Happy Teeth: பல் எடுத்ததும் Ice cream சாப்பிடச் சொல்வது ஏன்?

பல்லை அகற்ற வேண்டிய சூழல் வரும்போது அதற்கான முன்தயாரிப்புகள் என்ன, பல் எடுத்த பிறகு என்னென்ன விஷயங்களைப் பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தகவல்களைத் தருகிறார் சென்னையைச் சேர்ந்த முக சீரமைப்பு அறுவை சிகிச்சை மருத்துவர் சுரேஷ் வீரமணி.

"பல் எடுப்பது என்பது சில நிமிடங்களில் நிறைவடையும் சிகிச்சைதான். ஆனால், அதற்கான முன்தயாரிப்புகளில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

பல் அகற்றும் சிகிச்சை

பல் அகற்றும் சிகிச்சைக்கு முன்பு மருத்துவரிடம் ஏதாவது நோய்க்கு, குறைபாட்டுக்கு சிகிச்சை பெறுகிறார்களா என்ற தகவலையும், அந்தப் பிரச்னைகளுக்கு என்ன மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதையும் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தாலும் அதை பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும்.  பல் எடுக்கும்போது சில நேரங்களில் சிலருக்கு ரத்தக்கசிவு அதிகமாக ஏற்படலாம்.

இதய நோயாளிகளில் ரத்தம் உறையாமைக்கான மாத்திரை (Blood Thinner) எடுப்பவர்கள் அதை பற்றி முன்பாக தெரிவிக்கும்போது, ரத்தக்கசிவு அதிகமாக ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவிட்டு சிகிச்சையைத் தொடங்க முடியும்.

இதற்கு முன்பு பல்லுக்கு வேறு சிகிச்சை எடுத்திருந்தால் அதையும் மருத்துவரிடம் முன்பே தெரிவிக்க வேண்டும். இதுதவிர வேறு அறுவை சிகிச்சைகள், குடல்வால் நீக்கம் உள்ளிட்ட சிறிய சிகிச்சைகள் செய்யப்பட்டு இருந்தாலும் அதுபற்றி தகவல் தெரிவிக்க வேண்டும்.

Heart Patients- பல் சிகிச்சை

காரணம், பல் எடுப்பதற்கு முன்பாக அந்தப் பகுதி மரத்துப் போவதற்கு போடப்படும் ஊசி (Local Anesthesia) சிலருக்கு எதிர்வினைகளை ஏற்படுத்தலாம். வேறு அறுவை சிகிச்சை செய்தது பற்றி தெரிவிக்கும்போது அந்தச் சிகிச்சையில் மயக்க மருந்து கொடுத்திருப்பார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, கூடுதல் தைரியத்துடன் Local Anesthesia கொடுக்க முடியும்.

பல் எடுத்த பிறகு...

பல் அகற்றப்பட்ட பிறகு அந்த இடத்தில் பஞ்சுடன் கூடிய மென் துணிவலையை (Gauze) வைத்து வாயால் அழுத்திப் பிடிக்கச் சொல்வோம். பல் எடுத்த இடத்தில் ஏற்படும் ரத்தக்கசிவு இதுபோல அழுத்தம் கொடுக்கும்போது கட்டுப்படும். அரை மணி நேரத்துக்கு Gauze-ஐ கட்டாயம் அழுத்திப் பிடித்த நிலையில் வைத்திருக்க வேண்டும். அழுத்திப் பிடிக்க வேண்டுமே தவிர, அதை வைத்த நிலையிலேயே மெல்லுவது போன்ற அசைவைக் கொடுக்கக் கூடாது.

பல் அகற்றப்பட்ட பிறகு...

Ice cream சாப்பிடச் சொல்வது ஏன்?

அசைவு இருந்தால் Gauze அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிடும். இதனால் ரத்தக்கசிவு தொடர்ந்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், Gauze-ஐ வாயில் வைத்திருக்கும் அரை மணி நேரமும் எச்சிலை விழுங்கிக்கொண்டே இருக்க வேண்டும்.

எச்சிலைத் துப்பும்போது நேர்மறை அழுத்தம் உருவாகி, ரத்தக்கசிவைத் தூண்ட வாய்ப்புள்ளது. அரை மணி நேரத்துக்குப் பிறகு  Gauze-ஐ எடுத்துவிட வேண்டும். எடுத்த உடன் ஐஸ்க்ரீம் (Ice cream) அல்லது குளிர்ந்த ஜூஸ் அல்லது ஐஸ் வாட்டர் குடிக்கலாம்.

ஜூஸ் என்றால் கார்பனேட்டட் குளிர்பானங்கள் குடிக்கக் கூடாது. சில்லென்ற பழச்சாறு மட்டுமே அருந்தலாம். இப்படிச் செய்யும்போது ரத்தக்கசிவு கட்டுப்படும். அதற்குப் பிறகு எடுத்துக்கொள்ள மாத்திரைகள் கொடுத்திருப்பார்கள். அதைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பல் எடுப்பதற்கு முன்பாக கொடுக்கப்பட்ட  Local Anesthesia-வின் விளைவு குறையத் தொடங்கும்போது மாத்திரையின் விளைவு ஏற்படத் தொடங்கும். இதனால் வலி கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

Dr. Suresh Veermani

பல் எடுத்த இரண்டு நாள்களுக்கு அதிக காரமாகவோ, சூடாகவோ சாப்பிடக்கூடாது. அந்த நேரம்தான் பல் எடுத்த இடத்தில் இருக்கும் ரணம் ஆறத்தொடங்கும். அந்த நேரத்தில் சூடாகவோ காரமாகவோ சாப்பிட்டால் அந்தப் பகுதியில் எரிச்சல், வலி ஏற்படும். மேலும், ரத்தக்கசிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. நாக்கு வைத்து, விரல் வைத்து பல் எடுத்த இடத்திலிருக்கும் இடைவெளியைத் தொட்டுத் தொட்டுப் பார்க்கக்கூடாது.

பல் எடுத்த இடத்தில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உறைந்திருக்கும். அதைத் தொட்டுப் பார்க்கும்போது உறைந்திருந்த ரத்தம் மீண்டும் கசியத் தொடங்க வாய்ப்புள்ளது. தலைக்கு குளிப்பது, வேலைக்குச் செல்வது போல அன்றாடம் செய்யும் வேலைகளை எந்தத் தடையுமின்றி மேற்கொள்ளலாம். படுத்து நீண்ட நேரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதில்லை" என்றார்.

Happy Teeth

பல் எடுத்தால் முகத்தோற்றம் மாறிவிடுமா? அடுத்த அத்தியாயத்தில்....

பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடைகளையும் ஆலோசனைகளையும் அளிக்கும் Happy Teeth தொடர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும்.
பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கவும். உங்கள் கேள்விகளுக்கு பல் மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.