15 நாள்களில் 6 மலைவாழ் மக்கள் உயிரிழப்பு; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி - ஈரோட்டில் அதிர்ச்சி!

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள தலமலை ஊராட்சிக்குட்பட்ட தடசலட்டி, இட்டரை மற்றும் மாவநத்தம் ஆகிய மலை கிராமங்களில் பழங்குடியின மக்கள் வசித்து அதிக அளவில் வசித்து வருகின்றனர். கடந்த மாதம் 24-ம் தேதி மாவநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாரம்மா (40), தடசலட்டி கிராமத்தைச் சேர்ந்த கவுரியம்மாள் (65), ரங்கன் (75), மாதி (85), ஆகியோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது.

ஆய்வு

தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு மேல் வாந்தி பேதி ஏற்பட்டதாலும், உரிய சிகிச்சை கிடைக்காததாலும் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர். அதேபோல் கடந்த 5-ம் தேதி இட்டரை கிராமத்தைச் சேர்ந்த மாரே (67), கேலன் (60) ஆகிய முதியவர்கள் இருவரும் வாந்தி, பேதி ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர். 15 நாள்களில் தொடர்ந்து 6 பேர் உயிரிழந்தது தாளவாடி மலைக் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தடசலட்டி கிராமத்தைச் சேர்ந்த நீலி மற்றும் அவரது கணவர் பாலன் ஆகியோர் உடல் நிலை சரியில்லாததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இட்டரை கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனையிலும், லட்சுமி என்பவர் கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, மலைக்கிராமங்களில் மருத்துவக் குழுவினர், உணவு பாதுகாப்புத் துறை, வருவாய்த் துறை ஆகியோர் வீடு வீடாகச் சென்று அங்குள்ள மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்துள்ளனர்.

இது குறித்து சுகாதாரம் மற்றும் ஊராட்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், "கடந்த சில நாள்களுக்கு முன் திருவிழா நடைபெற்றுள்ளது. அந்த திருவிழாவில் உணவு உட்கொண்டதால் வாந்தி, பேதி ஏற்பட்டிருக்கலாம்... அல்லது தண்ணீராலும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. வாந்தி, பேதியான 6 பேரும் அடுத்த சில மணி நேரங்களிலேயே உயிரிழந்துள்ளனர். மூன்று மலைக்கிராமங்களில் உள்ள தண்ணீர் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம்.

ஆய்வு

தண்ணீர்த் தொட்டிகளில் குளோரின் பவுடர்கள் போடப்பட்டுள்ளது. தற்போது மூன்று மலைக்கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, மருத்துவர்கள், செவிலியர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவசரத் தேவைக்காக மூன்று 108 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. யாருக்கேனும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இரண்டு நாள்களாக யாருக்கும் உடல்நலக் கோளாறு ஏற்படவில்லை" என்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.