``மக்களுக்கு மலிவு விலையில் மளிகைப் பொருள்களைத் தரலாமே! - வணிகர் சங்க விழாவில் தமிழிசை அறிவுரை!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைமை அலுவலகக் கட்டடத் திறப்பு விழா சென்னை கே.கே.நகரில் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் மாணவ, மாணவிகள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை, ``இந்தியாவிலேயே இளைய வயது கவர்னர் நான்தான், இந்த வயசுல கவர்னர் ஆகிட்டீங்களே என்ன ரகசியம்னு நிறைய பேர் என்கிட்டே கேட்பாங்க... முதல் ரகசியம், உழைப்பு; இரண்டாவது ரகசியம், கடுமையான உழைப்பு... பெருந்தலைவர் காமராஜர் வழிவந்த சமுதாயத்துக்கு உழைப்பைத் தவிர வேறு எந்த சன்மானமும் தெரியாது. உழைப்பை நாம் கொடுக்கக் கொடுக்க, இந்த சமுதாயம் நமக்கு அதிகமாகவே திருப்பிக் கொடுக்கும்.
நாம் அனைவரும் ஏதாவது ஒரு நல்லதை இந்த சமூகத்துக்கு செய்ய வேண்டும்; இந்த சமூகத்துக்கு வழிகாட்ட வேண்டும். அரசியலில் இருக்கலாம், கொள்கைகள் வேறாக இருக்கலாம். ஆனால், பசி என்று வந்துவிட்டால் அனைவரும் சமம். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் நாமெல்லாம் இணைந்து பணியாற்ற வேண்டும்.
நாம் கடை வைத்திருந்தாலும் சரி, தொழில் செய்தாலும் சரி, மக்களுக்காக சேவை செய்ய வேண்டும். வணிகர்களின் வாழ்வியல், மக்களின் வாழ்வியலோடு இணைந்தது. எளிய மக்களுக்கு வணிகர்கள் உதவும்போது, அவர்கள் மேலும் உயர்வார்கள்.
மலிவான விலையில் தரமான மருந்துகளை வழங்குவதற்காக `பிரதம மந்திரி மலிவு விலை மருந்துத் திட்டத்தை’ (PMBJP) பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்தார். மக்கள் மருந்தகங்களில் 90% மலிவாக மருந்துகள் கிடைப்பதால், மக்களின் மாத மருந்து செலவு வெகுவாகக் குறைந்துள்ளது.
அது போல, சாமானிய மக்கள் பயன் பெறும் வகையில், மலிவு விலையில் மளிகைப் பொருள்களைத் தொகுப்பாக விற்க, மக்கள் மளிகைக் கடைகளை வணிகர்கள் திறக்க வேண்டும். குறைந்த அளவு பொருள்களை வாங்கினாலும் மலிவு விலையில் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுச் செயலாளர் வி.கோவிந்தராஜூலு வரவேற்றார். மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கதுல்லா பேரமைப்பின் கொடியை ஏற்றிவைத்தார். மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையுரை ஆற்றினார்.
இவ்விழாவில் பா.சிவந்தி ஆதித்தனார் வளாக கட்டடத்தை லெஜண்ட் குழுமத் தலைவர் லெஜண்ட் சரவணன் திறந்து வைத்தார்.
யோகரத்தினம் லெஜண்ட் சரவணன் அரங்கத்தை ஸ்ரீகோகுலம் குழுமத் தலைவர் கோகுலம் கோபாலன் திறந்து வைத்தார்.
சிட்டி யூனியன் வங்கி அரங்கத்தை, சிட்டி யூனியன் வங்கி மேலாண் இயக்குநர் என்.காமகோடி திறந்து வைத்தார்.
பத்திரிகையாளர் அரங்கத்தை ஹட்சன் நிறுவன நிர்வாக இயக்குநர் ஆர்.ஜி.சந்திரமோகன் திறந்து வைத்தார். கட்டடத்தின் கல்வெட்டைப் பேரமைப்பின் சென்னை மண்டலத் தலைவர் கே.ஜோதிலிங்கம் திறந்து வைத்தார்.
லெஜண்ட் சரவணன், நலிவடைந்த வணிகர்களின் குழந்தைகள் 9 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
வசந்த் அண்டு கோ நிர்வாக இயக்குநர் விஜய் வசந்த், நலிவடைந்த வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்
பேரமைப்பின் தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.ஆர்.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆச்சி குழுமத் தலைவர் பத்மசிங் ஐசக், மெடிமிக்ஸ் நிர்வாக இயக்குநர் ஏ.வி.அனூப், சரவணா ஸ்டோர்ஸ் எலைட் நிர்வாக இயக்குநர் ஒய்.சிவஅருள் துரை, தொழிலதிபர்கள் எம்.இ.ஜமாலுதின், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ஜோன்ஸ், பேரமைப்பின் இளம் தொழில்முனைவோர் அமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் கே.வி. கதிரவன், எம்.பி. கலாநிதி வீராசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.