Israel: நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரன்ட் கோரும் ICC வழக்கறிஞர்; எதிர்ப்பு தெரிவிக்கும் பைடன்!

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த ஏழு மாதங்களாகப் போர் நடத்திவருகிறது. போரின் தொடக்கத்தில் இஸ்ரேலுக்கு நிதியுதவி, ஆயுத உதவிகளை அமெரிக்கா செய்துவந்தது. இருப்பினும், சமீபத்தில், ஐ.நாவில் இஸ்ரேலுக்கு எதிராக போர்நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, அமெரிக்க தன்னுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை எதிர்க்காததற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அமெரிக்காவை விமர்சித்திருந்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் (Joe Biden) சமீப காலமாகத் தொடர்ந்து போர்நிறுத்தம் கோரிக்கை விடுத்துவருகிறார்.

பைடன் - நெதன்யாகு

ஜோ பைடனின் இந்த திடீர் மாற்றம்கூட இந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்காவில் தேர்தல் அதிபர் தேர்தல் வருவதாலும், அங்கு பாலஸ்தீன ஆதரவு பெருகிவருவதாலும்தான் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், போர் குற்றங்களுக்காக நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை வழக்கறிஞர் கரீம் கான் (Karim Khan) கைது வாரண்ட் கோரியிருப்பதை ஜோ பைடன் எதிர்த்திருக்கிறார்.

முன்னதாக, ஐ.சி.சி-யின் தலைமை வழக்கறிஞர் கரீம் கான், காஸாவில் போர் மூலம் பொதுமக்களை பட்டினி போட்டது, வேண்டுமென்றே அவர்கள்மீது தாக்குதல் நடத்தியது மற்றும் கொலை என உயிரிழப்புகளை ஏற்படுத்தியதற்காக நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர்மீது கைது வாரண்ட் கோரியிருந்தார். குறிப்பாக, ``இஸ்ரேலுக்கு தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. ஆனால், சர்வதேச மனிதாபிமான சட்டத்துக்கு இணங்க வேண்டிய கடமையிலிருந்து இஸ்ரேல் தப்ப முடியாது" என்று கரீம் கான் தெரிவித்திருந்தார்.

ஜோ பைடன்

அதேசமயம், கொலை, பிணைக்கைதிகளைப் பிடித்துவைத்தல், பாலியல் வன்கொடுமை, உள்ளிட்ட போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் உடன்பட ஹமாஸின் மூன்று முக்கிய தலைவர்களுக்கு எதிராகவும் கரீம் கான் கைது வாரண்ட் கூறியிருக்கிறார். இப்படியிருக்க அமெரிக்க வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற யூத அமெரிக்க பாரம்பர்ய நிகழ்வில் பேசிய ஜோ பைடன், `` இஸ்ரேலிய தலைவர்களுக்கு எதிரான கைது வாரண்டுகளுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விண்ணப்பத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையில் எந்தவொரு ஒற்றுமையும் இல்லை" என்று கூறினார்.

நெதன்யாகு

கரீம் கானின் இந்த கைது வாரண்ட் கோரிக்கைக்கு இஸ்ரேல், ஹமாஸ் என இரு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வந்திருக்கிறது. இதில் ஹமாஸ், `ஏழு மாதங்களாக இஸ்ரேல் ஆயிரக்கணக்கான குற்றங்களை இழைத்த பிறகு அவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் கோரிக்கை வந்திருக்கிறது என்று விமர்சித்திருக்கிறது. அதேபோல் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, `இது தார்மீக மீறல். யூதர்கள் மீது இனப்படுகொலை நடத்திவரும் ஹமாஸுக்கு எதிராக நியாயமான போரை இஸ்ரேல் நடத்துகிறது. இக்கால யூத எதிர்ப்பாளர்களில் கரீம் கானும் ஒருவர் என்று கூறியிருக்கிறார்.

பாலஸ்தீனத்தில் நடப்பது இனப்படுகொலை என சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா தொடர்ந்த வழக்கையும் இஸ்ரேல் எதிர்கொண்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.