வெளிநாட்டில் உறவினர்; AI குரல் மோசடியில் ரூ1.4 லட்சம் ஏமாந்த பெண்... உஷார் மக்களே!
செயற்கை நுண்ணறிவு குறித்த தொழில்நுட்பங்கள் ஒருபுறம் மனிதர்களுக்கு உதவி வரும் நிலையில், அவற்றைத் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்வதும் அதிகரித்துள்ளது.
அந்தவகையில் 59 வயதுடைய பெயர் குறிப்பிடப்படாத பெண் ஒருவருக்கு, இரவு நேரத்தில் கனடாவில் இருக்கும் தன் மருமகனிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. நள்ளிரவு ஒரு விபத்து ஏற்பட்டதாகவும், அந்தக் காரணத்திற்காக சிறையில் அடைக்கப்படவிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனைத் தடுக்க உடனடியாக குறிப்பிட்ட தொகையை அனுப்புமாறும், யாருக்கும் சொல்லாமல் இந்த விஷயத்தில் ரகசியம் காக்கும்படியும் கூறியுள்ளார். பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பண பரிமாற்றம் செய்திருக்கிறார், அந்தப் பெண்.
`இது ஃப்ராடு கால் என அவர் உணரும் முன்னரே தனது அக்கவுன்ட்டில் இருந்து 1.4 லட்ச ரூபாய் பணத்தை அனுப்பி இருக்கிறார்.
ஏஐ மூலம் தொலைபேசியில் பேசியவர் அப்படியே தனது வீட்டில் பஞ்சாபியில் எப்படி தானும் தன் மருமகனும் உரையாடிக் கொள்வார்களோ அப்படியே பேசினார் எனவும் அதனால் சந்தேகமே வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து டெல்லியில் உள்ள சைபர் நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தடயவியல் ஆராய்ச்சி மையத்தின் செயல்பாட்டு இயக்குநராக இருக்கும் பிரசாத் பதிபண்ட்லா கூறுகையில், ``பொது தளங்கள் மற்றும் சமூக ஊடக பதிவுகளில் இருந்தும் அல்லது மோசடி குழுவினரால் மேற்கொள்ளப்படும் சேல்ஸ் காலில் இருந்தும் குரல்களை எடுக்கிறார்கள்.

இதனை ஏஐ குரல் இமிடேட்டிங் கருவிகள் மூலமாக வெளிநாட்டில் துயரமான சூழல் அவசர நிலையைப் பிரதிபலிக்கிற வகையில் ஒரு நபரின் குரலைத் துல்லியமாக மாற்றுகின்றனர்’’ என்று தெரிவித்துள்ளார்.
`கனடா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் உறவினர்களைக் கொண்ட தனிநபர்கள் இதுபோன்ற மோசடிகளால்அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.’ என ஏஐ குரல் மோசடிகள் குறித்து சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.