Bigg Boss 7: ``என் பெயரைப் பயன்படுத்தி பணம் கேட்டால் கொடுக்காதீர்கள் - பிரதீப் வேண்டுகோள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடைசி வரை இருப்பார், டைட்டில் வின்னர் இவர்தான் எனப் பலரையும் நினைக்க வைத்தவர் பிரதீப் ஆண்டனி.
இந்நிலையில், பெண்களிடம் ஆட்சேபிக்கும் வகையில் பேசினார் உள்ளிட்ட காரணங்களைச் சொல்லி ரெட் கார்டு கொடுத்து அவரை வெளியேற்றிவிட்டனர். பலரும் பிரதீப்பிற்கு ஆதரவாகக் கருத்துக்களைப் பகிர்ந்து வந்தனர். இதனிடையே நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு பிரதீப் அடிக்கடி தனது சமூக வலைதளபக்கங்களில் தன் ரசிகர்களுக்காகப் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப்பதிவில், “இன்ஸ்டாகிராமில் யாரும் எனக்கு ப்ரண்ட் ரெக்வஸ்ட் கொடுக்க வேண்டாம். என்னுடடைய சந்தோஷமானத் தருணங்களை என் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள நான் வைத்திருக்கும் எனக்கான தனிப்பட்ட இடம் இது. இதற்காக, நான் உங்களை என் நண்பர்களாகக் கருதவில்லை என்ற அர்த்தம் கிடையாது. ஆனால், யாரையும் நம்பி என் வாழ்க்கையில் அனுமதிக்கும் இடத்தில் தற்போது நான் இல்லை. சமூக வலைதளங்கள் பாசிடிவ் மற்றும் நெகடிவ் பக்கங்களைக் கொண்டது. தனிப்பட்ட முறையில் ஒருவரை வீழ்ச்சி அடையவும் செய்யும். எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் தாக்கப்படுவதை நான் விரும்பவில்லை.
என் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை நிச்சயம் நான் பகிர்ந்துகொள்வேன். ஆனால் சில விஷயங்களை என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மட்டுமே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ‘crowd funding’-ல் மற்றும் பிற விஷயங்களுக்கு என் பெயரைப் பயன்படுத்தி பணம் கேட்டால் தயவு செய்துக் கொடுக்காதீர்கள். என் கலையை நிரூபிக்க பிறரிடம் பணம் வாங்கும் குணம் எனக்கில்லை. நான் ஏழையாக இருந்தாலும் சில கோட்பாடுகள் எனக்கு இருக்கிறது. அதை நான் மீற மாட்டேன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காகவும், நான் யார் என்பதை வெளிக்கொணர்ந்ததிலும் மகிழ்ச்சி அடைகிறேன். உள்ளே இருந்த ஒவ்வொரு நாளும் என்னுடைய விளையாட்டை ரசித்து விளையாடினேன். நான் நானாகவே என்னைக் காட்டிக் கொண்டதில் அசிங்கப்பட்டுக் கொண்டதில்லை. எனது சக போட்டியாளர்களுக்கு எதிராக நான் செயல்படவில்லை. பிக் பாஸ் விதிகளின்படி நான் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி" என்று பதிவிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.