Dog Tag: சங்கிலி பரிசளித்த இஸ்ரேலியர்; கழுத்தில் அணிந்துகொண்ட எலான் மஸ்க்! - காரணம் என்ன?
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய போர், 50 நாள்களைக் கடந்து, தீவிரமாக நடைபெற்றுவருகிறது. உலகெங்கும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் பல்வேறு நாடுகளில் மக்கள் பேரணிகளை நடத்திவருகின்றனர். இதற்கிடையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஹமாஸ் 69 பிணைக்கைதிகளையும், இஸ்ரேல் 150 பாலஸ்தீனக் கைதிகளையும் விடுவித்திருக்கின்றன.
போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால், இரு தரப்பினரும் மேலும், கைதிகளைப் பரிமாறிக் கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் ஒரு பயனர், ``வெள்ளையர்களுக்கு எதிராக யூதர்கள் வெறுப்பைத் தூண்டிவிடுகிறார்கள்" எனக் கருத்து பதிவிட்டிருந்தார். இந்தக் கருத்தை எக்ஸ் வலைதளத்தின் தற்போதைய நிறுவனரும், உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், ஆமோதிக்கும் வகையில், ``நீங்கள் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறீர்கள்" எனப் பதிலளித்துப் பதிவிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, ``யூதர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரம்" எனப் பிரிட்டன், அமெரிக்கா தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று இஸ்ரேலுக்குச் சென்றிருந்த எலான் மஸ்க், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கைச் சந்தித்தார். அப்போது பேசிய இஸ்ரேல் அதிபர் ஐசக், ``யூதர்களுக்கு எதிரான மனநிலை அதிகரித்துவருவதை எதிர்த்துப் போராட வேண்டியது மிகவும் அவசியம்" என எலான் மஸ்க்கிடம் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பால் கைதுசெய்யப்பட்ட பிணைக்கைதிகளின் குடும்பத்தினரை, எலான் மஸ்க் சந்தித்து உரையாடினார்.
அப்போது பிணைக்கைதி ஒருவரின் தந்தையான மால்கி என்பவர், `எங்கள் இதயங்கள் காஸாவில் பிணைக்கைதிகளுடன் இருக்கின்றன என்று பொறிக்கப்பட்ட நாய் சங்கிலியை (Dog Tag) எலான் மஸ்குக்கு வழங்கினார். அந்த அன்பளிப்பை ஏற்றுக்கொண்ட எலான் மஸ்க், அதைக் கழுத்தில் அணிந்துகொண்டார். மேலும், "உங்கள் அன்புக்குரியவர்கள் விடுவிக்கப்படும் வரை ஒவ்வொரு நாளும் இந்த நாய் சங்கிலியை அணிந்து கொள்வேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.