் ஒருவித காறல் வாடை வர ஆரம்பித்து விடும். அதனால் வெண்ணெயின் சுவையும் மாறலாம். அதுவே, வெண்ணெயோடு ஒப்பிடும்போது நெய்யை அதிக நாள்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். அதில் காறல் வாடையும் சீக்கிரம் வராது.

சமைக்கிற உணவில் சேர்க்க வேண்டும் என்றால் நெய்விட்டு சூடாக்கிக் கொடுக்கலாம். அதுவே ஒரு ஸ்பிரெட் போல பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால் (உதாரணத்துக்கு பிரெட்டில்) வெண்ணெய் சிறந்த சாய்ஸ். இரண்டிலும் சாச்சுரேட்டடு கொழுப்பு அமிலம் உள்ளதால், அளவுக்கதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உதாரணத்துக்கு, ஒரு வயதுக் குழந்தைக்கு ஒரு நாளைக்கு 5 கிராம் அளவுக்கு வெண்ணெயோ, நெய்யோ பயன்படுத்தினால் போதுமானது. 

உங்கள் குழந்தை எடை குறைவாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே, அவளுக்கு வெண்ணெய், நெய்யை விடவும்,  மீடியும் செயின் ட்ரைகிளிசரைடு (Medium chain triglycerides )  உள்ள எண்ணெயைப் பயன்படுத்தலாம்.  இதை எவ்வளவு கொடுக்கலாம் என்பது குறித்து உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகரிடம் பேசுங்கள். குழந்தை எடை குறைவாக இருக்கிறதா, உயரமும் குறைவாக இருக்கிறதா போன்றவற்றைப் பார்த்து, அதற்கேற்ப  மீடியும் செயின் ட்ரைகிளிசரைடு உள்ள எண்ணெயை எவ்வளவு பயன்படுத்தலாம் என்று அவர்கள் அறிவுறுத்துவார்கள்.

நெய்

உங்கள் குழந்தைக்குப் புரதச்சத்தும் மிக முக்கியம். அதுவும் எடை அதிகரிக்க அவசியம். பால் மற்றும் பால் பொருள்கள், அசைவத்தில் சிக்கன், முட்டை, மீன் போன்றவற்றிலும் புரதச்சத்து அதிகமிருக்கும். குழந்தைக்கு ஒவ்வொரு வேளை உணவு கொடுக்கும்போதும் புரதச்சத்து இருக்கும்படி பார்த்துக் கொடுக்க வேண்டும்.  இவை தவிர, மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் எனப்படும் நுண்ணூட்டச்சத்துகள் குறைபாடு உள்ளதா என்றும் பாருங்கள். அது குறித்தும் உங்கள் டயட்டீஷியனிடம் ஆலோசனை பெறுங்கள்.  குழந்தைக்குக் கொடுக்கும் எந்த உணவும் தரமானதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். கொழுப்பு, கார்போஹைட்ரேட் என எல்லாமே ஆரோக்கியமான தேர்வாக இருக்க வேண்டியது முக்கியம். மூன்று வேளை பிரதான உணவுகளைக் கொடுத்துவிட்டு, இடைப்பட்ட வேளைகளில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் கொடுக்கலாம். சாப்பாடு கொடுப்பதற்கு முன் திரவ உணவுகள் அதிகம் கொடுக்க வேண்டாம்.

குழந்தைகளுடைய வயிறு மிகச் சிறியது என்பதால் சாப்பாட்டுக்கு முன்பு திரவ உணவுகளைக் கொடுத்தால் அவர்களால் பிரதான உணவை சாப்பிட முடியாது.  அதேபோல சாப்பாட்டுக்கு முன்பு, சிப்ஸ், முறுக்கு, சமோசா மாதிரியான நொறுக்குத்தீனிகளைக் கொடுக்க வேண்டாம். இவற்றில் ஊட்டச்சத்துகளும் கிடையாது என்பதால் இத்தகைய உணவுகளைத் தவிர்ப்பதே நல்லது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.