Intermittent Fasting டயட்... இதயநோயை ஏற்படுத்துமா?

அமெரிக்கன் ஹெல்த் அசோசியேஷன் என்ற அமைப்பு ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் (Intermittent Fasting) டயட்டை பின்பற்றி 8 மணி நேர இடைவெளியில் உணவு எடுத்துக்கொள்பவர்களுக்கு இதய ரத்தநாள நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 91% அதிகமாக உள்ளதாகத் தெரிவித்தது. இந்த ஆய்வில் இளம்பருவத்தினர் அதிகம் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களின் இரண்டு நாள்கள் உணவு உட்கொள்ளும் முறையின் அடிப்படையிலும் அவர்கள் எழுதிக்கொடுத்த தகவல்களின் அடிப்படையில் மட்டுமே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு முடிவானது சக ஆராய்ச்சியாளர்களின் மதிப்புரைக்கு (Peer Review) அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் இது பேசுபொருளாக மாறியது.

ஊட்டச்சத்து நிபுணர் சங்கீதா ஜெயகுமார்

உடல் ஆரோக்கியம், எடைக் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்ளுக்காக இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் எனும் உணவுமுறையை பலரும் பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆய்வு முடிவு பலர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் பற்றி உணவியல் ஆலோசகர் சங்கீதாவிடம் பேசினோம்.

"நம் முன்னோர்கள் மத நம்பிக்கையின் காரணமாக இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் எனும் உணவுமுறையை உருவாக்கினர். நாளடைவில் இந்த உணவுமுறை உடல்நலத்துக்கு நல்லது என மருத்துவ ரீதியாக உணரப்பட்டதால் 12, 14, 16 மற்றும் 18 மணிநேரம் உணவு உட்கொள்ளாமல் இருக்கும் விரதத்தைப் பின்பற்றினார்கள். இந்த உணவுமுறையில் விரத நேரம் (Fasting Window),  உணவு உண்ணும் நேரம் (Eating Window) என இரண்டு விஷயங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

உணவு உண்ணாமல் இருக்கும் நேரத்தை அதிகப்படுத்தி உணவு உண்ணும் இடைவேளையைக் குறைப்பதே இதன் நோக்கம். இந்த உணவுமுறையில் விரத நேரத்தை அதிகப்படுத்துவதன் மூலம் உடலில் ஏற்கெனவே சேகரிக்கபட்டுள்ள கலோரிகள் ஆற்றலாக மாற்றப்பட்டு எடை குறைவதற்கு உதவி செய்யும். இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் உணவுமுறையை முறையான வழிகாட்டல் இல்லாமல் மேற்கொள்ளும்போது சில உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

இந்த உணவுமுறையைப் பின்பற்றும்போது அதிக புரதச்சத்து, நார்ச்சத்துள்ள சரிவிகித உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த உணவுமுறையைப் பின்பற்றும்போது அதிக புரதச்சத்து, நார்ச்சத்துள்ள சரிவிகித உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். எல்லா வயதினரும் இந்த உணவுமுறையைப் பின்பற்றலாம். அல்சர், அசிடிட்டி போன்ற உடல் உபாதைகள் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் முறையைப் பின்பற்றுவதால் இதய நோய்கள் வரும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இந்த உணவுமுறையில் சரிவிகித உணவை எடுத்துக்கொள்ளாமல்,  துரித உணவுகள், நொறுக்குத்தீனிகளை மட்டுமே எடுத்துக்கொண்டால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்றார்.

இதய நோய்களை ஏற்படுத்துமா இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் என இதய மருத்துவர் ஆனந்த் சொக்கலிங்கத்திடம் கேட்டோம்:

"அமெரிக்காவில் கடந்த 10 வருடங்களாகதான் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் உணவுமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சியில் தகவல்கள் அனைத்தும் தோராயமாகவே இருக்கின்றன. இதை வைத்து இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்று சொல்லிவிட முடியாது. கலாசாரம் மற்றும் மத ரீதியாக காலம் காலமாக உணவு உண்ணாமல் விரதம் மேற்கொள்ளும் பழக்கம் இந்தியாவில் இருந்து வருகிறது.

இதய மருத்துவர் ஆனந்த் சொக்கலிங்கம்

இரண்டு, மூன்று நாள்கள்கூட தொடர்ந்து சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். ஒரு தனி மனிதனின் உடல்நிலையைப் பொறுத்து உண்ணாவிரதத்தின் காலஅளவு மாறுபடும். 12 முதல் 16 மணி நேரம் வரை அதிகபட்சமாக உணவு உண்ணாமல் விரதம் மேற்கொள்ளலாம். இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் (Intermittent Fasting) உடல் மற்றும் மன ரீதியாக நிறைய நன்மைகளைக் கொடுக்கிறது. உடல் பருமன், கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளை இந்த உணவுமுறை கட்டுப்படுத்தும் என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவும். நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மன வலிமையை அதிகரிக்க உதவும். இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் முறையை சரியாகப் பின்பற்றினால் வாழ்க்கை முறையே ஆரோக்கியமானதாக மாறிவிடும். இந்த உணவுமுறை பற்றிய ஆராய்ச்சியில் நாங்களும் ஈடுபட்டு வருகிறோம். இதைப் பின்பற்ற விரும்புபவர்கள் தகுந்த நிபுணர்களின் ஆலோசனைப்படி பின்பற்றுவதே சிறந்தது" என்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.