IND Vs AUS: `ஆஸ்திரேலியா வென்றதற்கு பாண்டவர்களே காரணம்..! - என்ன சொல்கிறார் கட்ஜு?

இந்தியாவில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவந்த `2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றோடு நிறைவடைந்தது. இதில், நேற்றைய தினம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதிக்கொண்டன.

INDvAUS| இந்தியா Vs ஆஸ்திரேலியா

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. அதைத் தொடர்ந்து தனது அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி, இந்த உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 10 ஆட்டங்களை வென்று தோற்கடிக்க முடியாத அணியாக வலம்வந்த இந்திய அணியை, 240 ரன்களில் சுருட்டியது.

அதன் பின்னர், 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, தொடக்கத்திலேயே அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது. ஆனாலும், தொடக்க வீரராகக் களமிறங்கிய டிராவிஸ் ஹெட் நிலைத்து நின்று விளையாடி 137 ரன்கள் அடிக்க, 43 ஓவர்களிலேயே இலக்கை எட்டி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஆறாவது முறையாக உலகக் கோப்பையைத் தன்வசமாக்கியது ஆஸ்திரேலியா.

உலகக் கோப்பை சாம்பியன் ஆஸ்திரேலியா

குறிப்பாக, டாஸ் வென்றது முதல், இறுதியில் வெற்றிக்கான கடைசி ரன்னை அடிக்கும் வரை இடையில் ஓர் இடத்தில்கூட வெற்றி வாய்ப்பை இந்தியாவின் பக்கம் சாய விடாமல் நிதானமாக விளையாடியது ஆஸ்திரேலியா. உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணிக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்துவர, `தோற்றாலும் பரவாயில்லை நன்றாக விளையாடினீர்கள் என இந்திய அணிக்கும் பலர் ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.

அதேசமயம், `2011-க்குப் பிறகு 12 ஆண்டுகள் கழித்து ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு வந்தும், சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் அருமையான வாய்ப்பை இந்தியா தவறவிட்டது என்ற விமர்சனமும் ஒருபக்கம் வந்துகொண்டுதான் இருக்கிறது.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு

இந்த நிலையில், இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சிலின் முன்னாள் தலைவருமான மார்கண்டேய கட்ஜு, `ஆஸ்திரேலியா வென்றதற்கான உண்மையான காரணம், இதுதான் என்று மகாபாரத கதாபாத்திரங்களான பாண்டவர்களைக் குறிப்பிட்டிருப்பது, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

Australia was the storage centre of the Astras of Pandavas. It was called Astralaya. This is the real reason why they won the World Cup.

— Markandey Katju (@mkatju) November 20, 2023

அதாவது, மார்கண்டேய கட்ஜு தனது X சமூக வலைதளப் பக்கத்தில், `` பாண்டவர்களுடைய அஸ்திரங்களின் சேமிப்பு மையமாக ஆஸ்திரேலியா இருந்தது. அது, `அஸ்த்ராலயா என்று அழைக்கப்பட்டது. உலகக் கோப்பையை அவர்கள் வென்றதற்கான உண்மையான காரணமும் இதுதான்" என்று பதிவிட்டிருந்தார். மார்கண்டேய கட்ஜுவின் இத்தகைய பதிவை இணையதளவாசிகள் பலரும் நகைச்சுவையாக விமர்சித்துவருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.