காதில் கேட்ட வேடிக்கையான சத்தம்... பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

இங்கிலாந்தைச் சேர்ந்த 55 வயதான பெண் டெனிஸ் விங்ஃபீல்ட். இவருக்கு, நீண்ட நாள்களாகவே காதில் தொடர்ந்து விநோதமான சத்தம் கேட்டிருக்கிறது. இரவு நேரங்களில் இந்தச் சத்தம் அவரைத் தூங்கவிடாமல் செய்திருக்கிறது. காதில் இரைச்சல் கேட்கும் டின்னிடஸ் (Tinnitus)போன்ற சாதாரண பிரச்னையாக இருக்கலாம் எனக் கடந்துவிட்டார் டெனிஸ்.

காதில் கேட்ட வேடிக்கையான சத்தம்

இறுதியாக மருத்துவர்களின் பரிசோதனையில் அவருக்கு மூளைப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்துப் பேசிய டெனிஸ்," பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டேன். ஆரம்பத்தில் இதை நான் பெரிதுபடுத்தவில்லை. ஒருகட்டத்தில் இதுகுறித்து என் உறவினர்களிடம் தெரிவித்தபோது காது - மூக்கு - தொண்டை மருத்துவரிடம் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

என்னைப் பரிசோதனை செய்த மருத்துவருக்கு என்ன பிரச்னை என்பதைக் கண்டறிய முடியவில்லை. எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்தபோதுதான் எனக்கு மூளையில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரிய வந்தது. இது ஒலிகோடெண்ட்ரோக்லியோமா (Oligodendroglioma) வகை புற்றுநோய் என்றும் அதில் இரண்டாவது நிலையில் உள்ளதாகவும் மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதன் பிறகு கிரானியோட்டமி (craniotomy) என்ற அறுவை சிகிச்சையின் மூலம் மண்டை ஓட்டுப்பகுதியில் குறிப்பிட்ட பகுதியிலுள்ள எலும்பை அகற்றி அதன் வழியாக மூளையில் இருந்த புற்றுநோய் கட்டிகள் அகற்றப்பட்டன. 9 மணி நேரம் தொடர்ந்து இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கட்டிகள் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் தொடர்ந்து கீமோதெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறேன். புற்றுநோய் கட்டியில் வளர்ச்சி இருக்கிறதா என்பதை அவ்வப்போது எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்தும் பரிசோதித்து வருகிறேன்" என்கிறார். இது குறித்துப் பேசிய நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் கிம்பர்லி ஹோங்கால், "இந்த வகை புற்றுநோய் பொதுவாக 40 முதல் 60 வயதுடைய முதியவர்களுக்கு ஏற்படக்கூடியது.

Cancer

இவ்வகை புற்றுநோய் குணப்படுத்தக்கூடியது. இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்பு குறைந்த அளவே ஏற்படும். இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காதில் இரைச்சல், கவனக்குறைவு போன்ற அறிகுறிகள் இருக்கும்.

இதற்கு கிரானியோட்டமி சிகிச்சையே போதுமானது. பொதுவாக கிரானியோட்டமி அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இதய பிரச்னைகள், பக்கவாதம் போன்றவை ஏற்படலாம். எனவே, இவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பது நல்லது" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.